Showing posts with label எழுத்தாளர். Show all posts
Showing posts with label எழுத்தாளர். Show all posts

Thursday, September 27, 2012

மூனா - நேர்காணல்

ஒரு புதுச்சூழலில் எங்கள் பயணம் தொடங்குகிறது...
பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட செல்வகுமாரன் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி.

பொங்குதமிழுக்காக இவர் வரைந்த கருத்துப்படங்கள் சமகால அரசியல் வரலாற்றின் ஓவியப் பதிவுகளாக பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக 1983, 2012 ஆண்டுகால சிறைச்சாலைப் படுகொலைகளை மையப்படுத்தி இவர் வரைந்த கருத்துப்படம் 150 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களின் முகப் புத்தங்களில் பிரதிசெய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி உள்ளன. இவரின் 'தாயென்னும் கோயில்' நாடகம் உலகளாவிய தமிழர்களுக்கிடையே ஐபிசி வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் தெரிவாகி முதலாவது பரிசான தங்கப்பதக்கத்தை வென்றெடுத்திருக்கிறது.

செல்வகுமாரனின் முழுமையான படைப்பாற்றலை இந்நேர்காணல் வெளிக்காட்டும் என நம்புகிறோம்.

ஓவியத்துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது என்பது பற்றிச் சொல்லுங்கள்?
கல்கி, குமுதம், விகடன், ராணி சஞ்சிகைகளில் இருக்கும் சித்திரங்களைப் பார்த்து எனது அண்ணன்கள் தங்களது அப்பியாசப் புத்தகங்களில் கிறுக்கும்போது எனக்கும் வரையும் ஆவல் தொற்றிக் கொண்டது. அதுவே பாடசாலையில் ஓவிய வகுப்பில் எனது திறமையை வளர்க்கக் காரணமாயிற்று. பின்னாளில் எனது வரைதலுக்கு அறிவூட்டி, வழிகாட்டி, நெறிப்படுத்தியது ஓவியர் ஏ.மார்க் அவர்கள். எனது நகரில் உள்ள பிரபலமான ஹாட்லிக் கல்லூரியில்தான் அவர் ஓவிய ஆசிரியராக இருந்தார். அந்தப் பாடசாலையின் மாணவர் விடுதிக்கும் அவரே பொறுப்பாளராகவும் இருந்தார். அந்த விடுதியில் விசாலமான அறையொன்றில் மாலையில் ஆறிலிருந்து பத்துவரை அவரிடம் ஓவியம் பயில எனக்கு வாய்ப்புக் கிட்டியது. நிறையப் புத்தகங்கள் வைத்திருப்பார். வாசிக்கத் தருவார். அதில் உள்ள படங்களை வரையப் பயிற்சியும் தருவார். மரங்களையும், மாடுகளையும், மனிதர்களையும் அப்படியே கீறுவதில் அர்த்தமில்லை. அவற்றில் நவீனங்களைப் புகுத்தி பார்ப்பவர்களுக்குப் பலவற்றைச் சொல்லவைக்கும் சித்திரங்களை வரைய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லியும் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் College of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். College of fine arts இல் நுளைவதற்கு எனக்கு எல்லாத் தகுதியும் இருந்தும் அங்கு சென்று படிப்பதற்கு எனது வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

எதற்காக உங்கள் வீட்டில் அனுமதி தர மறுத்தார்கள்?
ஓவியத்துறையில் பெரிதும் சாதிப்பதற்கோ, வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கோ இலங்கையில் வாய்ப்பில்லை என்பது எனது வீட்டாரினது கருத்தாக இருந்தது. ஒருவிதத்தில் அது உண்மையானதாகவே இருந்தது. தென்னிந்திய சஞ்சிகைகள், அதில் வரும் கதைகள் அவற்றிற்கான ஓவியங்கள் எல்லாமே அங்குள்ளவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. சாமி அறையில் இருக்கும் கடவுள் படங்கள், சிகை அலங்கார நிலையங்களில் தொங்கும் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களின் படங்கள் எல்லாமே தென்னிந்தியாவில் இருந்து வந்து எம்மவர்களை ஆக்கிரமித்திருந்தபோது பெரிதாக இவன் என்ன சாதிக்கப் போகிறான் என்ற நிலையே அன்று மேவி இருந்தது. இதுவே என்னைப் போன்றவர்களுக்கு அன்றைய காலத்தில் பெரிதும் பின்னடைவாகப் போயிற்று.

கலை, விளையாட்டுகள் எல்லாம் சோறு போடாது என்ற அன்றைய தமிழரின் நிலைப்பாட்டில் நீங்களும் மாட்டிக் கொண்டீர்கள். இதனால் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படவில்லையா?
நான் மேற்கொண்டு ஓவியத்துறையில் திறமையை வளர்க்க முடியாமல் போனதில் மார்க் மாஸ்ரருக்குத்தான் என்னை விட கவலைகள் அதிகமாக இருந்தது. தனது கவலையை என்னிடம் நேரடியாகவே அவர் பகிர்ந்து கொண்டார். ஆனாலும் பெற்றோருக்கும், பாதுகாவலர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்று ஆசிரியர் நிலையில் இருந்து கொண்டு எனக்குத் தனது அறிவுரைகளையும் தந்தார்.

பின்னாளில் மார்க் மாஸ்ரர் மாற்றலாகி யாழ்ப்பாணம் போனதன் பின்னர், நானும் ஓவியன் எனும் எனது எண்ணத்தை மூடிவைத்து விட்டு எனது வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் நுளைந்து கொண்டேன்.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?
அற்புதமான ஓவியர் என்பதையும் தாண்டி அவர் ஒர் அன்பான மனிதர். பேச்சாலோ, செயலாலோ எவரையும் நோகடிக்கத் தெரியாதவர். எவ்வித பாகுபாடுமின்றி எவருக்கும் ஓவியத்தைப் பற்றி தன்னால் முடிந்தளவுக்குச் சொல்லித் தந்தவர். பிக்காசோவின் ஓவியங்களில் மனதைக் கொடுத்தவர். விட்டால் பல மணி நேரம் பிக்காசோவின் ஓவியங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பவர். நவீன ஓவியங்கள் பெரிதும் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்று நினைத்தவர். அதற்காகவே தனது படைப்புக்களைத் தந்தவர். போதுமான வசதிகள் கிட்டாத போதும் சளைக்காமல், தேயிலை அடைத்துவரும் பலகைப் பெட்டிகளைப் பிரித்தெடுத்து அதில் ஓவியங்களை வரைந்து வைத்தவர். அவருக்கு இருந்த திறமை பெரிது. இங்கு, வெளிநாடுகளில் வந்து பார்க்கும் போதுதான் மார்க் மாஸ்ரர் என்ற அற்புத ஓவியரின் மதிப்பு புரிகிறது.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் நினைவில் ஏதாவது...?
நிறையவே இருக்கின்றன. சொல்லப் போனால் அதற்காகவே ஒரு பதிப்பு போடலாம். எனது நினைவுக் குறிப்பில் அவரைப் பற்றி இரண்டு விடயங்களைப் பதிந்துள்ளேன். அதிலொன்று...
'அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது.

இது சிவனின் உருத்திர தாண்டவம். கோபத்தையும், பயத்தினையும் இணைத்துக் கொடுப்பதற்கு இந்த வர்ணம்தான் சிறந்தது. போதாதற்கு சிவனின் நடனத்தை ஒரு சுடலையில் நடப்பதாக வரைந்திருக்கின்றேன். பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இங்கே சிகப்புத்தான் சிறந்தது. ஆனாலும் எனக்கு சிகப்பு பிடிக்காது.

அமைதியாக ஆனாலும் விளக்கமாக அவரிடமிருந்து பதில் வந்தது. ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.
பார்க்கும்போது முட்ட வரும் காளை மாதிரியிருக்கும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அந்தக் காளைக்குள் ஏ.மார்க் என்ற எழுத்துக்கள் இருக்கும். AM என்ற எழுத்துக்களின் மேற்பகுதி குத்தவரும் கொம்புகளாகவும் A யின் கீழ்ப்பகுதி இரண்டும் முன்னம் கால்களாகவும் இருக்கும். இறுதியாக வரும் M காளையின் வாலாகவும் பின்னங் கால்களாகவும் இடையில் வரும் AR கச்சிதமாக அதன் உடலாகவும் அமைந்து இருக்கும். இத்தனையும் அடக்கி அற்புதமாக மரத்தில் காளை ஓவியத்திற்குள் தனது பெயரை செதுக்கியிருந்தார். அதுவே அவரின் இலச்சினையாகவும் இருந்தது. தான் வரையும் ஓவியத்தில் அந்த முத்திரையையும் அப்போ அவர் பதித்து வந்தார். தனது புத்தகங்களின் முதற்பக்கத்திலும் இந்த காளை முத்திரையை பதித்திருப்பார்.

அப்பொழுது தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். அந்த கிளர்ச்சி இளைஞர்கள் கன்னத்தில் கிருதாவும் குறுந்தாடியும் வைத்திருந்தார்கள். அது அந்த நேரத்து நாகரிகமாகவும் இருந்தது. தென்னிலங்கைக்கும் வடஇலங்கைக்கும் சம்பந்தமில்லாத போராட்டமது. ஆனாலும் முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டமிருக்கும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் விடுதியில் சனி, ஞாயிறுகளில் மாணவர்கள் தங்குவதில்லை. அதனால் மார்க் மாஸ்ரரும் வார விடுமுறைக்காக தனது ஊருக்குப் போய்விடுவார்.

ஒரு சனிக்கிழமை காலை, நகரம் களை கட்டியிருந்த நேரம், நகரத்தின் மத்தியில் இருந்த பஸ் நிலையத்தில் தனது ஊருக்குப் போவதற்காக மார்க் மாஸ்ரர் காத்திருந்தார். கூடவே நானும் அவருடன் நின்றிருந்தேன். அப்பொழுது ஜீப் வண்டியொன்று பஸ் நிலையத்துக்குள் வந்து சினிமா பாணியில் கிறீச்சிட்டு நின்றது. அதன் முற்பக்கத்தில் இருந்து காவல்துறை அதிகாரி இறங்கினான். இறங்கியவன் சுற்று முற்றுப் பார்த்தான். அவனுக்குத் தன் பெருமையை யாருக்காவது காட்டவேண்டும் அல்லது யாரையேனும் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்க வேண்டும். சிறிது நேர நோட்டத்துக்குப் பின் எங்கள் இருவரையும் நோக்கி வந்தான். எனக்கு அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பயப்படாதையும் என்று மார்க் மாஸ்ரர் எனக்கு ஜாடை காட்டினார். நேராக வந்தவன் மார்க் மாஸ்ரரை நெருங்கி நின்றான். அப்பொழுது மார்க் மாஸ்ரர் கன்னத்தில் நீளமாகக் கிருதா வைத்திருந்தார். அதைக் காட்டி என்ன என்று கேட்டான். மார்க் மாஸ்ரர் சிரிப்பால் பதில் சொன்னார். காவலதிகாரி அலட்சியமாக அவரைப் பார்த்தான். விபரீதமொன்று நிகழ வாய்ப்பிருப்பதாக மனது அச்சப்பட்டது.

காவலதிகாரி ஜீப்பிற்குப் சென்று திரும்பி வந்தான். அவனது கையில் இப்பொழுது குறடு ஒன்று இருந்தது. மார்க் மாஸ்ரரின் நாடியைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பினான். குறட்டையெடுத்து மார்க் மாஸ்ரரின் கன்னத்து கிருதா மயிர்களைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். மார்க் மாஸ்ரர் எதுவித சலனங்களையும் காட்டாது பேசாமல் இருந்தார். ஒரு மயிரை இழுத்துப் பிடுங்கும் போதே எவ்வளவு வேதனையிருக்கும்.

அந்த மிருகம் எதுவுமே செய்யாத அந்த அமைதியான மனிதனை வேதனைப்படுத்தி இன்பம் கண்டு கொண்டிருந்தது. எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் நினைவில் வந்தன.

'நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன?'

’சேர்.. அவர் ஒரு மாஸ்ரர்’ என்னையறியாமல் வார்த்தைகள் வந்தன. சிறிது நேரம் எங்கள் இருவரையும் அந்தக் காவலதிகாரி பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்.

பஸ் வந்தது. ஒன்றுக்கும் யோசியாதையும் சொல்லிவிட்டு மார்க் மாஸ்ரர் பஸ்ஸில் ஏறினார்.

ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

நீங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள நிலைமைகளை எப்படி எதிர்கொண்டிர்கள்? எப்போது ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தீர்கள்?
நிறையவே சிரமப்பட்டிருக்கின்றேன். படங்கள் வரைவதால் பெரியளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. மாறாக நண்பர்கள் போராளிகளாக இருந்ததால் எப்பொழுதும் எனது நிலையில் அச்சமே மேலோங்கி இருந்தது.
அதில் குறிப்பாக கணேஸ் மாமாவைச் சொல்லலாம். கணேஸ் பொலிகண்டியைச் சேர்ந்தவன். அவன் இந்தியா இலங்கை என ஓடிக் கொண்டிருந்தான். ஊரில் இருப்பானாயின் என்னைச் சந்திக்க வந்து விடுவான். இவனது தொடர்பே என்னை பெரிதும் இயக்கத்துக்குள் இழுத்து விட்டது.

இராணுவத்திற்கு தகவல் தருவோர் எனக்கு அருகாமைலிலேயே குடியிருந்தார்கள். அவர்களில் இருவரை மாணவர் அமைப்பு போட்டுத் தள்ள, பிரச்சினை பெரிதாகிவிட்டது. எந்த நேரமும் இராணுவம் ஊருக்குள் நுளைந்து விடும் அபாயம் இருந்தது.

கணேஸ் சொன்னான், இந்தியாவுக்கு கொண்டு போய் விடுகிறேன் வந்து விடு என்று. சொன்னவன் அன்று அவசர வேலையாக அக்கரைக்குப் போய் விட்டான். தவித்துக் கொண்டிருந்த எனக்கு, எனது பாடசாலை நண்பன் சிறீராம் ஒரு வழி சொன்னான். கிழக்கு யேர்மனிக்கு விசா தேவையில்லை. அங்கு போனால் மேற்கு யேர்மனிக்கு ரயில் ஏறி விடலாம் என்ற அவனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டேன். அவனே ரிக்கெற் செய்தும் தந்தான். அவன் சொன்ன வழியில் யேர்மனிக்கு 1984 நவம்பரில் வந்து சேர்ந்தேன். இதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

அக்கரைக்குப் போன கணேஸ் திரும்பி வந்து நான் யேர்மனி போனதை அறிந்து பெரிதும் கவலைப்பட்டானாம். அடுத்த தடவை அவன் கடலில் பயணம் செய்யும்போது கடற்படை தாக்கியதில் 24 பேருடன் சேர்ந்து இறந்து போனான். அவன் இறந்ததை எனது மகனே எனக்கு அறிவித்திருந்தான்.

மூன்று மாவீரர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடியுள்ளீர்கள். அவர் குறித்தும் உங்கள் குழந்தைகள் தொடர்பிலும் சொல்லுங்களேன்?
நான் யேர்மனிக்கு வந்த பின்னரே அவர்கள் போராளிகளானார்கள். அவர்களது தந்தையார் 58 கலவரத்தில் தனது உடைமைகளை இழந்திருக்கிறார். 76இல் மீண்டும் உடைமைகள் இழந்து கப்பல் ஏறி காங்கேசன்துறையில் வந்து இறங்கியிருக்கிறார். 83 இல் கண்டியில் பணிபுரியும் போது தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இவை எல்லாம் சேர்ந்து அவர்களை இயக்கத்தின் பால் இழுத்துச் சென்றிருக்கலாம்.
இதில் மூத்தவர் பிரேமராஜன் ஒரு போராளிக் கவிஞன்.

அடுத்தது எனது மனைவி சந்திரவதனா. பெண் விடுதலை பற்றி அதிகம் எழுதியவர். எழுதிக் கொண்டிருப்பவர். அவரின் தங்கை சந்திரகுமாரி அதிகம் பேசப்படும் ஒரு எழுத்தாளர். ஐபிசி வானொலி அறிவிப்பாளர் மற்றும் சமுத்திரா என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

எனது பிள்ளைகள் என்று பார்க்கையில், அவர்களுக்கும் தமிழரது நிலமைகள் தெரிந்திருக்கிறது. 2002இல் வன்னிக்கு சென்று சமூக சேவைகள் செய்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் சென்றதால் நிலமைகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது மூன்று பிள்ளைகளும் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

இதில் இளையவன் யேர்மன் பத்திரிகை ஒன்றில் நிருபராகவும், எடிட்டராகவும் பணியாற்றுகிரான். அவனுக்கும் கட்டுரைகள் நன்றாக எழுத வருகிறது.

எனது சகோதரன் நித்தியகீர்த்தி, நியூசிலாந்து, அவுஸ்திரெலியா தமிழ்ச் சங்கத் தலைமைப் பதவியில் இருந்திருக்கிறார். மேலும் அவர் ஒரு எழுத்தாளரும் கூட.

எனது சகோதரியின் மகன் போராளியாக இருந்திருக்கிறான். அவனை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. இந்தச் சம்பவம் பற்றி எனது சகோதரன் நித்தியகீர்த்தியும், மனைவி சந்திரவதனாவும் தங்களது பார்வைகளில் சிறுகதைகளாகப் பதிந்திருக்கிறார்கள்.

எப்போது உங்கள் முதல் ஓவியத்தைதை வரைந்தீர்கள்?
எனது இளவயதிலேயே நான் ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டேன். அவை ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பிரசுரமாகியுமுள்ளன.

எப்போது உங்கள் முதல் கார்ட்டூனை வரைந்தீர்கள்? அதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது?
இதற்கு நான் ஐபிசி வானொலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஐபிசி தமிழ் வானொலியில் முன்னர் பணியாற்றிய அறிவிப்பாளர்களை தட்டிக் கொடுக்க, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி சம்பந்தமாக கருத்துக்களை கேலியாக வரைந்து அனுப்பிக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த அன்றைய ஆங்கிலச் செய்தி வாசிப்பாளர் செல்வி.பவானி பாலசுந்தரம் (வினோ), ஏன் நீங்கள் பத்திரிகைக்கு வரையக்கூடாது என்று கேட்டதோடு மட்டுமன்றி இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.
தமிழ் கார்டியனில் அரசியல் துறையின் பொறுப்பை ஏற்றிருந்த திரு.சுதன் நடராஜாவின் அரசியல் கருத்துக்களுக்கு ஏற்ப எனது அரசியல் கிறுக்கல் ஆரம்பமானது.

இதில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்றைய காலத்தில் ஐபிசியில் பணியாற்றிய அத்தனை பேரையும் கேலிச்சித்திரங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பணிப்பாளர்களாக இருந்த திரு. தாசீசியஸ், திரு.றஞ்சித் அவர்களையும் நான் விட்டு வைக்கவில்லை. எல்லோரும் ஓட்டுமொத்தமாக அந்தக் கேலிச் சித்திரங்களை வரவேற்றார்கள். என்னைத் தட்டிக் கொடுத்தார்கள்.

ஆக மொத்தம் புலம்பெயர் தமிழரில் ஒரு கேலிச்சித்திரக்காரனை உருவாக்கிய பெருமை அன்றைய ஐபிசி வானொலிக்கே உரியது.

உங்களது படைப்புகளை ஊடகங்கள் தவிர்ந்த வேறு தளங்களில் மக்களின் பார்வைகளுக்கு வைத்துள்ளீர்களா?
ஜேர்மனிக்கு வந்த ஆரம்பகாலங்களில் எமது நாட்டின் அவலங்களை வெளிப்படுத்தக் கூடிய ஓவியங்களை நான் அவ்வப்போது வரைந்து கொண்டிருந்தேன். அந்த ஓவியங்களை நான் தங்கியிருந்த நகரிலும், எனது நகரத்தை ஒட்டிய மற்றைய நகர்களிலும் ஜேர்மனிய மக்களின் பார்வைகளுக்கு வைத்து கருத்தரங்குகளும் செய்துள்ளேன்.
ஆனாலும் அந்த நேரத்தில் அரசியல் தஞ்சம் கோரியோர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளின் மத்தியில் வெளி நகரங்களுக்குந் சென்று பெரியளவான காட்சிப்படுத்தல்களை செய்ய முடியாதிருந்தது. பிற்பட்ட காலங்களில் அரசியல் அமைப்புகளின் செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டிருந்ததால் அவர்களின் நிகழ்வுகளில் எனது ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

கேலிச்சித்திரங்களை வரைவதால் விமர்சனங்களுக்கோ, பாராட்டுதல்களுக்கோ ஆளாகியிருக்கிறீர்களா?
பெரியளவில் விமர்சனங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பது உண்மை. பாராட்டுதல்கள் அவ்வப்போது வருவதுண்டு.
யேர்மனியில் ஒரு தடவை திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கலந்து கொண்ட அரசியல் கூட்டத்திற்குப் போயிருந்தேன். கூட்டத்திற்கு முன்னர் அவர் தங்கியிருந்த அறைக்குள் செல்லும் வாய்ப்பு எனக்கும் எனது மனைவிக்கும் கிட்டியது.
உள்ளே போனோம். அரங்கத்திற்குள் இருக்க வேண்டிய பாதிப்பேர் அங்கே நிறைந்திருந்தார்கள். ஆனாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது மனைவியின் சகோதரனை அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடன் எனது மனைவி உரையாடும் போது இவர் எனது கணவர் ஒரு கார்டூனிஸ்ட் என்று அறிமுகம் செய்தார். உடனடியாக அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தை ’மூனா'. இவர் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நாள் உங்களையும் எனது கிறுக்கலுக்குள் கொண்டு வருவேன் என்றேன். 'ஏன், இப்பொழுதே கொண்டு வா' என்று பேப்பரையும் பேனாவையும் வரவழைத்துத் தந்தார். அப்பொழுது கிடைத்த இரண்டு நிமிடத்தில் நான் கிறுக்கித் தர அதற்குக் கையெழுத்திட்டு, பாராட்டி விட்டுப் போனார்.
அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது நேரம் அதிகம் எடுத்து அவரை வர்ணத்தில் வரைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த எண்ணம் மட்டும் எனக்குக் கை கூடவில்லை. அவர் அமரத்துவம் அடைந்தபோது கறுப்பு வெள்ளையில் தமிழ்கார்டியனில் முழுப் பக்கத்தில் அவரை வரைந்த போது மனது பெரிதும் சிரமப்பட்டது.

போரும் படுகொலைகளும் நிகழ்ந்த காலத்தில் ஒரு ஓவியராக உங்கள் மனநிலை எப்படியிருந்தது? அந்த உணர்வுகளை எப்படி ஒவியங்களில் வெளிப்படுத்தினீர்கள்?
மற்றவர்களைப் போல் எனக்கும் கவலைகள் அதிகமாக இருந்தது. ஒவ்வொன்றாக இழக்கும் போதும், அவலங்களைக் கேட்கும்போதும் யாரேனும் சிங்கள அரசைத் தட்டிக்கேட்க மாட்டார்களா? இந்த அவலங்களை நிறுத்த மாட்டார்களா என்ற நப்பாசை என்னுள் இறுதி வரை இருந்தது. அதற்காகவே பல படங்களை வரைந்திருந்தேன். ஊர்வலங்களுக்கெல்லாம் நான் கீறிய படங்கள் போனது. ஆனால் எங்களுக்கான முடிவுதான் மாறிப் போயிற்று. அந்த அவலமான முடிவோடு நானும் ஒரு முடிவுக்கு வந்தேன்
'மூனா' வையும் இத்தோடு முடித்து விடுவதென்று. அதன்படி 'இணையில்லாதவன்' என்று தலைப்பிட்டு ஒரு படம் வரைந்தேன். அத்தோடு எனது கிறுக்கல் ப்ளாக்கையும் மூடிவைத்து விட்டேன்.

அதன் பிறகும் நீங்கள் கேலிச்சித்திரங்கள் வரைகிறீர்களே?
உண்மை. இது ஒருவருடைய வேண்டுகோளுக்காக. நண்பர் ஒருவர் பொங்குதமிழ் இணையத்துக்கு கேலிச் சித்திரங்கள் வேண்டும் என்றார். மறுக்க முடியவில்லை.

அத்தோடு புதிய வழியில் புதுச்சூழலில் எங்களது பயணம் தொடங்குகிறது. நானும் சேர்ந்து பயணிப்பதுதானே முறை. ஆனால் இம்முறை 'மூனா' போய் 'தூனா' வந்திருக்கிறார்.

ஒரே பொருளில் அமைந்த அனுபவங்களை வித்தியாசமாகப் படைப்பாக்குவதில் உங்களின் அனுபவங்கள் எப்படி இருக்கின்றது?
எப்பொழுதும் ஒரே பொருள்தான். சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழரை இல்லாதொழிக்க வேண்டும், என்பதுதான் பொருளாக இருக்கிறது. லலித் அத்துலத்முதலி தொட்டு கோத்தபாய ராஜபக்ச வரை ஒரே கொள்கையைத் தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரே பொருளை வைத்துக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் வரும் போது நாங்களும் வெவ்வேறு முறையில் படைப்பாக்க வேண்டி இருக்கிறது.

இதற்காக நிறையவே சிந்திக்க வேண்டி இருக்கிறது. செய்திகளை, கட்டுரைகளை முழுவதுமாக உள்வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலை நேரங்களில் கூட இதே சிந்தனையுடனே இருக்க வேண்டிய நேரங்களும் இருந்திருக்கிறது. ஆனாலும் ஒன்றை உருவாக்கி அதனை ஆசிரியர் குழு ஏற்றுக் கொள்ளும் போது ஒரு நிறைவு இருக்கிறது. அதுவே அடுத்த படைப்புக்கு தானாக அழைத்துச் செல்லகிறது.

ஓவியங்கள் தவிர உங்களுக்கு நாடகத்தறையிலும் ஈடுபாடு இருக்கிறதே? இருந்தது என்பதே சரியாக இருக்கும்.
திருமதி சந்திரா இரவீந்திரன் ஐபிசி வானொலிக்கு தயாரித்து வழங்கிய 'சமுத்திரா' நிகழ்ச்சியை பாராட்டி ஒரு கேலிச் சித்திரம் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சித்திரம் நகைச்சுவையாக இருக்கிறது. 'சமுத்திரா'வுக்கு ஆக்கங்கள் தேவை. நகைச்சுவையாக ஒரு நாடகம் எழுதிப் பாருங்களேன் என்று அவர் கேட்டு வைக்க, எழுத ஆரம்பித்தேன். ஐம்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதி இருப்பேன் என நினைக்கிறேன்.

உங்கள் இலட்சியம், கனவு குறித்துச் சொல்லுங்கள்?
எல்லோரைப் போலவும் ஒரே கனவு, ஒரே நினைவுதான். தமிழருக்கு ஒரு தீர்க்கமான தீர்வு வர வேண்டும் என்பதே அது. அன்று ஆறுதலாக இருந்து மகிழ்ச்சியாக ஒரு படம் கிறுக்க வேண்டும். நிம்மதியாக இருக்கும்.

நேர்கண்டவர் : இளந்திரையன்
நன்றி : பொங்குதமிழ்

Tuesday, August 05, 2008

வாசுகி கணேஷானந்தன்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவின் ஹார்வார்ட் கல்லூரியில் பயின்று தற்போது நியூயோர்க்கில் வசித்துவருபவருமாகிய இளம் பெண் எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தன் 'லவ் மேரேஜ்'( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் வெளியான இந்த ஆங்கில நாவல் இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று.

இலங்கை இனப்பிரச்சினையை பின்புலமாகக் கொண்டு கடந்த ஒரு சில தசாப்தங்களில் எழுதப்பட்ட சில நாவல்கள் வரிசையில் இதுவும் வருகிறது.

கதை அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண்ணான யாழினியையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகாலம் போராளியாக இருந்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் வாழ்க்கையின் இறுதி நாட்களில், கனடாவுக்கு செல்ல புலிகளால் அனுமதிக்கப்படும் அவரது மாமா குமரன் ஆகியோரையும் சுற்றிச் சுழல்கிறது.

இந்தக் கதை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை, ஆயுதப்போராட்டம், இனப் பிரச்சினையின் சமூகத்தாக்கம் ஆகியவற்றை வாசுகி ஆராய்கிறார்.

Saturday, June 14, 2008

சிவலிங்கம் சிவபாலன்

எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் (கட்டட வரையுனர்) இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள நாயன்மார்கட்டு கிராமத்தில் 1954ல் பிறந்து, வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர்.

1985 இல் பிரான்சிற்கு புலம் பெயர்ந்தார். பழகுவதற்கு இனிமையானவர். எவரையும் எளிதில் நண்பராக்கிக் கொண்டு விடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி. இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.

ஊரில் இருந்த காலத்திலேயே தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை விரிவு படுத்தினார். ஈழமுரசு, எரிமலை, உயிர்நிழல், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வந்துள்ளார். 1998 ல் ‘சுரங்கள் மாறி……’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். பலரையும் நேசித்தார். எழுத்தாளர் கலாநிதி சொக்கன் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரின் மாணவன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அதனால்தான் காற்றுவெளி நூலகம் வெளியிடும் இலக்கியப்பூக்கள் எனும் தொகுதிக்கு கலாநிதி சொக்கன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதித் தந்துள்ளார்.

நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் இங்கிலாந்திற்கு வந்த பின்பு ஒரு இலக்கிய வெறுமையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். அதனால்தானோ என்னவோ காற்றுவெளி நூலகத்தை தன் வாசிப்புக்காகப் பயன்படுத்த தொடர்பு கொண்டார். சில நாட்களிலேயே இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னரும் இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்புகளை அதிகமாகவே பேணிவந்தார். இலக்கியம் பற்றி பேசுவதற்கான தன் ஆதங்கங்களை, ஆர்வத்தை எழுத்தாளர்களுடன் பேசும் போது வெளிப் படுத்தினார். அவரின் வார்த்தைகளில் மெல்லியதான சோகம் இழையோடியதையும் எம்மால் உணர முடிந்தது. சிறுவயதின் நாடக முயற்சிகளை மீட்டுப் பார்த்து இப்பொழுது அது முடியாத ஏக்கம் எமக்குப் போலவே அவருக்கும் இருந்துள்ளது. தன் படைப்புகள் முழுவதையும் தொகுத்து ஒரு நூலாகவும், தனித்து ஒரு நாவலும் எழுதத் திட்டமிட்டிருந்தார்.

இவர் 22.05.2008 லண்டனில் காலமானார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்ற இவருக்கு திடீரென இருதய வருத்தம் ஏற்பட்டது. அதனால் உடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பின்பு அவர் சுகமடைந்து வந்தார். ஆனாலும் 22ம் திகதி திடீரென ஏற்பட்ட மயக்கம் அவரை மீளாத்துயிலில் ஆழ்த்திவிட்டது.

கடந்த 10ம் திகதி (10 - 05 - 2008) மாலை லண்டனில் நடைபெற்றஇ வி. ரி. இளங்கோவன் அவர்களின் 'இளங்கோவன் கதைகள்" சிறுகதைத் தொகுப்பு அறிமுகவிழாவிலும் இவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதுவே இவர் கலந்துகொண்ட இறுதி இலக்கிய நிகழ்வாகும். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப்பல படைப்புகளைத் தந்த சிவபாலன் ஐரோப்பாவில் இயங்கும் பல்வேறு தமிழ் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டவர்.

புன்சிரிப்புத் தவழும் அழகான தோற்றமும், எவருடனும் அன்பாக இனிய குரலில் பேசும் சுபாபமும் கொண்ட அவரை இலக்கிய நெஞ்சங்கள் எவரும் எளிதில் மறந்திட முடியாது.

தகவல் - பதிவுகள்

Monday, May 19, 2008

தெ. நித்தியகீர்த்தி

தெ. நித்தியகீர்த்தி இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

இவர் இலங்கையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி கிழக்கைச் சேர்ந்தவர். தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.

இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள்
மீட்டாத வீணை (புதினம்), (கமலா வெளியீடு, முதற் பதிப்பு - மார்கழி 1974, பருத்தித்துறை, சிறீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்)


இவரது நாடகங்கள்

ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
தங்கப் பதக்கம்
தங்கம் என் தங்கை
நீதி பிறக்குமா?
பாட்டாளி
பிணம்
மரகதநாட்டு மன்னன்
வாழ்வு மலருமா

நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
கூடு தேடும் பறவைகள்
மரணத்தில் சாகாதவன்

அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
பறந்து செல்லும் பறவைகள்
ஊருக்குத் தெரியாது
வேங்கை நாட்டு வேந்தன்

இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.

Wednesday, January 30, 2008

செ.யோகநாதன்

செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர்.

கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். பின்னர் தமிழகப் பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளிவந்து விட்டது. அதன் பின்னர் “கண்ணீர் விட்டே வளர்த்தோம்' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.


குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய இவர் அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். இவர் தமிழகத்திலும் நன்கு அறியப் பட்டவர். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குனராகவும் செயற்பட்டார்.

தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு அவர்களை தமிழக வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியவர். இவரது படைப்புக்களுக்கு இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் பரிசில்களும், விருதுகளும் கிடைத்தன.

இவர் தனது 66 ஆவது வயதில் 28-01-08 திங்கள் அன்று யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமானார்.

இவர் இதுவரை எண்பத்திநான்கு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவரது நூல்களில் சில
யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)

Wednesday, January 02, 2008

இளங்கீரன்

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்!

- த.சிவசுப்பிரமணியம் -

ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது.

அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின் வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்துள்ளமையே இதற்கான காரணமாகும். 1950 களிலிருந்து 1970கள்வரை படைப்பிலக்கியத் துறையில் இளங்கீரன் மும்முரமாகச் செயற்பட்டார். எழுத்தையே வாழ்வாகக் கொண்ட ஒருவராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இக்கால கட்டத்தில் அவரது எழுத்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ஈழத்தின் சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டிய விருத்தியினைக் காட்டி நிற்கின்றன. இளங்கீரன் பல்வகைப் பரிமாணங்களையுடைய ஒருவராக அறியப் படுகின்றார். ஒரு சிறுகதை எழுத்தாளராக, நாடகத்துறை சார்ந்தவராக கட்டுரையாளராக, பத்திரிகை ஆசிரியராக, சஞ்சிகை இயக்குநராக, திறனாய்வாளராக என்றெல்லாம் தடம் பதித்தவராக அறியப்பட்டாலும் அவர் சிறந்த நாவலாசிரியராகவே முத்திரை பதித்துள்ளார். இருபதுக்கும் அதிகமான நாவல்களைப் படைத்த இவர் சமூக உணர்வின் வளர்ச்சியையும் சமூக மாற்றத்திற்கான விளைவையும் அடையாளம் காட்டக் கூடிய வகையிலேயே படைப்பாற்றல் மிக்கவராக வெளிவருகின்றார்.

இவரது முதலாவது நாவலாகிய `நீதியே நீ கேள்' வெளிவந்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுக் கொண்டது.

`அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' என்ற இவரது நாவல் வீரகேசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங் காட்டும் ஒரு காலத்திற்குரியது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்துண்ணும் தேவையுள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக் கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய இன்றைய நவ காலனித்துவச் சூழலிலும் இன்னும் யதார்த்த பூர்வமான சித்தரிப்புக்களாகவே உள்ளன. இந்நாவல் பெண்கள் குறித்த முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்ற வகையில் வர்க்க உணர்வு குன்றாத நோக்குடன் வரையப் பட்டது. ஈழத்தின் நாவல், இலக்கிய வரலாற்றில் முதன்மை நிலையில் வைத்துக் கணிக்கப் படுபவர்களுள் ஒருவராக எழுத்தாளர் இளங்கீரன் மதிக்கப் படுகின்றார். இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின் 2000 ஆம் ஆண்டு நூலுருப் பெற்றுள்ளது. கடந்த தசாப்தங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் மத்தியில் நிலவிய வர்க்க ஒற்றுமையையும் உறவையும் இந் நாவலூடாகத் தரிசிக்கும் போது, இன உறவின் விருத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்திலும் நம்பிக்கையின் நூலிழைகள் ஊடாடுவதனை உணர முடிகிறது.

இவர் எழுதிய `தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்', `ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்', `பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துகளும்' ஆகியன முக்கிய வரலாற்றுப் பதிவுகளை உள்ளடக்கியவையாக இன்று இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் வேண்டப் படுவனவாக அமையும்.

1950 க்கு முன் இந்தியாவைத் தாய் நாடாகவும், இலங்கையைச் சேய் நாடாகவும் இலங்கைத் தமிழர் கருதி வந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட உணர்வில் இந்தியாவில் இருந்து வெளிவரும் நூல்களையும், சஞ்சிகைகளையும், பத்திரிகைகளையுமே விரும்பிப் படித்தனர். ஆனால் இவை ஈழத்தமிழரின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள், அபிலாசைகள், சிந்தனைகள் ஆகியவற்றைச் சித்தரிப்பதாக அமையவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வேண்டிய ஆதங்கம் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் வலுப்பெற்று நின்றது. ஈழத்து இலக்கியத்திற்குப் புதிய படைப்பிலக்கியப் பாதை வேண்டுமென்பதால் அதை நோக்கிய நகர்வுகள் இடம்பெறலாயின. அந்தத் தளத்தில் முன்னின்று இளங்கீரன் துணிந்து செயற்பட்டார்.

1954 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப் பட்டது. இச் சங்கம் நடத்திய இலக்கிய இயக்கத்தினூடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்பந்தமாகவும் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது. எனவே, ஈழத்தின் படைப்பிலக்கியம் தமிழ் எனும் பொதுப் பரப்புக்குள் அடங்கும் அதே வேளையில் அதன் தனித்துவத்தைக் காட்டவும், அத்தனித்துவத்தை நமது மக்கள் இனங்கண்டு அதன்மீது தமது இலக்கிய உணர்வைப் பதிய வைக்கவும், நேசிக்கவும் யதார்த்தவாதக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொள்ளவும் அதற்குத் `தேசியம்' என்னும் சொற்பிரயோகம் தேவையாக இருந்தது. எனவே, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது முதலாவது மாநாட்டில் முன் வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1960 இல் தேசிய இலக்கியத்தைப் பிரகடனஞ் செய்தது. இதனைத் தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது. 1961 இல் வெளியான இளங்கீரனின் கலை இலக்கியச் சஞ்சிகையான, `மரகதம்' இப் பணியை ஏற்று தேசிய இலக்கியம் பற்றிய தெளிவை மக்களுக்கு ஊட்டியது.

மரகதத்தின் முதல் இதழில் பேராசிரியர் க.கைலாசபதி `தேசிய இலக்கியம்' பற்றிய தனது முதலாவது கட்டுரையை எழுதினார். அதனை அடுத்து ஏ.ஜே.கனகரத்தினா, அ.ந.கந்தசாமி ஆகியோரின் எழுத்துக்களும் மரகதத்தில் வெளிவந்தன.

தேசிய இலக்கியம் முன்வைக்கப் பட்டதையும், ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் வாசகர்களால் வரவேற்கப் பட்டதையும் தொடர்ந்து இலக்கிய உலகில் செல்வாக்கை இழந்திருந்த மரபு இலக்கிய வாதிகள் கடும் தாக்குதல்களை நடாத்தினார்கள். கண்டனக் கணைகளை வீசினர். போதிய கல்வியறிவும், படிப்பும் இல்லாதவர்கள் தமிழ் மரபு தெரியாதவர்கள் மரபை மீறி எழுதும் இவர்கள் மட்டமான எழுத்தாளர்கள். இவர்களின் இலக்கியம் `இழிசனர் இலக்கியம்' என்றெல்லாம் வசை பாடினர். இதனை ஒட்டிய மரபுப் போராட்டம் தொடங்கியது. 1962 ஜனவரியில் தினகரன் பத்திரிகை தற்கால தமிழ் இலக்கியம் தமிழ் மரபுக்கு புறம்பானதா என்னும் விவாதத்தைத் தொடக்கி வைத்தது. விவாதக் கட்டுரைகள் வெளிவந்தன. முற்போக்கு எத்தாளர் தரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, அ.ந.கந்தசாமி, இளங்கீரன் ஆகியோர் ஆக்கபூர்வமான விவாதக் கட்டுரைகளை எழுதினர். இறுதியில் படைப்பிலக்கிய வாதிகள் சார்பில் விவாதம் முடிவுற்றது.

1962 இல் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் போது `புதுமை இலக்கியம்' மலருக்குப் பேராசிரியர் க.கைலாசபதி `சிறுகதை' என்னும் கட்டுரையை எழுதியிருந்தார். கைலாசபதி அவர்கள் தினகரன் ஆசிரியராக இருந்த போது இலக்கிய ரீதியான புதிய விடயங்களை வெளியிடுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். அவற்றில் ஒன்று `நான் விரும்பும் நாவலாசிரியர்' என்னும் தலைப்பில் இலக்கியப் படைப்பாளிகளை எழுதத் தூண்டியதாகும். மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை பற்றி இளங்கீரன் சிறப்பான கட்டுரையை எழுதியிருந்தார். தினகரன் தமிழ்விழா மலருக்கு `தமிழுணர்ச்சி' என்னும் கட்டுரையும் `கொச்சை' என்னும் கட்டுரையை மரகதத்திலும் எழுதியிருந்தார். தனது கட்டுரைகள் பற்றி இளங்கீரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். `எனது கட்டுரைகள் அனைத்தும் ஈழத்தமிழ் இலக்கிய அரங்கில் சர்ச்சைக்குள்ளான விடயங்களையும் படைப்பிலக்கியங்களைப் பற்றிய புதிய சிந்தனைகளையும் அணுகு முறைகளையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளதால் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவை ஒருவகையில் ஆதர்சமாகவும் அமையலாம்'.

சமுதாயத்தில் வாழ்வு மறுக்கப்பட்ட, வாழப் பிறந்த மக்களின் வாழ்வுக்கான உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கான போராட்டங்களைப் பிரதி பலிக்கும் வாழ்வின் மீது அவர்களது போராட்டத்தின் வெற்றியின் மீதும் நம்பிக்கையூட்டும் இலக்கியங்களையும் மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் பிரதிபலிப்பதோடு, வாழ்க்கையின் விமோசனத்திற்கான சரியான பாதையைச் சுட்டிக் காட்டும் இலக்கியங்களையும் சரிநிகரான மக்களின் வாழ்க்கையை அன்றாட நிகழ்ச்சிகளைக் கருவூலமாக்கி அவர்களைப் பாத்திரமாக்கிக் கொண்டு அப்பாத்திரங்களின் மூலம் உயர்ந்த இலட்சியங்களை முன்னுக்குக் கொண்டுவரும் இலக்கியங்களையும் இளங்கீரன் படைத்துள்ளார்.

மனிதனுக்குள் உயர்வு, தாழ்வு காட்டும் சாதியமைப்பு, பெண்ணடிமைத்தனம், வாழ்க்கை உரிமைகளை மறுப்பது, மூடநம்பிக்கை போன்ற சமுதாயத் தீம்புகளை எதிர்த்துப் போராடுதல் என்ற இலட்சியத்துடன் நின்று முற்போக்கு இலக்கியங்களைப் படைத்த முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன் இன்றும் எங்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.

நன்றி: தினக்குரல் (டிசம்பர் 21, 2007)

Tuesday, May 01, 2007

சந்திரா இரவீந்திரன்

சந்திரா இரவீந்திரன் இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். 1981இல் ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு
சந்திரா இரவீந்திரன் (சந்திரகுமாரி) இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணி புரிகிறார்.

இலக்கியப் பணிகள்
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ்ஒலி ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் இரண்டாவது பரிசைப் பெற்றுக் கொண்டது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன. இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர், முன்னரைப் போல எழுதிக் குவிக்காது விட்டாலும் அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். இவரது படைப்புக்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு தரம் வாய்ந்தவையாக அமைந்து பலரது கவனைத்தையும் பெறத் தவறுவதில்லை.

இவரது நூல்கள்
நிழல்கள் - (சிறுகதைகளும் குறுநாவலும்)

இவரது படைப்புக்களில் சில
சில நேரங்களில் சில நியதிகள்
சிவப்புப் பொறிகள் (சிரித்திரன், 1986 - மூன்றாம் பரிசு)
மடமையைக் கொளுத்துவோம்
எரியும் தளிர்கள் (சிரித்திரன், 1987 - முதற் பரிசு)
தரிசு நிலத்து அரும்பு
நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் (குறுநாவல் - 1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)

முறியாத பனை
யாசகம் - சிறுகதை
பால்யம் - சிறுகதை

கேணல் கிட்டு - கவிதை
நானுன்னை இனி எங்கு தேடுவேன்? - கவிதை

புலம் பெயர்ந்த கடவுளர்கள்

Monday, February 19, 2007

நல்லைக்குமரன் (கந்தையா குமாரசாமி)

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் EDITOR´S CHOICE AWARD பெற்ற கவிஞர்.

இலங்கை நிலவரவுத் திணைக்களத்தில் பட வரைஞராகப்(1956-1982) பணியாற்றியவர். தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள் எழுதுபவர். அவுஸ்திரேலியத் தமிழர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் பிரபல பத்திரிகைகள் உட்பட மல்லிகையிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் உதயம், கலப்பை, கனடா உலகத் தமிழோசை போன்ற பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும எழுதிக் கொண்டிருக்கிறார்.

Wednesday, September 13, 2006

தாமரைச்செல்வி

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் தாமரைச்செல்வி. 1973 முதல் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

வன்னியில் வசித்து வரும் இவர் சுமைகள், தாகம் , வீதியெல்லாம் தோரணங்கள் மற்றும் பச்சை வயல் கனவு போன்ற நாவல்களை எழுதினார். அத்துடன் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் எழுதினார்,

போரினால் மக்கள் பட்ட துன்ப துயரங்களை, வேதனைகளை, கருத்துருவாக்கி மக்கள் படும் அவலங்களை வெளி உலகுக்கு அவரது எழுத்துக்கள் மூலம் எடுத்துக் கூறினார். அந்த வகையில் “அழுவதற்கு நேரமில்லை” என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதியில் முற்று முழுதாக 1995இன் பாரிய இடப்பெயர்வின் அவலங்களையே சித்தரித்தார். வடபுலப்பெயர்ச்சி, வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரின் மத்தியில் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை அங்கு மோசமடைந்து மிக உக்கிரமான நிலையை தாயகத்தில் கண்டிருந்தது. இந்த நிலைமையைச் சுட்டிக் காட்டும் வகையில் இதிலுள்ள அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

இவருடைய படைப்புக்கள்


நிமிர்ந்து எழுந்ததும் சரிந்து வீழ்ந்ததும் மீண்டும் எழ முயற்சிப்பதுமான வாழ்வு எங்களுக்கானது. எங்களின் வாழ்வுதான் இந்நாவலில் விரிந்து கிடக்கிறது

நாவல்கள்
சுமைகள்
தாகம்
வீதியெல்லாம் தோரணங்கள்
பச்சை வயல் கனவு

சிறுகதைத் தொகுதிகள்
மழைக்கால இரவு
அழுவதற்கு நேரமில்லை
வன்னியாச்சி (2005)


கட்டுரைகள்
பெண்ணின் கலாசாரம்

வ.அ. இராசரத்தினம்

வ. அ. என அறியப்படும் வ. அ. இராசரத்தினம் புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை எழுத்தாளர். நாவல் எழுத்தாளர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர்.

1940கள் முதல் எழுதி வரும் இராசரத்தினம் பலநூறு கதைகள் படைத்திருக்கிறார். அவருடைய முதல் கதைத் தொகுதியின் மகுடக்கதையான 'தோணி'யே மிகுந்த கவனிப்பையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அநேக தொகுப்புகளில் அது இடம்பெற்றிருக்கிறது.

அவருடைய ஆரம்பக் கதைகளுள் ஒன்றான 'தோணி'யிலேயே அவரது எழுத்தாற்றலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் யதார்த்த நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் மனித நேயமும், நம்பிக்கை மனோபாவமும் புலனாயின.

கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கை நடத்தும் மீனவன் நித்திய வறுமையிலேயே வாழ வேண்டியிருக்கிறது. காரணம், தோணி அவனுக்கு சொந்தமில்லை. இளைய மீனவன் ஒருவன், சொந்தத் தோணிக்காக ஆசைப்படுகிறான். சொந்தமாகத் தோணி வந்த பிறகே கல்யாணம் செய்து கொள்வது என்று உறுதிபூணுகிறான். அவன் ஆசை நிறைவேறுவதாயில்லை. 'உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை' என்பதை உணர்கிற அவன், தான் காதலித்த பெண் சுகமாக வாழட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் சொந்தத் தோணி உடைய ஒருவனுக்கு அவளை மணம் முடித்து வைக்கிறான்.

'இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பம்தான். எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை சந்தையில் பகிரங்கமாக விற்போம். விற்ற பணத்திற்குச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணம் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும். அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?' இதுவே அந்த மீனவனின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

கலை அழகுடன் யதார்த்த வாழ்வை சித்திரிக்கும் நல்ல கதை 'தோணி'. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றை நயமான கதைகளாக உருவாக்கியிருக்கிறார் இராசரத்தினம்.

இராசரத்தினம் ஆசியராகப் பணிபுரிந்து அனுபவங்கள் பெற்றவர். அதனால் பலவித இயல்புகளும் நோக்கும் போக்கும் உடைய ஆசிரியர்களை கதை மாந்தராக்க் கொண்டு பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். ஆசிரியர்களது பிரச்சினைகள், வாழ்க்கைச் சிக்கல்கள், குழப்பங்கள், நம்பிக்கைகள், நிலைமைகள் முதலிய பல விஷயங்களை இக்கதைகள் விவரிக்கின்றன.

வேதக் கோயில் மணி, வருடப்பிறப்பு, வருடப் பிறப்பை ஒட்டிக் கொண்டாடப்படுகிற சில நிகழ்ச்சிகள் முதலியன சில கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 'கோயில் மணி ஓசை' 'நத்தார் ஓலம்' ஆகியவை விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.

தனது மனைவி இறந்ததும் அவர் அனுபவித்த உணர்வுகளையும், அவரது மனநிலையையும் உணர்ச்சிகரமான சொற்சித்திரமாக இராசரத்தினம் எழுதியிருக்கிறார். அதுதான் 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது.' சுய சோக அனுபவங்களை உருக்கமாக எடுத்துக் கூறும் இக்கதை வாசகரின் உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளது.


பிறப்பு - 5-6-1925 மூதூர், திருக்கோணமலை.
தாய் - அந்தோனியா
தந்தை - வஸ்தியாம்பிள்ளை
கல்வி -
தாமரைவில் றோமன் கத்தோலிக்க பாடசாலை.
மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை.
ஆசிரியர் பயிற்சி - மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.
பணி - ஆசிரியர்
எழுதத் தொடங்கியது - 1946
திருமணம் - 1952 துணைவி - மேரி லில்லி திரேசா
புனைபெயர்கள் -
ஈழநாகன்
கீழக்கரை தேவநேயப் பாவாணர்
வியாகேச தேசிகர்.
[தொகு]
இவரது நூல்கள்

துறைக்காரன் (நாவல்)
கொழுகொம்பு (நாவல்)
கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
தோணி (சிறுகதைத் தொகுதி)
பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள்), 1995


வ.அ.இராசரத்தினம்
திரிகூடம்
மூதூர்



ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது

1. அறுவடை 25
2. பங்கம் 31
3. கோயில் மணி ஓசை 33
4. தோணி 48
5. வென்றிலன் என்ற போதும் 62
6. தோழருக்குத் தெரியாதது 68
7. தலாக் 76
8. அபேதவாதி 84
9. கடலின் அக்கரை போனோரே 92
10. 1+1=1; 1-1=2 100
11. அவசரம் 112
12. நத்தார் ஓலம் 120
13. ஆண்மகள் 127
14. ஓரு தெய்வம் ஆசி வழங்குகிறது 142
15. இரசிகன் 155
16. கலைஞன் துயர் 163
17. தவம் 169
18. உண்ணி 175
19. பிரிபுபசாரம் 178
20. ஒரு பூனைக்கதை 186
21. ஜ“ப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன 188
22. ஒரு காவியம் நிறைவு பெறுகிறது 194
23. சுமை 236
24. பொய் முகங்கள் 246
25. சரிவு 254
26. தர்மம் 261
27. குதிரை 265
28. போர்ப்பறை 272
29. மதிப்பு 280
30. காந்தரி 283
31. பாசம் 288
32. வலை 296
33. வேர்கள் 302
34. மீண்டும் காந்தி பிறப்பார் 310
35. குழப்பம் 320
36. குடிமகன் 328
37. a+a=2a ஆயின்
கதை+கதை= இரண்டு கதைகடல்ல 336
38. மறைப்பு 349
39. தகரவிளக்கு 356
40. பாலை 362
41. தையலக்கா 385
42. வாழ்க சுதந்திரம் 393
43. பிரிவு 395
44. பெண் 404
45. பிறந்த மண் 407
47. ஈட்டிக்காரன் 418
46. பெண்ணியம் 424
48. ஓர் ஆலமரத்தின் கதை 428
49. மனிதன் 439
50 கனி 446

Monday, March 20, 2006

கவிஞர் நீலாவணன்

கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள்

கவிஞர் நீலாவணன் 31- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே 'நீலாவணன்' என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு - குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று "நீங்கள் நூற்றுக் கணக்கானவர்களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்கலாம். சிறுகதையை விட்டு விட்டுக் கவிதையையே எழுதுங்கள்" என்று அன்புக் கட்டளை இட்டார். அதனை ஏற்று நீலாவணன், ஏராளமான சிறந்த கவிதைகளையே எழுதிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் சிறுகதை எழுதுபவர்களிலும் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை எதிர்மாறாக உள்ளது.

1961ல், கல்முனைப் பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். அதன் தலைவராகப் பல வருடங்கள் பொறுப்பேற்று இப்பகுதியின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டார்.

கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுதாளர் சந்திப்புக்கள் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கத்தால் இப்பகுதியில் முதன்முதலாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற நீலாவணன் காலாக இருந்தார்.

அகில இலங்கை ரீதியாக, தினகரன் பத்திரிகை மூலம் (1962ல்) நடைபெற்ற இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, 'மழைக்கை' கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கம் நடாத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகவும், இலக்கிய நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ள பசுமை நினைவுகளாகவும் மிளிர்கின்றன. இவை யாவற்றுக்கும் முக்கிய ஆலோசகராகவும் நீலாவணன் விளங்கியதோடு அதற்காக பைசிக்கிள் ஓடி ஆதரவு திரட்டல் போன்ற உடல் உழைப்பு நல்குவதிலும் மிகுந்த உசாராகவே விளங்கினார்.

'மழைக்கை' கவிதை நாடகம் கிழக்கிலே (1963ல்) முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிகாலக் கதையைக் கருவாகக் கொண்ட இந்நாடகம் அறுசீர் விருத்தப் பாக்களினால் மிகவும் நயமான பேச்சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகம் ஆகும். இந் நாடகத்தில் மு. சடாட்சரம்- கர்ணன், நீலாவணன்- குந்திதேவி, மருதூர்க்கொத்தன்- கிருஷ்ணன், எம். ஏ. நுஃமான்- இந்திரப் பிராமணன், மருதூர்க்கனி- பிராமணன், கே. பீதாம்பரம்- இந்திரன் என்று பாத்திரமேற்று நடித்தமை குறிப்பிடத்தக்கது. 'மழைக்கை' 1964இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.

1966ல் ஜனாப் உஸ்மான் மேர்சா காட்டிய அன்பினால், அவரின் கிழக்குப் பதிப்பகத்தில் 'பாடும் மீன்' இதழை -நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு- அச்சிட்டும் அது வெளிவராமலே போயிற்று.

1967ல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து (தலைவர்- சண்முகம் சிவலிங்கம், செயலாளர்- மு. சடாட்சரன், கௌரவ ஆசிரியர்- நீலாவணன், காப்பாளர்- கே. ஆர். அருளையா B.A) 'பாடும் மீன்' என்னும் இலக்கிய இதழை நடாத்தினார். அது இரண்டு இதழ்களே வந்தாலும் அத்ற்கு இலக்கிய உலகில் தனி இடம் உண்டு.

11- 01- 1975ல் இயற்கை எய்தினார்.

1976ல் இவரது 'வழி' என்னும் முதலாவது கவிதை நூல் வெளிவந்தது. இது இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது.

1982ல் நீலாவணனது 'வேளாண்மை'க் காவியம் நூலுருவாக வெளிவந்துள்ளது. 2001ல் 'ஒத்திகை' (கவிதைத் தொகுப்பு) வெளிவந்துள்ளது.

இவரது துணைவியார் திருமதி அளகேஸ்வரி சின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர். இவரின் சிரேஷ்ட புதல்வன் சி. எழில்வேந்தன் தற்போது சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப் பணிப்பாளராகக் கடமை புரிகிறார்.

-மு. ச. நவீனன்

----------------------------------------

06.07.98 முதல் 12.07.98 வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் நிகழ்வின் ஆறாம் நாள் செங்கதிரோன் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்...

#1948இல் எழுதத் தொடங்கிய நீலாவணனை அவர் கே. சி. நீலாவணன் எனும் பெயரில் 'சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய 'பிராயச்சித்தம்' சிறுகதையே இலக்கிய உலகிற்கு எழுத்தாளனாக அறிமுகப்படுத்திற்று. இவரது முதற்கவிதை 1948ம் ஆண்டிலே தினகரன் பாலர் கழகத்தில் பிரசுரமாகி இருந்தாலும் கூட கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953இல் சுதந்திரனில் வெளிவந்த 'ஓடி வருவதென்னேரமோ?' எனும் கவிதை மூலமே கவிஞராக அறிமுகம் ஆனார். இவரது இறுதிக் கவிதை 'பொய்மை பொசுங்கிற்று' என்பதாகும்.

#கே. சி. நீலாவணன், நீலாவண்ணன், நீலா சின்னத்துரை, மானாபரணன், இராமபாணம், எழில்காந்தன், சின்னான் கவிராயர், எறிகுண்டுக் கவிராயர், கொழுவு துறட்டி, அமாச்சி ஆறுமுகம், வேதாந்தன், சங்கு சக்கரன் எனும் புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம் ஆகிய வடிவங்களில் ஆக்கங்களைப் படைத்தாரெனினும் கவிதைத் துறையே அவரைப் புகழ்பூக்க வைத்தது என்பதாலும், தனது ஊரான பெரிய நீலாவணை மீது கொண்ட பற்றினால் சூடிக் கொண்ட நீலாவணன் எனும் பெயரே நிலைத்துவிட்டது என்பதாலும் எழுத்துலகில் கவிஞர் நீலாவணன் என்றே தடம்பதித்தார்.

#1960களில் ஈழத்து இலக்கிய முகாமில் முற்போக்கு என்றும் பிற்போக்கு என்றும் சொற்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தனது இலக்கிய கொள்கை நற்போக்கு என்று நாடிய அணி சேராத் தனித்துவக் கவிஞன் நீலாவணன்.

#நீலாவணன் கவிதைகள் ஓசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இன்பம் தரும் லயமும், தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை அவர் ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவன் புகளேந்தியின் பெயர் தமிழுலகில் 'வெண்பாவிற்புகழேந்தி' என்று நிலைத்துவிட்டது போல் - ஈழத்து இலக்கிய உலகில் 'வெண்பாவிற் பெரியதம்பி' என புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல் ' சந்தக்கவிதைக்கு நீலாவணன்' என்ற சங்கதியும் எழுத்துலகில் நின்று நிலைக்கும்.

#வேகமும், திவிரமும், முன்கோபமும் இவர் இயல்பான குணங்களெனினும் மனிதநேயப்பண்பும், நகைச்சுவை உணர்வும் நீலாவணனிடம் நிறைந்திருந்தன.
#மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை.

# மட்டக்களப்பின் கவிதைப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை இம்மண்ணின் நாட்டார் பாடல்களே. இங்கு மட்டக்களப்பு பிரதேசம் எனக் கூறப்படுவது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக் குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்டு இலங்கிய நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பில் காலங்காலமாக எழுதா இலக்கியமாகத் திகழ்ந்த நாட்டார் பாடல்கள் (கிராமியக் கவிகள்) மட்டக்களப்பின் பேச்சுமொழியில் இம்மண்ணின் மண்வாசனை கமழும் வகையிலேயே புனையப்பட்டவை. இப்பாடல்களெல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே. எனினும் செந்நெறி இலக்கியங்கள் என வரும் போது விபுலானந்த அடிகளார் மற்றும் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் கவிதைப் பாரம்பரியத்தின் அடியொற்றி மட்டக்களப்பு மண் ஆனது பல கவிஞர்களை ஈன்றெடுத்துள்ள போதிலும் இவர்களில் எவருமே -கவிஞர் நீலாவணனைத் தவிர- ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும் அம்மக்களின் வஞ்சகமில்லாத வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடித்துத் தரவில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் 'வேளாண்மை'க் காவியம்.

#1960களில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தைச் ஸ்தாபித்து வழி நடாத்தியதின் மூலம் கல்முனைப் பிரதேசத்திலே எழுத்தாளர் பரம்பரையொன்றை நீலாவணன் உருவாக்கினார். மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி, அன்பு முகையதீன், மு. சடாட்சரன், கல்முனைப் பூபால், மருதூர்வாணன், பாலமுனை பாறூக், எம். ஏ. நுஃமான், முல்லைவீரக்குட்டி, கனகசூரியம், சத்தியநாதன், நோ. மணிவாசகன், ஆனந்தன் என்று ஓர் இலக்கியப் பட்டாளமே அவரின் அரவணைப்பில் உருவானது. கல்முனையிலே, அவரின் இலக்கியச் சகாக்களாக சண்முகம் சிவலிங்லம், பாண்டியூரன், ஜீவா ஜீவரத்தினம், பஸீல் காரியப்பர், ஈழமேகம் பக்கீர்தம்பி ஆகியோர் விளங்கினர். இலங்கையின் எந்தவொரு தனிப்பிரதேசத்திலும் கல்முனைப் பிரதேசத்தைப் பால் அதிக எண்ணிக்கையான இலக்கியவாதிகள் இருந்ததில்லை. இவ்விலக்கியவாதிகள் அனைவரும் கவிஞர்கள் என்பது இன்னுமொரு சிறப்பு. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணனே.

#நீலாவணனுடன் நெருக்கமாயிருந்த ஏனைய சமகால இலக்கிய நண்பர்களாக எஸ். பொன்னுத்துரை, இளம்பிறை எம். ஏ. றஃமான், அண்ணல், இலங்கையர்கோன், ராஜபாரதி, மண்டூர் சோமசுந்தரப்பிள்ளை, வ. அ. இராசரத்தினம், கனக செந்திநாதன், ஏ. ஜே. கனகரத்னா, மஹாகவி ஆகியோர் இருந்துள்ளனர். இவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்போராக கல்முனையிலே டாக்டர் எம். முருகேசபிள்ளை அவர்களும், கே. ஆர். அருளையா B. A. அவர்களும் திகழ்ந்துள்ளனர். இவரது படைப்புகளுக்குக் களம் கொடுத்த பத்திரிகையாளர்களில் சுதந்திரன் எஸ். டி. சிவநாயகம், தினகரன் ஆர். சிவகுருநாதன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் எப். எக். ஸி. நடராசா, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் ஆகியோர் இவரது எழுத்துக்களையிட்டு பெருமிதம் கொண்ட மூத்த தலைமுறை அறிஞர்களாவர்.

#நீலாவணன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர் முறையாக வெளிப்படுத்தப் படவில்லை என்ற விடயம் மிகவும் விசனிக்கத்தக்கது. பல்கலைக்கழகப் பின்புலத்தில் பட்டம் என்ற அங்குசத்தை வைத்துக் கொண்டு ஈழத்து இலக்கிய உலகின் விமர்சனத் துறையை ஒரு காலத்தில் ஆக்கிரமித்துக் கொண்ட பேராசிரியர்களும் அவர்களது மாணவ சகாக்களும் தாங்கள் வரித்துக் கொண்ட கலை, இலக்கிய, அரசியல் கோட்பாட்டு முகாம்களுக்குள் முடங்காதவர்களை ஈழத்து இலக்கிய உலகில் இருட்டடிப்புச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டவர்களுள் கவிஞர் நீலாவணன்ய்ம் ஒருவர். எனினும் நீலாவணன் மறைவுக்குப் பின் இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். அந்த வகையில் நீலாவணன் மறைவிற்குப் பின் கலாநிதி சி. மௌனகுரு எழுதிய "கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்" என்ற நீலாவணன் பற்றிய நூல் முற்குறிப்பிட்ட பேராசிரியர்கள் விட்ட பிழைக்கு பின்னால் வந்த மாணவ சகாக்கள் தேடிய பிரயச்சித்தம் போலும். எனினும் நீலாவணன் உயிர்வாழ்ந்த காலத்திலேயே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' மே 1970 இதழில் நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டதை பாராட்டாமல் இருக்க முடியாது. இவரைப் பற்றிய குறிப்பை சி. பி. சத்தியநாதன் எழுதியிருந்தார்.

--------------------------------------------------------

நீலாவணன் நூல்கள்

நூல்: வழி
ஆசிரியர்: நீலாவணன்
முதற்பதிப்பு: மே,1976
வெளியீடும் உரிமையும்: திருமதி. நீலாவணன், பெரிய நீலாவணை, கல்முனை.
அட்டை: எஸ். கே. சௌந்தராஜன் (சௌ)
அச்சு: றெயின்போ பிரிண்டர்ஸ், 231, ஆதிரிப் பள்ளித் தெரு,
கொழும்பு- 13

நூல்: வேளாண்மை (குறுங்காவியம்)
ஆசிரியர்: நீலாவணன்
முதற்பதிப்பு: 1982 செப்டெம்பர்
அசுப்பதிவு: அமுதா அச்சகம், மூதூர்
வெளியீடு: தங்கம் வெளியீடு, மூதூர்.
அட்டைப்படம்: நிர்மல்
உரிமை: திருமதி. நீலாவணன்

நூல்: ஒத்திகை- நீலாவணன் கவிதைகள்
முதற்பதிப்பு: மே 31, 2001
நூல் ஆசிரியர்: நீலாவணன்
பதிப்புரிமை: எஸ். எழில்வேந்தன்
வெளியீடு: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, கொழும்பு- 15, இலங்கை. தொலைபேசி- 526495
E-mail: seventhan@yahoo.com
அச்சிடுபவர்: யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், கொழும்பு 13.

நீலாவணன் பற்றிய நூல்கள்

நூல்: கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்
ஆசிரியர்: கலாநிதி சி. மௌனகுரு
முதற் பதிப்பு: மார்ச் 1994
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை- 600002

நூல்: நீலாவணன்- எஸ். பொ. நினைவுகள்
ஆசிரியர்: எஸ். பொ.
வெளியீடு: காலம் (கனடா) வெளியீட்டுடன் இணைந்து மித்ர வெளியீடு, 375-10, ஆற்காடு சாலை, சென்னை- 600024, இந்தியா
முதற்பதிப்பு: செப்ரெம்பர் 1994. உரிமைப் பதிவு
அமைப்பு: இளம்பிறை எம். ஏ. ரஹ்மான்.

மூத்த எழுத்தாளர் வரதர்

ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர்.

'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.

தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது. செயல்வடிவம் பெற்றது.

1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர்.

இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.

தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர்.

மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும், அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார்.

1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது.
1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர்.

1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.

இவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின.

வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.

'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின.

வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம்.

வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர்.

வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.

Thursday, February 24, 2005

என்.கே.மகாலிங்கம்

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம். தமிழ் இலக்கிய உலகில் 'பூரணி' மகாலிங்கம் என அறியப்பட்டவர். இவரும் அறுபதுகளிலிருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தன் பங்களிப்பை சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் எனப் பல்வேறு வழிகளில் ஆற்றி வருபவர்.

'பூரணி' என்னும் சஞ்சிகை இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததன் காரணமாகவே இவர் 'பூரணி' மகாலிங்கம் என அழைக்கப்பட்டார். கனடாவிலிருந்து வெளிவரும் 'காலம்' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர்.

அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் 'சினுவா ஆச்சிபி'யின் மிகவும் புகழ்பெற்ற நாவலான 'Things Fall Apart' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'சிதைவுகள்' நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் இவரே. இவரது 'உள்ளொளி' என்னும் கவிதைத்தொகுதி 'காலம்' வெளியீடாக வெளிவந்துள்ளது.

அ.முத்துலிங்கம்

தமிழ்ச் சிறுகதை உலகில் அறுபதுகளிலிருந்து இன்றுவரை சளைக்காமல் எழுதிவரும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுதிகளை தமிழகத்தில் காந்தளகம், காலச்சுவடு மற்றும் அண்மையில் தமிழினி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

இதுவரை இவரது 'அக்கா' (1964), 'திகடசக்கரம்' (1995), 'வம்சவிருத்தி' (1996), 'வடக்கு வீதி' (1998), 'மகாராஜாவின் ரயில் வண்டி' (2001) மற்றும் 'அ.முத்துலிங்கம் கதைகள்' (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

தினகரன் தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு( 'திகடசக்கரம்'), தமிழ்நாடு அரசு முதற் பரிசு ('வம்சவிருத்தி'), ஸ்டேட் பாங் ஒவ் இந்தியா முதற் பரிசு ('வம்சவிருத்தி'), இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு ('வடக்கு வீதி) ஆகிய பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இவரது படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் அம்பை " அ.முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச் செல்பவை. நாம் அறிந்த உலகங்களின் கதவுகளையும், சாளரங்களையும், காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை" என்று குறிப்பிடுவார்.