Thursday, September 27, 2012

மூனா - நேர்காணல்

ஒரு புதுச்சூழலில் எங்கள் பயணம் தொடங்குகிறது...
பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட செல்வகுமாரன் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி.

பொங்குதமிழுக்காக இவர் வரைந்த கருத்துப்படங்கள் சமகால அரசியல் வரலாற்றின் ஓவியப் பதிவுகளாக பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக 1983, 2012 ஆண்டுகால சிறைச்சாலைப் படுகொலைகளை மையப்படுத்தி இவர் வரைந்த கருத்துப்படம் 150 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களின் முகப் புத்தங்களில் பிரதிசெய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி உள்ளன. இவரின் 'தாயென்னும் கோயில்' நாடகம் உலகளாவிய தமிழர்களுக்கிடையே ஐபிசி வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் தெரிவாகி முதலாவது பரிசான தங்கப்பதக்கத்தை வென்றெடுத்திருக்கிறது.

செல்வகுமாரனின் முழுமையான படைப்பாற்றலை இந்நேர்காணல் வெளிக்காட்டும் என நம்புகிறோம்.

ஓவியத்துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது என்பது பற்றிச் சொல்லுங்கள்?
கல்கி, குமுதம், விகடன், ராணி சஞ்சிகைகளில் இருக்கும் சித்திரங்களைப் பார்த்து எனது அண்ணன்கள் தங்களது அப்பியாசப் புத்தகங்களில் கிறுக்கும்போது எனக்கும் வரையும் ஆவல் தொற்றிக் கொண்டது. அதுவே பாடசாலையில் ஓவிய வகுப்பில் எனது திறமையை வளர்க்கக் காரணமாயிற்று. பின்னாளில் எனது வரைதலுக்கு அறிவூட்டி, வழிகாட்டி, நெறிப்படுத்தியது ஓவியர் ஏ.மார்க் அவர்கள். எனது நகரில் உள்ள பிரபலமான ஹாட்லிக் கல்லூரியில்தான் அவர் ஓவிய ஆசிரியராக இருந்தார். அந்தப் பாடசாலையின் மாணவர் விடுதிக்கும் அவரே பொறுப்பாளராகவும் இருந்தார். அந்த விடுதியில் விசாலமான அறையொன்றில் மாலையில் ஆறிலிருந்து பத்துவரை அவரிடம் ஓவியம் பயில எனக்கு வாய்ப்புக் கிட்டியது. நிறையப் புத்தகங்கள் வைத்திருப்பார். வாசிக்கத் தருவார். அதில் உள்ள படங்களை வரையப் பயிற்சியும் தருவார். மரங்களையும், மாடுகளையும், மனிதர்களையும் அப்படியே கீறுவதில் அர்த்தமில்லை. அவற்றில் நவீனங்களைப் புகுத்தி பார்ப்பவர்களுக்குப் பலவற்றைச் சொல்லவைக்கும் சித்திரங்களை வரைய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லியும் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் College of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். College of fine arts இல் நுளைவதற்கு எனக்கு எல்லாத் தகுதியும் இருந்தும் அங்கு சென்று படிப்பதற்கு எனது வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

எதற்காக உங்கள் வீட்டில் அனுமதி தர மறுத்தார்கள்?
ஓவியத்துறையில் பெரிதும் சாதிப்பதற்கோ, வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கோ இலங்கையில் வாய்ப்பில்லை என்பது எனது வீட்டாரினது கருத்தாக இருந்தது. ஒருவிதத்தில் அது உண்மையானதாகவே இருந்தது. தென்னிந்திய சஞ்சிகைகள், அதில் வரும் கதைகள் அவற்றிற்கான ஓவியங்கள் எல்லாமே அங்குள்ளவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. சாமி அறையில் இருக்கும் கடவுள் படங்கள், சிகை அலங்கார நிலையங்களில் தொங்கும் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களின் படங்கள் எல்லாமே தென்னிந்தியாவில் இருந்து வந்து எம்மவர்களை ஆக்கிரமித்திருந்தபோது பெரிதாக இவன் என்ன சாதிக்கப் போகிறான் என்ற நிலையே அன்று மேவி இருந்தது. இதுவே என்னைப் போன்றவர்களுக்கு அன்றைய காலத்தில் பெரிதும் பின்னடைவாகப் போயிற்று.

கலை, விளையாட்டுகள் எல்லாம் சோறு போடாது என்ற அன்றைய தமிழரின் நிலைப்பாட்டில் நீங்களும் மாட்டிக் கொண்டீர்கள். இதனால் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படவில்லையா?
நான் மேற்கொண்டு ஓவியத்துறையில் திறமையை வளர்க்க முடியாமல் போனதில் மார்க் மாஸ்ரருக்குத்தான் என்னை விட கவலைகள் அதிகமாக இருந்தது. தனது கவலையை என்னிடம் நேரடியாகவே அவர் பகிர்ந்து கொண்டார். ஆனாலும் பெற்றோருக்கும், பாதுகாவலர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்று ஆசிரியர் நிலையில் இருந்து கொண்டு எனக்குத் தனது அறிவுரைகளையும் தந்தார்.

பின்னாளில் மார்க் மாஸ்ரர் மாற்றலாகி யாழ்ப்பாணம் போனதன் பின்னர், நானும் ஓவியன் எனும் எனது எண்ணத்தை மூடிவைத்து விட்டு எனது வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் நுளைந்து கொண்டேன்.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?
அற்புதமான ஓவியர் என்பதையும் தாண்டி அவர் ஒர் அன்பான மனிதர். பேச்சாலோ, செயலாலோ எவரையும் நோகடிக்கத் தெரியாதவர். எவ்வித பாகுபாடுமின்றி எவருக்கும் ஓவியத்தைப் பற்றி தன்னால் முடிந்தளவுக்குச் சொல்லித் தந்தவர். பிக்காசோவின் ஓவியங்களில் மனதைக் கொடுத்தவர். விட்டால் பல மணி நேரம் பிக்காசோவின் ஓவியங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பவர். நவீன ஓவியங்கள் பெரிதும் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்று நினைத்தவர். அதற்காகவே தனது படைப்புக்களைத் தந்தவர். போதுமான வசதிகள் கிட்டாத போதும் சளைக்காமல், தேயிலை அடைத்துவரும் பலகைப் பெட்டிகளைப் பிரித்தெடுத்து அதில் ஓவியங்களை வரைந்து வைத்தவர். அவருக்கு இருந்த திறமை பெரிது. இங்கு, வெளிநாடுகளில் வந்து பார்க்கும் போதுதான் மார்க் மாஸ்ரர் என்ற அற்புத ஓவியரின் மதிப்பு புரிகிறது.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் நினைவில் ஏதாவது...?
நிறையவே இருக்கின்றன. சொல்லப் போனால் அதற்காகவே ஒரு பதிப்பு போடலாம். எனது நினைவுக் குறிப்பில் அவரைப் பற்றி இரண்டு விடயங்களைப் பதிந்துள்ளேன். அதிலொன்று...
'அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது.

இது சிவனின் உருத்திர தாண்டவம். கோபத்தையும், பயத்தினையும் இணைத்துக் கொடுப்பதற்கு இந்த வர்ணம்தான் சிறந்தது. போதாதற்கு சிவனின் நடனத்தை ஒரு சுடலையில் நடப்பதாக வரைந்திருக்கின்றேன். பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இங்கே சிகப்புத்தான் சிறந்தது. ஆனாலும் எனக்கு சிகப்பு பிடிக்காது.

அமைதியாக ஆனாலும் விளக்கமாக அவரிடமிருந்து பதில் வந்தது. ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.
பார்க்கும்போது முட்ட வரும் காளை மாதிரியிருக்கும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அந்தக் காளைக்குள் ஏ.மார்க் என்ற எழுத்துக்கள் இருக்கும். AM என்ற எழுத்துக்களின் மேற்பகுதி குத்தவரும் கொம்புகளாகவும் A யின் கீழ்ப்பகுதி இரண்டும் முன்னம் கால்களாகவும் இருக்கும். இறுதியாக வரும் M காளையின் வாலாகவும் பின்னங் கால்களாகவும் இடையில் வரும் AR கச்சிதமாக அதன் உடலாகவும் அமைந்து இருக்கும். இத்தனையும் அடக்கி அற்புதமாக மரத்தில் காளை ஓவியத்திற்குள் தனது பெயரை செதுக்கியிருந்தார். அதுவே அவரின் இலச்சினையாகவும் இருந்தது. தான் வரையும் ஓவியத்தில் அந்த முத்திரையையும் அப்போ அவர் பதித்து வந்தார். தனது புத்தகங்களின் முதற்பக்கத்திலும் இந்த காளை முத்திரையை பதித்திருப்பார்.

அப்பொழுது தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். அந்த கிளர்ச்சி இளைஞர்கள் கன்னத்தில் கிருதாவும் குறுந்தாடியும் வைத்திருந்தார்கள். அது அந்த நேரத்து நாகரிகமாகவும் இருந்தது. தென்னிலங்கைக்கும் வடஇலங்கைக்கும் சம்பந்தமில்லாத போராட்டமது. ஆனாலும் முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டமிருக்கும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் விடுதியில் சனி, ஞாயிறுகளில் மாணவர்கள் தங்குவதில்லை. அதனால் மார்க் மாஸ்ரரும் வார விடுமுறைக்காக தனது ஊருக்குப் போய்விடுவார்.

ஒரு சனிக்கிழமை காலை, நகரம் களை கட்டியிருந்த நேரம், நகரத்தின் மத்தியில் இருந்த பஸ் நிலையத்தில் தனது ஊருக்குப் போவதற்காக மார்க் மாஸ்ரர் காத்திருந்தார். கூடவே நானும் அவருடன் நின்றிருந்தேன். அப்பொழுது ஜீப் வண்டியொன்று பஸ் நிலையத்துக்குள் வந்து சினிமா பாணியில் கிறீச்சிட்டு நின்றது. அதன் முற்பக்கத்தில் இருந்து காவல்துறை அதிகாரி இறங்கினான். இறங்கியவன் சுற்று முற்றுப் பார்த்தான். அவனுக்குத் தன் பெருமையை யாருக்காவது காட்டவேண்டும் அல்லது யாரையேனும் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்க வேண்டும். சிறிது நேர நோட்டத்துக்குப் பின் எங்கள் இருவரையும் நோக்கி வந்தான். எனக்கு அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பயப்படாதையும் என்று மார்க் மாஸ்ரர் எனக்கு ஜாடை காட்டினார். நேராக வந்தவன் மார்க் மாஸ்ரரை நெருங்கி நின்றான். அப்பொழுது மார்க் மாஸ்ரர் கன்னத்தில் நீளமாகக் கிருதா வைத்திருந்தார். அதைக் காட்டி என்ன என்று கேட்டான். மார்க் மாஸ்ரர் சிரிப்பால் பதில் சொன்னார். காவலதிகாரி அலட்சியமாக அவரைப் பார்த்தான். விபரீதமொன்று நிகழ வாய்ப்பிருப்பதாக மனது அச்சப்பட்டது.

காவலதிகாரி ஜீப்பிற்குப் சென்று திரும்பி வந்தான். அவனது கையில் இப்பொழுது குறடு ஒன்று இருந்தது. மார்க் மாஸ்ரரின் நாடியைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பினான். குறட்டையெடுத்து மார்க் மாஸ்ரரின் கன்னத்து கிருதா மயிர்களைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். மார்க் மாஸ்ரர் எதுவித சலனங்களையும் காட்டாது பேசாமல் இருந்தார். ஒரு மயிரை இழுத்துப் பிடுங்கும் போதே எவ்வளவு வேதனையிருக்கும்.

அந்த மிருகம் எதுவுமே செய்யாத அந்த அமைதியான மனிதனை வேதனைப்படுத்தி இன்பம் கண்டு கொண்டிருந்தது. எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் நினைவில் வந்தன.

'நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன?'

’சேர்.. அவர் ஒரு மாஸ்ரர்’ என்னையறியாமல் வார்த்தைகள் வந்தன. சிறிது நேரம் எங்கள் இருவரையும் அந்தக் காவலதிகாரி பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்.

பஸ் வந்தது. ஒன்றுக்கும் யோசியாதையும் சொல்லிவிட்டு மார்க் மாஸ்ரர் பஸ்ஸில் ஏறினார்.

ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

நீங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள நிலைமைகளை எப்படி எதிர்கொண்டிர்கள்? எப்போது ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தீர்கள்?
நிறையவே சிரமப்பட்டிருக்கின்றேன். படங்கள் வரைவதால் பெரியளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. மாறாக நண்பர்கள் போராளிகளாக இருந்ததால் எப்பொழுதும் எனது நிலையில் அச்சமே மேலோங்கி இருந்தது.
அதில் குறிப்பாக கணேஸ் மாமாவைச் சொல்லலாம். கணேஸ் பொலிகண்டியைச் சேர்ந்தவன். அவன் இந்தியா இலங்கை என ஓடிக் கொண்டிருந்தான். ஊரில் இருப்பானாயின் என்னைச் சந்திக்க வந்து விடுவான். இவனது தொடர்பே என்னை பெரிதும் இயக்கத்துக்குள் இழுத்து விட்டது.

இராணுவத்திற்கு தகவல் தருவோர் எனக்கு அருகாமைலிலேயே குடியிருந்தார்கள். அவர்களில் இருவரை மாணவர் அமைப்பு போட்டுத் தள்ள, பிரச்சினை பெரிதாகிவிட்டது. எந்த நேரமும் இராணுவம் ஊருக்குள் நுளைந்து விடும் அபாயம் இருந்தது.

கணேஸ் சொன்னான், இந்தியாவுக்கு கொண்டு போய் விடுகிறேன் வந்து விடு என்று. சொன்னவன் அன்று அவசர வேலையாக அக்கரைக்குப் போய் விட்டான். தவித்துக் கொண்டிருந்த எனக்கு, எனது பாடசாலை நண்பன் சிறீராம் ஒரு வழி சொன்னான். கிழக்கு யேர்மனிக்கு விசா தேவையில்லை. அங்கு போனால் மேற்கு யேர்மனிக்கு ரயில் ஏறி விடலாம் என்ற அவனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டேன். அவனே ரிக்கெற் செய்தும் தந்தான். அவன் சொன்ன வழியில் யேர்மனிக்கு 1984 நவம்பரில் வந்து சேர்ந்தேன். இதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

அக்கரைக்குப் போன கணேஸ் திரும்பி வந்து நான் யேர்மனி போனதை அறிந்து பெரிதும் கவலைப்பட்டானாம். அடுத்த தடவை அவன் கடலில் பயணம் செய்யும்போது கடற்படை தாக்கியதில் 24 பேருடன் சேர்ந்து இறந்து போனான். அவன் இறந்ததை எனது மகனே எனக்கு அறிவித்திருந்தான்.

மூன்று மாவீரர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடியுள்ளீர்கள். அவர் குறித்தும் உங்கள் குழந்தைகள் தொடர்பிலும் சொல்லுங்களேன்?
நான் யேர்மனிக்கு வந்த பின்னரே அவர்கள் போராளிகளானார்கள். அவர்களது தந்தையார் 58 கலவரத்தில் தனது உடைமைகளை இழந்திருக்கிறார். 76இல் மீண்டும் உடைமைகள் இழந்து கப்பல் ஏறி காங்கேசன்துறையில் வந்து இறங்கியிருக்கிறார். 83 இல் கண்டியில் பணிபுரியும் போது தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இவை எல்லாம் சேர்ந்து அவர்களை இயக்கத்தின் பால் இழுத்துச் சென்றிருக்கலாம்.
இதில் மூத்தவர் பிரேமராஜன் ஒரு போராளிக் கவிஞன்.

அடுத்தது எனது மனைவி சந்திரவதனா. பெண் விடுதலை பற்றி அதிகம் எழுதியவர். எழுதிக் கொண்டிருப்பவர். அவரின் தங்கை சந்திரகுமாரி அதிகம் பேசப்படும் ஒரு எழுத்தாளர். ஐபிசி வானொலி அறிவிப்பாளர் மற்றும் சமுத்திரா என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

எனது பிள்ளைகள் என்று பார்க்கையில், அவர்களுக்கும் தமிழரது நிலமைகள் தெரிந்திருக்கிறது. 2002இல் வன்னிக்கு சென்று சமூக சேவைகள் செய்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் சென்றதால் நிலமைகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது மூன்று பிள்ளைகளும் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

இதில் இளையவன் யேர்மன் பத்திரிகை ஒன்றில் நிருபராகவும், எடிட்டராகவும் பணியாற்றுகிரான். அவனுக்கும் கட்டுரைகள் நன்றாக எழுத வருகிறது.

எனது சகோதரன் நித்தியகீர்த்தி, நியூசிலாந்து, அவுஸ்திரெலியா தமிழ்ச் சங்கத் தலைமைப் பதவியில் இருந்திருக்கிறார். மேலும் அவர் ஒரு எழுத்தாளரும் கூட.

எனது சகோதரியின் மகன் போராளியாக இருந்திருக்கிறான். அவனை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. இந்தச் சம்பவம் பற்றி எனது சகோதரன் நித்தியகீர்த்தியும், மனைவி சந்திரவதனாவும் தங்களது பார்வைகளில் சிறுகதைகளாகப் பதிந்திருக்கிறார்கள்.

எப்போது உங்கள் முதல் ஓவியத்தைதை வரைந்தீர்கள்?
எனது இளவயதிலேயே நான் ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டேன். அவை ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பிரசுரமாகியுமுள்ளன.

எப்போது உங்கள் முதல் கார்ட்டூனை வரைந்தீர்கள்? அதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது?
இதற்கு நான் ஐபிசி வானொலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஐபிசி தமிழ் வானொலியில் முன்னர் பணியாற்றிய அறிவிப்பாளர்களை தட்டிக் கொடுக்க, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி சம்பந்தமாக கருத்துக்களை கேலியாக வரைந்து அனுப்பிக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த அன்றைய ஆங்கிலச் செய்தி வாசிப்பாளர் செல்வி.பவானி பாலசுந்தரம் (வினோ), ஏன் நீங்கள் பத்திரிகைக்கு வரையக்கூடாது என்று கேட்டதோடு மட்டுமன்றி இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.
தமிழ் கார்டியனில் அரசியல் துறையின் பொறுப்பை ஏற்றிருந்த திரு.சுதன் நடராஜாவின் அரசியல் கருத்துக்களுக்கு ஏற்ப எனது அரசியல் கிறுக்கல் ஆரம்பமானது.

இதில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்றைய காலத்தில் ஐபிசியில் பணியாற்றிய அத்தனை பேரையும் கேலிச்சித்திரங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பணிப்பாளர்களாக இருந்த திரு. தாசீசியஸ், திரு.றஞ்சித் அவர்களையும் நான் விட்டு வைக்கவில்லை. எல்லோரும் ஓட்டுமொத்தமாக அந்தக் கேலிச் சித்திரங்களை வரவேற்றார்கள். என்னைத் தட்டிக் கொடுத்தார்கள்.

ஆக மொத்தம் புலம்பெயர் தமிழரில் ஒரு கேலிச்சித்திரக்காரனை உருவாக்கிய பெருமை அன்றைய ஐபிசி வானொலிக்கே உரியது.

உங்களது படைப்புகளை ஊடகங்கள் தவிர்ந்த வேறு தளங்களில் மக்களின் பார்வைகளுக்கு வைத்துள்ளீர்களா?
ஜேர்மனிக்கு வந்த ஆரம்பகாலங்களில் எமது நாட்டின் அவலங்களை வெளிப்படுத்தக் கூடிய ஓவியங்களை நான் அவ்வப்போது வரைந்து கொண்டிருந்தேன். அந்த ஓவியங்களை நான் தங்கியிருந்த நகரிலும், எனது நகரத்தை ஒட்டிய மற்றைய நகர்களிலும் ஜேர்மனிய மக்களின் பார்வைகளுக்கு வைத்து கருத்தரங்குகளும் செய்துள்ளேன்.
ஆனாலும் அந்த நேரத்தில் அரசியல் தஞ்சம் கோரியோர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளின் மத்தியில் வெளி நகரங்களுக்குந் சென்று பெரியளவான காட்சிப்படுத்தல்களை செய்ய முடியாதிருந்தது. பிற்பட்ட காலங்களில் அரசியல் அமைப்புகளின் செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டிருந்ததால் அவர்களின் நிகழ்வுகளில் எனது ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

கேலிச்சித்திரங்களை வரைவதால் விமர்சனங்களுக்கோ, பாராட்டுதல்களுக்கோ ஆளாகியிருக்கிறீர்களா?
பெரியளவில் விமர்சனங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பது உண்மை. பாராட்டுதல்கள் அவ்வப்போது வருவதுண்டு.
யேர்மனியில் ஒரு தடவை திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கலந்து கொண்ட அரசியல் கூட்டத்திற்குப் போயிருந்தேன். கூட்டத்திற்கு முன்னர் அவர் தங்கியிருந்த அறைக்குள் செல்லும் வாய்ப்பு எனக்கும் எனது மனைவிக்கும் கிட்டியது.
உள்ளே போனோம். அரங்கத்திற்குள் இருக்க வேண்டிய பாதிப்பேர் அங்கே நிறைந்திருந்தார்கள். ஆனாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது மனைவியின் சகோதரனை அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடன் எனது மனைவி உரையாடும் போது இவர் எனது கணவர் ஒரு கார்டூனிஸ்ட் என்று அறிமுகம் செய்தார். உடனடியாக அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தை ’மூனா'. இவர் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நாள் உங்களையும் எனது கிறுக்கலுக்குள் கொண்டு வருவேன் என்றேன். 'ஏன், இப்பொழுதே கொண்டு வா' என்று பேப்பரையும் பேனாவையும் வரவழைத்துத் தந்தார். அப்பொழுது கிடைத்த இரண்டு நிமிடத்தில் நான் கிறுக்கித் தர அதற்குக் கையெழுத்திட்டு, பாராட்டி விட்டுப் போனார்.
அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது நேரம் அதிகம் எடுத்து அவரை வர்ணத்தில் வரைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த எண்ணம் மட்டும் எனக்குக் கை கூடவில்லை. அவர் அமரத்துவம் அடைந்தபோது கறுப்பு வெள்ளையில் தமிழ்கார்டியனில் முழுப் பக்கத்தில் அவரை வரைந்த போது மனது பெரிதும் சிரமப்பட்டது.

போரும் படுகொலைகளும் நிகழ்ந்த காலத்தில் ஒரு ஓவியராக உங்கள் மனநிலை எப்படியிருந்தது? அந்த உணர்வுகளை எப்படி ஒவியங்களில் வெளிப்படுத்தினீர்கள்?
மற்றவர்களைப் போல் எனக்கும் கவலைகள் அதிகமாக இருந்தது. ஒவ்வொன்றாக இழக்கும் போதும், அவலங்களைக் கேட்கும்போதும் யாரேனும் சிங்கள அரசைத் தட்டிக்கேட்க மாட்டார்களா? இந்த அவலங்களை நிறுத்த மாட்டார்களா என்ற நப்பாசை என்னுள் இறுதி வரை இருந்தது. அதற்காகவே பல படங்களை வரைந்திருந்தேன். ஊர்வலங்களுக்கெல்லாம் நான் கீறிய படங்கள் போனது. ஆனால் எங்களுக்கான முடிவுதான் மாறிப் போயிற்று. அந்த அவலமான முடிவோடு நானும் ஒரு முடிவுக்கு வந்தேன்
'மூனா' வையும் இத்தோடு முடித்து விடுவதென்று. அதன்படி 'இணையில்லாதவன்' என்று தலைப்பிட்டு ஒரு படம் வரைந்தேன். அத்தோடு எனது கிறுக்கல் ப்ளாக்கையும் மூடிவைத்து விட்டேன்.

அதன் பிறகும் நீங்கள் கேலிச்சித்திரங்கள் வரைகிறீர்களே?
உண்மை. இது ஒருவருடைய வேண்டுகோளுக்காக. நண்பர் ஒருவர் பொங்குதமிழ் இணையத்துக்கு கேலிச் சித்திரங்கள் வேண்டும் என்றார். மறுக்க முடியவில்லை.

அத்தோடு புதிய வழியில் புதுச்சூழலில் எங்களது பயணம் தொடங்குகிறது. நானும் சேர்ந்து பயணிப்பதுதானே முறை. ஆனால் இம்முறை 'மூனா' போய் 'தூனா' வந்திருக்கிறார்.

ஒரே பொருளில் அமைந்த அனுபவங்களை வித்தியாசமாகப் படைப்பாக்குவதில் உங்களின் அனுபவங்கள் எப்படி இருக்கின்றது?
எப்பொழுதும் ஒரே பொருள்தான். சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழரை இல்லாதொழிக்க வேண்டும், என்பதுதான் பொருளாக இருக்கிறது. லலித் அத்துலத்முதலி தொட்டு கோத்தபாய ராஜபக்ச வரை ஒரே கொள்கையைத் தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரே பொருளை வைத்துக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் வரும் போது நாங்களும் வெவ்வேறு முறையில் படைப்பாக்க வேண்டி இருக்கிறது.

இதற்காக நிறையவே சிந்திக்க வேண்டி இருக்கிறது. செய்திகளை, கட்டுரைகளை முழுவதுமாக உள்வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலை நேரங்களில் கூட இதே சிந்தனையுடனே இருக்க வேண்டிய நேரங்களும் இருந்திருக்கிறது. ஆனாலும் ஒன்றை உருவாக்கி அதனை ஆசிரியர் குழு ஏற்றுக் கொள்ளும் போது ஒரு நிறைவு இருக்கிறது. அதுவே அடுத்த படைப்புக்கு தானாக அழைத்துச் செல்லகிறது.

ஓவியங்கள் தவிர உங்களுக்கு நாடகத்தறையிலும் ஈடுபாடு இருக்கிறதே? இருந்தது என்பதே சரியாக இருக்கும்.
திருமதி சந்திரா இரவீந்திரன் ஐபிசி வானொலிக்கு தயாரித்து வழங்கிய 'சமுத்திரா' நிகழ்ச்சியை பாராட்டி ஒரு கேலிச் சித்திரம் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சித்திரம் நகைச்சுவையாக இருக்கிறது. 'சமுத்திரா'வுக்கு ஆக்கங்கள் தேவை. நகைச்சுவையாக ஒரு நாடகம் எழுதிப் பாருங்களேன் என்று அவர் கேட்டு வைக்க, எழுத ஆரம்பித்தேன். ஐம்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதி இருப்பேன் என நினைக்கிறேன்.

உங்கள் இலட்சியம், கனவு குறித்துச் சொல்லுங்கள்?
எல்லோரைப் போலவும் ஒரே கனவு, ஒரே நினைவுதான். தமிழருக்கு ஒரு தீர்க்கமான தீர்வு வர வேண்டும் என்பதே அது. அன்று ஆறுதலாக இருந்து மகிழ்ச்சியாக ஒரு படம் கிறுக்க வேண்டும். நிம்மதியாக இருக்கும்.

நேர்கண்டவர் : இளந்திரையன்
நன்றி : பொங்குதமிழ்