இசையமைப்பாளர் நிரு (நிர்மலன்)
எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்ததெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர்.
இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் செஞ்சாரு. இசையில் எனக்கு ஆர்வம் வந்ததுக்கு அப்பாதான் முதல் காரணம்!’’ _ தாய் மண்ணில் கழிந்த பால்ய காலத்தோடு நிருவின் பேச்சு தொடங்குகிறது.
‘‘1983_ல் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் ஆரம்பிச்சது. அப்போ எனக்கு மூணு வயசு. திடீர் திடீர்னு தெருவில் ஆட்கள் ஏன் பதட்டமா ஓடுறாங்க, அடிக்கடி ஏன் கரெண்ட் கட் ஆகுது, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வெளியே ஏன் யாரும் நடமாடுறதில்லைனு எதுவும் புரியல. ‘‘முந்தின நாள் சாயங்காலம் வரைக்கும் எங்கூட விளையாடிட்டிருந்த பையன் மறுநாள் காலையில் வெடிகுண்டுத் தாக்குதலில் காலை இழந்திருப்பான். நாள் தவறாமல் அப்பாவைப் பார்க்க வரும் நண்பரை திடீர்னு மாசக்கணக்கில் பார்க்க முடியாது. காரணம் கேட்டா, அவரை ராணுவம் கூட்டிட்டுப் போய்க் கொன்னுட்டதாக வீட்டில் சொல்வாங்க.’’ என்று கூறும் நிருவால் சில அதிகாலை நேரங்களை இன்னும் மறக்கவில்லை.
‘‘இருட்டு விலகாத காலை நேரத்துல ராணுவம் ஊருக்குள்ள வந்து, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, வெளியே வரச் சொல்வாங்க. துடிப்பாக தெரியுற ஆண்களைத் தேர்ந்தெடுத்து, வரிசையாக நிக்க வைப்பாங்க. அடுத்த நிமிஷம் தெருவையே அதிர வைக்கிற மாதிரி துப்பாக்கிச் சத்தம் கேட்கும். வரிசையில் நின்ன எங்காளுங்க செத்துக் கிடப்பாங்க. ராணுவத்தின் கண்ணில் பட்டவங்க பெண்களாயிருந்தா, அவங்களோடவே கூட்டிட்டுப் போயிடுவாங்க. முகாமுக்குப் போய், பல நாட்களுக்குப் பிறகு, புத்தி பேதலிச்சு திரும்பி வந்தவங்களை எனக்குத் தெரியும்!’’ _ உணர்வுகள் மரத்துப்போன குரலில் நிருவின் ஞாபகம் தொடர்கிறது.
‘‘போர்ச்சூழல் மேலும் கடுமையானதால், நாங்க பிரான்சுக்குப் போக முடிவு செஞ்சோம். தமிழர்கள் நெனைச்சவுடன் வெளிநாட்டுக்குப் போக முடியாது. போலீசுக்கும், ராணுவத்துக்கும் தெரியாம, சில காட்டுப் பாதைகள் வழியாக கொழும்பு விமான நிலையத்துக்குப் போய், அங்கிருந்துதான் கிளம்ப முடியும். குடும்பத்தின் பெரியவர்கள் எங்களை ஒவ்வொருவராக பைக்கில் கூட்டிட்டுப் போனாங்க. இரவில் காட்டில் தங்குறதும், பைக் பஞ்சர் ஆகும் போதெல்லாம் தூரத்துக் கிராமங்களில் வண்டியைச் சரி செய்ய ஆள் தேடி அலைவதுமாக அந்தப் பயணம் மூணு நாள் நீடிச்சது. எங்க நிலைமையாவது பரவாயில்லை, சிலர் லாரி டிரைவர்களின் உதவியோடு டீசல் டேங்கில் ஒளிஞ்சுகிட்டு வர முயற்சி செய்வாங்க. சில சமயங்கள்ல அவங்க மூச்சுத்திணறி இறந்த சம்பவங்களும் நடந்துருக்கு’’ என்று சொல்லும் நிருவுக்குப் பாரீசில் பல சவால்கள் காத்திருந்தன.
‘‘பிரான்சுக்குப் புலம் பெயர்பவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை மொழி. பிரெஞ்சுக்காரர்கள் இங்கிலீஷ் தெரிஞ்சாலும், பிரெஞ்சில்தான் பேசுவாங்க. ‘எங்க நாட்டுக்கு நீ வந்தால், எங்க மொழியில்தான் பேசணும்’ங்கிறதுல அவங்க பிடிவாதமா இருப்பாங்க. வீட்டுல தமிழ், வெளியே பிரெஞ்சுங்கிற முரண்பாட்டைச் சமாளிக்குறது கஷ்டமா இருந்தது. முதல் ஆறு மாசம் வெளியே போகவே விரும்பாம, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.. அடுத்தது, பிரான்சின் கடுங்குளிர். இன்னொரு பிரச்னை, பிரெஞ்சு சாப்பாடு. உப்பும் காரமும் ரொம்பக் குறைவான உணவுக்குப் பழகுறதுக்கு ஆரம்பத்துல மிகவும் சிரமப் பட்டேன் பள்ளிக்கூடத்துல கூட எனக்கும் பிரெஞ்சு மாணவர்களுக்கும் இடையே வித்தியாசம் பளிச்னு தெரியும். டீச்சர்கிட்டே அந்த மாணவர்கள் உட்கார்ந்துகிட்டே பேசுவாங்க. நான் மட்டும் நம்ம ஊர் வழக்கப்படி சட்டுனு எழுந்து நின்னுடுவேன். இதைப் பார்த்து வகுப்பே சிரிக்கும்! பிரெஞ்சு வாழ்க்கைக்கு ஏற்றபடி நான் மாற மூணு வருஷம் ஆனது!’’ என்று கூறும் நிரு வீட்டின் எதிர்ப்பையும் மீறி இசை படித்தவர்.
‘‘ப்ளஸ் டூவுக்கு நிகரான படிப்பை முடிச்சிட்டு, இசையைக் கற்றுக் கொள்ள முழு மூச்சாக இறங்குனேன்.. காலையில் சவுண்ட் இன்ஜினியரிங் காலேஜுக்கும், மதியம் இசைப்பள்ளிக்கும் போவேன். தமிழகத்துலேர்ந்து பாரீசுக்கு வர்ற இசையமைப்பாளர்களை எல்லாம் தேடித் தேடிப் போய்ச் சந்திப்பேன். மெல்ல மெல்ல இசையின் நுட்பங்கள் புரிபட ஆரம்பிச்சது. நிரு எந்த இசையமைப்பாளரிடமும் உதவியாளராக இருந்ததில்லை.
‘நீலம்’, ‘மூங்கில் நிலா’ உட்பட இவர் இசையமைத்த ஆல்பங்கள் ‘கலாபக் காதலன்’ படத்தில் பணிபுரியும் வாய்ப்பைத் தேடித்தந்தன. ‘‘கலாபக் காதலனுக்கு நான் இசையமைத்த பாடல்கள் அவ்வளவு பிரபலமாகலை. தமிழ் சினிமாவின் இசையை நான் இன்னும் புரிஞ்சிக்கணும்னு உணர்ந் தேன். பிரெஞ்சு மொழியைக் கத்துக்கிட்டது போல இதுவும் முடியும்னு நம்பினேன். தொடர்ந்த பயிற்சிகளுக்கு நான் எதிர்பார்க்காத ஒரு கதவு திறந்தது. டைரக்டர் செல்வம் தனது முதல் படமான ‘‘ராமேஸ்வர’த்துக்கு இசையமைக்க என் மேல் நம்பிக்கை வச்சு வாய்ப்பு தந்தார். எங்களின் இழப்பையும் துக்கத்தையும் சொல்லும் படத்துக்கு இசையமைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்!’’ நிறைவாகச் சொல்கிறார் நிரு.
_ஆனந்த் செல்லையா
படங்கள் : ஆர்.. கோபால்