Friday, August 22, 2014

ஐசாக் இன்பராஜா (லூஸ் மாஸ்டர்)

சமூக சேவை செய்வது மட்டும் அல்ல அதை அர்ப்பணிப்புகளோடு செய்வது எல்லோருக்கும் கூடி வராது. ஒரு சிலருக்கே அது அமைகிறது.

நான் சந்தித்த அந்த ஒரு சிலரில் ஐசாக் இன்பராஜாவும் ஒருவர். அவரை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல் ஒரு சமூக சேவையாளராகவுமே நான் கணித்திருந்தேன்.

யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரச்சாரப் பகுதிக்குப் பொறுப்பாளராக நான் இருக்கும் பொழுது, ஐசாக் இன்பராஜாவுடனான எனது தொடர்பு ஆரம்பமானது. அதற்கு முன்னர் ஒரு வீடியோ கிளிப்பில் அவரது „லூஸ் மாஸ்ரர்' நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருந்தேன். ஒரு ஆசிரியரைக் கிண்டலடிக்கும் தலைப்பாகவும், நிகழ்ச்சியாகவும் அது இருந்ததால், ஆரம்பத்தில் அவரது நிகழ்ச்சியில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் அந்தக் குறை தெரியாமல், நிகழ்ச்சியை அவர் எல்லோரும் இரசிக்கும் வண்ணம் நடாத்தும் பொழுது அந்தக் குறை எனக்கும் இல்லாமல் போயிற்று.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் யேர்மனியில் வருடத்திற்கு 12 முதல் 13 நிகழ்ச்சிகளை நாங்கள் நடாத்துவோம். அநேகமாக அந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் ஐசாக் இன்பரா ஜாவினது நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று கண்டிப்பாக இருக்கும். எங்கள் நிகழ்ச்சிகள் ஒட்டு மொத்தமாக புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களது நிகழ்ச்சிகளாகவே இருக்கும். யாருமே பணம் பெற்றுக் கொள்வதில்லை. எல்லாக் கலைஞர்களும் தங்கள் கலையை தமிழர் புனர்வாழ்வுக்காகவே அர்ப்பணித்தார்கள். அதில் முதன்மையானவர் ஐசாக் இன்பரா ஜா..
வருட ஆரம்பத்திலேயே எங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் நகரங்கள், அதற்கான திகதிகளை ஒழுங்கு செய்து விடுவோம். அதன் விபரங்களை அந்தந்த நகரத் தொண்டர்களுக்குத் தெரிவிக்கும் பொழுதே ஐசாக் இன்பரா ஜாவிற்கும் அறிவித்து விடுவோம். எங்களது திகதிகளுக்கு ஏற்ப அவர் தன்னை தயார்படுத்திக் கொள்வார்.

அன்றாட செய்திகளை விமர்சித்து தங்களது நாடகங்களில் தமிழகக் கலைஞர்களான எம்.ஆர்.ராதாவும், சோவும் விமர்சனம் செய்வார்கள். ஏறக்குறைய அதே பாணியை ஐசாக் இன்பரா ஜாவும் செய்வார். மேடை ஏறும் முன்னர் அவரது கையில் ஏதாவது ஒரு பத்திரிகை இருக்கும். அல்லது அந்தப் பத்திரிகைக்குள் ஏதாவது ஒரு சஞ்சிகை குடி இருக்கும்.

„என்ன உங்கடை ஆக்கள் எல்லாரும் ரொயிலற்றுக்குள்ளை கோலா குடிக்கிறவையளே. நான் போன ஒவ்வொரு தமிழரின்ரை வீட்டு ரொயிலற்றுகளுக்குள்ளையும் ஒரு கோலா போத்தல் இருக்குது' என்று ஒரு யேர்மன்காரன் என்னைக் கேட்டவன் என்று அப்பாவியாக அவர் சொல்லும் பொழுது அதை எந்தளவுக்கு பார்வையாளர்கள் இரசித்திருக்கிறார்கள் என்பதை நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் மக்களிடம் சென்று நிகழ்ச்சிக்கு இருக்கைகளை முன் பதிவு செய்யும் பொழுது அவர்களிடம் இருந்து வரும் கேள்வி, „ஐசாக் இன்பரா ஜாவின்ரை நிகழ்ச்சி இருக்குத்தானே?'

இந்த ஒன்றே போதும் அவர் எந்தளவு மக்களைக் கவர்ந்திருக்கிறார், அவரது நிகழ்ச்சியை எந்தளவுக்கு மக்கள் இரசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள.

2003இல் எங்களுடைய நிகழ்ச்சி ஒன்று மே மாதம் நடப்பதாக இருந்தது. பார்வையாளர்களும் அதற்கான முன்பதிவுகளைச் செய்து விட்டனர். ஆனால் தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களது நிகழ்ச்சி ஒன்று குறுக்கிட்டதால் எங்களது நிகழ்ச்சியை தள்ளிப் போட வேண்டியதாயிற்று. வேறு ஒரு திகதி குறித்து மண்டபம் எடுத்து நிகழ்ச்சியை நடாத்த வெளிக்கிடும் பொழுதுதான், ஐசாக் இன்பராஜாவிற்கு அதே திகதியில் வேறு இடத்தில் நிகழ்ச்சி ஒன்று இருந்தது தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியை ஒரு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அதுவும் நாங்கள் நிகழ்ச்சி நடாத்தும் இடத்தில் இருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில்தான் அவர்களது நிகழ்ச்சியும். இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக அந்த விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட பொழுது நிகழ்ச்சிகளிலோ நிகழ்ச்சியின் திகதியிலோ அவர்கள் மாற்றம் செய்ய மறுத்து விட்டார்கள்.

„தம்பி என்னடாப்பு செய்யிறது? அவையளுக்கு முதலிலை ஓம் எண்டிட்டன். இப்ப மாட்டன் என்று சொல்லிப் போட்டு உங்கடை இடத்திலை வந்து செய்யிறது நல்லா இருக்காது.' ஐசாக் இன்பராஜாவிற்கு இருந்த சங்கடம் எனக்குப் புரிந்தது.

ஒரு கலைஞனுக்கு அதுவும் தாயகத் தமிழருக்காக வருடா வருடம் ஓடி வந்து தனது பங்களிப்பைத் தரும் ஒரு நல்லவருக்கு சிரமங்கள் தர நான் விரும்பவில்லை.

„எங்களுக்கு தேதி தந்திருந்தீங்கள். அதை நாங்கள் பயன் படுத்தவில்லை. அது எங்களின்ரை பிழை. நீங்கள் அங்கேயே போங்கோ. அதுதான் சரி. நாங்கள் அடுத்தமுறை சரியாச் செய்வோம்'

„சந்தோசம் தம்பி'

அன்றைய எங்களது நிகழ்ச்சி ஐசாக் இன்பராஜா இல்லாமலேயே நடந்தது.

நிகழ்ச்சிக்கு மறுநாள் மறக்காமல் தொலைபேசியில் கதைத்தார். தனது பங்களிப்பு அந்த நிகழ்ச்சிக்கு இல்லாமல் போனதில் அவருக்கு கவலை இருந்தது தெரிந்தது.

அடுத்த வருடம் அவரும் நானும் எதிர்பார்த்த கலை நிகழ்ச்சி நடக்கவில்லை. சில நடைமுறைகள் எனக்கு ஒத்து வராததால் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரச்சாரப் பகுதியில் இருந்து நான் வெளியேறி இருந்தேன். அந்த அற்புதக் கலைஞனின் தொடர்புகள் அத்துடன் எனக்கு நின்று போய் விட்டது.

அவரது மரணம் பெரும் சோகம்.

பற்களில் இரண்டு இல்லாமல் இருப்பது போல் காட்டுவதற்காக இரண்டு பற்களில் கறுப்பு மை பூசிக் கொண்டே மேடையில் வலம் வருவார். அந்த இரு பற்கள் இல்லாத லூஸ் மாஸ்ரரின் சிரிப்பு என்றும் மாறாது.

Isak Inparajah 31.08.1994

மூனா
01.08.2014

Saturday, June 28, 2014

எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்

Thumilan Selvakumaranபொங்குதமிழ் இணைய இதழுக்காகப் பேட்டி கண்டவர் காண்டீபன்
துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர்.

இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது.

NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யேர்மனியப் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இப் புத்தகம் பற்றிப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களின் நேர் காணல்களும் இடம் பெறுகின்றன.

துமிலனை பொங்கு தமிழ் இணையம் இந்தப் புத்தகம் சம்பந்தமாக நேர்காணல் செய்திருக்கிறது.


நீங்கள் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதிய புத்தகம் குறிப்பாக யேர்மனிய மொழி பேசும் மக்களுக்குள்ளேயே இருந்துவிடப் போகிறது. அதைப் பற்றி மற்றைய நாடுகளில் உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்தப் புத்தகத்தில் என்ன விடயத்தை உள்ளடக்கி இருக்கிறீர்கள்?

யேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான சில திரைமறைவு அமைப்புக்களின் செயற்பாடுகளை வெளியில் காண்பிக்க எத்தனித்திருக்கிறோம். அதில் நான் அதிகமாகக் காண்பித்த அமைப்பாக கூ-குளுக்ஸ்-கிளான் இருக்கிறது. கூ-குளுக்ஸ்-கிளான் பற்றி இப்பொழுதுள்ள பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது ஏறக்குறைய 150 ஆண்டுகள் பழமையான அமைப்பு. ஆனாலும் இன்று சிலர் இதற்கு ஒக்சிசன் கொடுத்து உயிரூட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அந்த அமைப்பைப் பற்றி விளக்கம் தர முடியுமா?

கூ-குளுக்ஸ்-கிளான் என்பது அமெரிக்காவில் 1865இல் ஒரு நத்தார் தினத்தில் நிறுவப்பட்டது. வடக்கு அமெரிக்காவிலும் தெற்கு அமெரிக்காவிலும் நடந்த ஒரு உள்நாட்டு யுத்தத்தில் இந்த அமைப்பு முக்கிய பங்கு கொண்டது. வடக்கு அமெரிக்கர்கள் கறுப்பு இன மக்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்றார்கள். தெற்கு அமெரிக்கர்கள் அதற்கு முரண் பட்டார்கள். கறுப்பு இனத்தவர்கள் பஸ்சில் அமரக் கூடாது, பாடசாலை செல்லக் கூடாது அவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ற விடயங்களில் கூ-குளுக்ஸ்- கிளான் உறுதியாக நின்றது. மேலும் யூத இனத்தவரோ, கறுப்பு இனத்தவரோ வெள்ளை அமெரிக்கர்களை மணம் செய்யவும் கூடாது என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது. இவ்வளவு தவறான கொள்கைகளுடன் அந்த அமைப்பு தன்னை மதரீதியாகவே காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல என்பது பலருக்குத் தெரிந்திருந்தது. கறுப்பு இனத்தவரைக் கடத்துவது எரித்துக் கொல்வது, மரத்தில் கயிறு மாட்டி அதில் தூக்கிட்டுக் கொலை செய்வது என இந்த அமைப்பு பல நூறு கறுப்பு இனத்தவர்களை அழித்திருக்கிறது. நல்லவேளையாக அன்று நடந்த உள்நாட்டு யுத்தத்தில் வடக்கு அமெரிக்கா வெற்றி கொண்டதால், கறுப்பு இனத்தவர்கள் அடிமைகள் என்பதில் இருந்து வெளியே வந்து அமெரிக்கர்களுக்கு இணையாக பயம் இன்றி வாழத் தொடங்கினார்கள். யுத்தத்தில் தோற்றுப் போனதால் படிப்படியாக செல்வாக்கு இழந்து கூ-குளுக்ஸ்-கிளான் பத்து ஆண்டுகளில் இல்லாமல் போயிற்று.

1915இல் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு மீண்டும் அமெரிக்காவில் புதுப்பிக்கப் பட்டது. ஒரு தேசிய அமைப்பாக உருப்பெற்ற இந்த அமைப்பு 1920இல் 4,000,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதே காலப் பகுதியில் இந்த அமைப்பின் மேல் ஆர்வம் கொண்ட யேர்மனியர் சிலரால், இந்த அமைப்பு யேர்மனியிலும் தோற்றம் பெற்றது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் யேர்மனிக்குள் பிரவேசித்த அமெரிக்கப் படையில் அங்கம் வகித்த பலர் இந்த அமைப்பில் இருந்திருக்கிறார்கள். இது யேர்மனியில் இவ் அமைப்பு மேலும் வலுப்பெற ஏதுவாக இருந்தது.

காலப்போக்கில் இவ்வமைப்பு வலுவிழந்து போனாலும் இந்த அமைப்பில் இன்னமும் 5000 தொடக்கம் 8000 வரையிலான உறுப்பினர்கள் இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்த அமைப்பு இரகசியமாக இயங்கும் ஒரு அமைப்பாகவே இப்பொழுது இருக்கிறது.

இந்த அமைப்பு யேர்மனியில் இன்னமும் இருக்கிறதா?
இருக்கிறது.

இந்த அமைப்பை யேர்மனிய அரசாங்கம் தடை செய்யவில்லையா?
அதில்தான் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. கூ-குளுக்ஸ்-கிளான் என்ற பெயரில் யேர்மனியில் சில சில நகரங்களில் சில சில குழுக்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒரு குழுவுக்கும் மற்றைய குழுவுக்கும் சம்பந்தம் கிடையாது. பெயரளிவில்தான் ஒற்றுமையே தவிர கொள்கையளவில் அவர்கள் ஒன்று சேரவில்லை. அதுபோக யேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக அவர்கள் நடந்து கொண்டதற்கான சம்பவங்களோ, சாட்சியங்களோ இல்லை. ஆகவே அவர்களைத் தடைசெய்ய யேர்மனியச் சட்டத்தில் இடம் இல்லை.

யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றால் அவர்களைப் பற்றி நீங்கள் புத்தகத்தில் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?

இதை ஓரிரு வரியில் சொல்லி விட முடியாது.

பேர்லினில் இருந்து ஒரு பத்திரிகை 2011இல் ஒரு கட்டுரை வரைந்திருந்தது. அதில் Schwaebisch Hall என்ற நகரில் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு இருக்கிறது என எழுதப்பட்டு இருந்தது. தற்செயலாகத்தான் நான் அதை வாசிக்க நேர்ந்தது. Schwaebisch Hall நகரத்தில்தான் நான் வசிக்கிறேன். இங்கேதான் பத்திரிகைத் துறையில் இருக்கிறேன். அதனால் எங்கே இந்த அமைப்பு இருக்கிறது எனத் தேடும் ஆவல் எனக்குள் எழுந்தது. அதன் பின் இது விடயமாகப் பல தேடுதல்களையும், தகவல் சேகரிப்புகளையும் மேற் கொண்டேன். இறுதியாக Schwaebisch Hall நகரில் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பின் உறுப்பினர் ஒருவரது தகவல் ஒன்று கிடைத்தது.

எப்படிக் கிடைத்தது என்பதை அறியலாமா?


ஒரு பத்திரிகையாளனுக்கு உள்ள உரிமையின் படி அதைச் சொல்வதற்கு இல்லை. யேர்மனியப் பொலிஸ் கேட்கும் பட்சத்திலும் இதே பதில்தான்.

சரி. மேற்கொண்டு சொல்லுங்கள்.

அந்த நபருடன் பல தடவைகள் தொலைபேசியில் அழைத்துக் கதைத்திருக்கிறேன். ஆனால் தகவல்கள் தரவோ, தன்னைச் சந்திக்கவோ முதலில் அவர் இடம் தரவில்லை.

ஒருநாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. என் மீதும், என் எழுத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை வந்திருந்தது. ஒரு மணித்தியாலத்துக்குள் வர முடியுமானால் சந்திக்கலாம் என ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். அலுவலகத்தில் வேலையில் இருந்தேன். சந்தர்ப்பத்தை நழுவ விட மனம் இல்லை. ஏதோ ஒரு உந்துதலில் „சரி வருகிறேன்' என்றேன். குறிப்புகள் எடுப்பதற்கான பொருட்களை எடுத்துக் கொண்டேன். புறப்படும் பொழுதுதான் பார்த்தேன் அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடம் ஒரு அடர்ந்த காட்டுக்குப் போகும் பாதை. சிறிது தடுமாற்றம். நான் எதற்கு, எங்கே போகிறேன் என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது தகவல் தருபவரைக் காட்டிக் கொடுப்பது போலாகும். சரி வருவது வரட்டும் என்ற துணிவுடன் அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குப் போனேன்.

சொன்ன இடத்தில் நின்றார். அறிமுகம் செய்து கொண்டேன். வாருங்கள் நடந்தபடி கதைப்போம் என்றபடி காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தார். அவர்களது அமைப்பு வெறுக்கும் வெளிநாட்டவனாக நான் இருக்கிறேன். அவரை நம்பிப் போகலாமா? அதுவும் அடர்ந்த காட்டுக்குள். ஒருவித பய உணர்ச்சி இருந்தாலும் சேர்ந்து நடந்தேன்.

அவர் தான் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் தற்பொழுது இல்லை. தனக்கு திருமணம் ஆனதால் அதில் இருந்து விலகி விட்டேன் என்று தனது தற்போதைய நிலைப்பாட்டைக் கூறிவிட்டு, பிரயோசனமான தகவல் ஒன்றையும் உதிர்த்தார். அது கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இரு பொலிஸார் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதே. அவர்கள் இருவரும் Schwaebisch Hall நகரில் நடக்கும் இவ்வமைப்பின் கூட்டங்களுக்கு வந்து போவதாகவும் சொன்னார். அந்தத் தகவல்கள் எனக்கு மிகவும் பயன் பட்டன. ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அவரிடம் உரையாடி நிறையத் தகவல்களைப் பெற்றேன்.

இந்தத் தகவல்கள் அடிப்படையில்தான் கூ- குளுக்ஸ் -கிளான் பற்றிய உங்களது கட்டுரைகள் ஆரம்பமானதா?


வெறும் தகவல்களைப் பெற்று மட்டும் உடனடியாக எழுத முடியாது. தகவல்களில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது தெளிவான பின்னரே எழுத முடியும். ஆகவே உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டு „எனக்கு கூ- குளுக்ஸ்-கிளான் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?“ எனக் கேட்டேன். முப்பது நிமிடங்களுக்குள் பதில் தருகிறோம் என்றார்கள். ஆனால் மூன்று மணித்தியாலங்கள் காக்க வேண்டியதாயிற்று. அதில் இருந்து புரிந்து கொண்டேன். அவர்களுக்கும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் எனக்கு எந்தவிதத் தகவல்களைத் தரலாம், எதைத் தவிர்க்கலாம் என்று தங்களுக்குள் ஆராய்ந்து அதன் பின்னரே எனக்கு பதில் தந்திருக்கிறார்கள் என்று.

அவர்களுக்குத் தகவல்கள் எங்கே இருந்து கிடைக்கின்றன?


அவர்களிடம்தானே புலனாய்வுத் துறை இருக்கிறது. இரு பொலிஸார் கூ- குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இருக்கிறார்கள் என்றும், அதில் ஒருவர் பொறுப்பதிகாரி என்றும் இன்னும் சிலர் அதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.

அந்தப் பொலிஸார் மீது உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லையா?


நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு ஒரு இரகசியமாகச் செயற்படும் அமைப்பானாலும் எது வித குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதற்கான தகவல்கள் இல்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிருக்கலாம்.

குற்றச் செயல்களில் ஈடுபடாவிட்டாலும் ஒரு இனவாத அமைப்பில் நாட்டின் சட்டம், ஒழுங்கு போன்றவற்றிற்குப் பொறுப்பானவர்கள், உறுப்பினர்களாக இருப்பது தவறுதானே?

உண்மை. இங்கிருந்துதான், இந்த மையப்புள்ளியில் இருந்துதான் நான் பத்திரிகையில் எனது கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்.

முதலில் எங்கள் உள்ளூர் பத்திரிகையில் மட்டுமே எனது கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. பிற்பாடு எங்கள் மாநிலத்தின் முதன்மைப் பத்திரிகை நிறுவனமான தென் மேற்குப் பிரசுரம் அவற்றை தாங்களும் வாங்கி வெளியிட, பரவலாக அது நாடு முழுவதும் போனது.

இதன் பின்னர்தான் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு பற்றியும், அதனுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸார் பற்றியும் தொலைக்காட்சிகளும், வானொலிகளும் பேசத் தொடங்கின.

அந்தப் பொலிஸார் நிலை என்னவாக இருந்தது?
அவர்கள் மௌனமாகவே இருந்தனர். குற்றம் சுமத்தப் பட்டு இரண்டு வருடங்களுக்குள் ஒரு அரச ஊழியருக்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அவர்கள் அதிலிருந்து விடுவிக்கப் படுவார்கள். இந்த ஒரு சட்டத்தின் பிரகாரம் அவர்கள் இருவர் மீதும் உள்துறை அமைச்சு மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவர்கள் இன்னமும் பணியில்தான் இருக்கிறார்கள்.

இங்கே NSU என்ற அமைப்பு என்ன பங்கு வகிக்கிறது?


கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு மட்டுமல்ல. நியோநாசி போன்ற வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்புக்களும் NSU உடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இதற்கான ஆவணங்களை NSU அமைப்பைச் சேர்ந்த இருவரின் மரணங்கள் விட்டுச் சென்றிருக்கின்றன.

யாரந்த இருவர்?

அந்த இருவரும் NSU அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன் வேறு சில சம்பவங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

2000 இலிருந்து 2006 வரை துருக்கிய நாட்டவர் எட்டுப்பேரும், கிறீக் நாட்டவர் ஒருவரும் யேர்மனியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். 2004 இல் Koeln நகரில் துருக்கிய நாட்டவரின் வியாபரநிலையங்கள் நிறைந்த Holz வீதியில் ஆணிகள் அடங்கிய குண்டு வெடித்து 25 துருக்கியர்கள் காயப்படுத்தப் பட்டிருந்தார்கள். இந்தக் கொலைகளும் சரி, குண்டுத்தாக்குதலும் சரி, எவரால் செய்யப் பட்டது என்பது துப்புத்துலக்கப் படாமல் காவல்துறைக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால் இது ஏதோ ஒரு குழுவினால்தான் செய்யப்படுகின்றது என்ற ஊகம் யேர்மனியில் பரவலாக இருந்தது. இது தவிர 2007இல் Heilbronn நகரில் சேவையில் இருந்த இரு பொலிசார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் ஒரு பெண் பொலிஸ் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். ஒரு ஆண் பொலிஸ் படுகாயம் அடைந்திருந்தார். அவர்களது ஆயுதங்கள் கொலையாளி அல்லது கொலையாளிகளால் எடுத்துச் செல்லப் பட்டிருந்தன.

முதலில் நீங்கள் குறிப்பிட்ட வெளிநாட்டவர் மீதான தாக்குதலுக்கும், பொலிசார் மீதான இத்தாக்குதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?

அந்தக் கேள்விதான் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

இப்போ அதற்கான விடை கிடைத்து விட்டதா?


கிடைத்திருக்கிறது. ஆனால் அதில் தெளிவு இல்லை.

இப்போ உங்கள் பதிலில் எங்களுக்குத் தெளிவு இல்லை.

அதைத் தெளிவாக்குவதற்காகத்தான் நாங்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளோம். இப்புத்தகத்தையும் கொணர்ந்துள்ளோம்.

அப்படியானால் நீங்கள் எழுதியுள்ள இப்புத்தகத்தில் இச்சம்பவங்களுக்கான முடிச்சுகள் அவிழ்க்கப் பட்டுள்ளனவா?
முழுமையாக என்று சொல்ல முடியாது. முயன்று இருக்கிறோம்.

இப்பொழுது நான் முன்னர் குறிப்பிட்ட அந்த இரண்டு பேரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

சொல்லுங்கள்.
Mundlos, Boehnhardt என்ற இருவரின் மரணங்கள்தான் சில விடயங்களைத் தெளிவாக்கி இருக்கிறது.

இந்த இருவரும் NSU வின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்களுடன் ஒரு பெண்ணும் இருந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது. அவரது பெயர் Beate Zschaepe. நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்த இவர்கள் தங்கள் தேவைக்காக பல வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இவர்கள் சைக்கிளில் சென்று வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்த பின்னர் வீதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் ஒரு கரவனுக்குள் சைக்கிளை வைத்து விட்டு தாங்களும் அதற்குள் ஒளித்துக் கொண்டு விடுவார்கள். பொலிஸார் கொள்ளையர்களையும் அவர்கள் பயணித்த சைக்கிள்களையும் வெளியில் தேடிக் கொண்டிருப்பார்கள். ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் கரவனுக்குள் அமைதியாக இருப்பார்கள். அமளிகள் ஓய்ந்த பின்னர் வெளியே வருவார்கள். இவர்களின் இந்தத் தந்திரமான செயலால் நீண்ட நாட்களாகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் இவர்களை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

04.11.2011இல் Mundlos, Boehnhardt இருவரும் வங்கி ஒன்றில் கொள்ளை அடித்து விட்டு வழக்கம் போல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கரவனுக்குள் போய் ஒளித்துக் கொண்டார்கள். சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கரவனை பொலிஸார் நெருங்கும் போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. கூடவே கரவனும் தீப்பற்றிக் கொண்டது. தீயை அணைத்து உள்ளே சென்ற பொலிஸார் Mundlos, Boehnhardt இருவரையும் பிணமாக மீட்டிருக்கிறார்கள். கரவனுக்குள் இருந்து, Heilbronn பொலிஸாரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட ஆயுதங்கள் மற்றும் ஒன்பது வெளிநாட்டவர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள், 110,000 யூரோக்கள் என்பன கண்டெடுக்கப் பட்டன. இன்னும் சில ஆவணங்களையும் பொலிஸார் எடுத்திருந்தனர்.

ஆகவே கொலையாளிகள் யார் என்று தெரிந்து விட்டனர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது.
இல்லை. முடிவுக்கு வந்தது போல் தெரியும். அல்லது முடித்து வைக்கப் பட்ட தோற்றத்தைத் தருவதாக ஜோடிக்கப் பட்டிருக்கலாம்.

ஏன் அப்படிக் கருதுகிறீர்கள்?
இவர்கள் இருவரும் இறந்த சிறிது நேரத்தில் இவர்களுடன் ஒன்றாக இருந்த Beate Zschaepe தாங்கள் வசித்து வந்த வீட்டைக் குண்டு வைத்துத் தகர்த்து விட்டுத் தப்பி ஓடி விட்டார். பின்னர் இவர் கைது செய்யப் பட்டது வேறு விடயம். ஆனால் அந்த இருவரும் இறந்து விட்டார்கள் என்பது Beate Zschaepe க்கு எப்படித் தெரியும். யார் தகவல் தந்திருப்பார்கள் என்ற கேள்வி இருக்கிறது.

போதாதற்கு கரவனுக்குள் இருந்து மூன்றாவது நபர் ஒருவர் வெளியே சென்றதாக சாட்சியம் இருக்கிறது. கரவனுக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் கரவன் தீப்பற்றியதாகவும் பொலிஸி;ன் அறிக்கை சொல்கிறதே தவிர பொது மக்களின் சாட்சியங்கள் அங்கே போதுமானதாக இல்லை.

போலிஸார் மீதே சந்தேகப் படுகிறீர்களா?
சந்தேகங்கள் என்பதை விட. தெளிவாக இல்லை என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

NSU என்பது மூன்று பேர் கொண்ட அமைப்புத்தான் என்று அரசாங்கம் கருதுகிறது. எங்களால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அது பலரை உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பு பொலிஸாரிடம் இருந்து கூடக் கிடைத்திருக்கலாம். அதற்கான அனுகூலங்கள் இருப்பதாகக் கருதுகிறோம்.

எதை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்?

இருவரது மரணத்தின் பின்னர் கரவனில் இருந்து எடுக்கப் பட்ட ஆவணங்களில் இருந்து கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இருக்கும் இருவருக்கும் NSUக்கும் தொடர்பு இருந்தது நிருபணமாகி இருக்கிறது. Heilbronn நகரத்தில் கொலை செய்யப்பட்ட Michele Kiesewetter மற்றும் படுகாயப் படுத்தப் பட்ட Martin.A ஆகிய இரு பொலிஸாரின் பொறுப்பதிகாரிக்கும் கூ-குளுக்ஸ்.கிளான் அமைப்புக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. Heilbronn நகரம் 117,000 மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நகரம். அந்த நகரத்தில் ஒரு பகல் பொழுதில் கடமையில் இருக்கும் பொலிஸார் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள புகையிரத நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் பொலிஸ் பொறுப்பதிகாரி நின்றிருக்கிறார். தாக்குதலை நிகழ்த்தி விட்டு இரண்டு பொலிஸாரையும் வாகனத்தில் இருந்து இழுத்துக் கீழே போட்டு அவர்களின் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் கொலையாளிகள். இவை எல்லாவற்றையும் எந்தவித பதட்டமும் இன்றி, நேரம் எடுத்து, ஆறுதலாகச் செய்திருக்கிறார்கள். அந்தச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி சிலர் இருந்து, மக்கள் நடமாட்டத்தை அவதானித்து கொலையாளிகளுக்குத் தகவல் தராதிருந்திருந்தால் அது சாத்தியப் பட்டிருக்காது.

போதாததற்கு, தோளில், கையில், காலில் இரத்த அடையாளங்களுடன் வெவ்வேறு ஆட்களைக் கண்டதாக 12 சாட்சிகள் இருக்கின்றன. அப்படிப் பார்க்கையில் குறைந்தது மூவராவது அங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்பு படுகிறார்கள். ஆனால் Mundlos, Boehnhardt இருவரின் மரணத்தின் பின்னர் இருவரும்தான் கொலையாளிகள் என ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

சம்பவத்தின் பின்னர் Heilbronn நகரில் இருந்து வெளியே சென்ற 30000 வாகனங்கள் சோதனை செய்யப் படவில்லை. மாறாக, வாகனங்களைச் செல்ல விட்டு அவற்றின் இலக்கங்களை மட்டும் பதிந்து வைத்திருக்கிறார்கள். அப்படிப் பதிந்து வைத்த பதிவேட்டில் Mundlos, Boehnhardt இருவரும் பயணம் செய்த கரவனின் இலக்கமும் இருந்திருக்கிறது.

உங்களது கூற்றை வைத்தப் பார்த்தால், கொலையாளிகளை நோக்கி துப்புத் துலக்காமல், வேண்டும் என்றே அதை வேறு திசைக்குத் திருப்பி இருக்கிறார்கள் என்று கொள்ளலாமா?


அதற்கும் சாத்தியம் இருக்கலாம். இன்னும் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

Heilbronn நகரில் ஒரு இளைஞன் தனக்கு Michele Kiesewetter ஐ கொன்ற கொலையாளியைத் தெரியும் என்று தனது நண்பன் ஒருவனுக்குச் சொல்கிறான். அந்த இளைஞனுக்கும் நியோநாசிக்கும் முன்னர் தொடர்பு இருந்திருக்கிறது.

அந்த இளைஞன் கொலை பற்றி சொன்னதை அறிந்து புலனாய்வுத்துறை அவனை விசாரிப்பதற்காக மாநிலத்தின் தலைநகர் Stuttgart ; ற்கு அவனை அழைக்கிறது. மாலை 5.00 மணிக்கு அவனது விசாரணைக்கான நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் அன்று காலை 9.00 மணிக்கு அவனது வாகனம் தீப்பற்றி எரிந்து அந்த இளைஞன் அவனது வாகனத்துக்குள்ளேயே இறந்து கிடக்கிறான். காதல் தோல்வியால் வாகனத்துக்குள் பெற்றோல் ஊற்றி, தீமூட்டி அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக அவனது கதையை பொலிஸ் முடித்து விடுகிறது.

காதல் தோல்விகளால் பல தற்கொலைகள் நாள்தோறும்தானே நடந்து கொண்டிருக்கின்றன.


உண்மை. ஆனால் அந்த இளைஞனின் தாயும், அவனது காதலியும் அதை மறுக்கிறார்களே. அவர்கள் இருவரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மறுபக்கமாகப் பர்த்தால் தற்கொலை செய்பவர்கள் தனிமையான ஒரு இடத்தைத்தான் தேடுவார்களே தவிர சன நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தை விரும்ப மாட்டார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சாட்சி „சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது வீதி ஓரத்தில் நின்ற வாகனம் பெரிதாக தீப்பற்றி எரிந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின' என்று இருக்கிறது. ஆக உள்ளிருந்த இளைஞன் தீயின் வெப்பத்தில் அலறியதாகவோ, வலியில் துடித்ததாகவோ சாட்சி பதியவில்லை. ஆகவே இளைஞன் முதலிலேயே இறந்தானா? யாராவது வாகனத்துக்கு தீமூட்டினார்களா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

அப்படியாயின் சாட்சியங்களை திட்டமிட்டே அழிக்கிறார்கள் என்று கருதலாமா?


அதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.

Michele Kiesewetter கூட அவர்களுக்கு உள்ளிருந்து உதபுவராக அல்லது அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவராகம் இருந்திருக்கலாம். அவர்களை விட்டு விலக நேர்ந்த பொழுது அல்லது அவர்களுக்குப் பிரச்சினையாக உருவாகும் பொழுதுதான் கொல்லப் பட்டிருக்க வேண்டும்.

இதில் Michele Kiesewetter உடன் கடமையில் இருந்து படுகாயமடைந்த Martin.A தாக்குதல்களின் பின்னால் கொலையாளிகளின் அங்க அமைப்புகளைத் தெளிவாக விவரிக்கிறார். எந்தப் பக்கம் இருந்து சுட்டார்கள். சுட்டவர் கையில் ரோமங்கள் இருந்தன என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்பொழுது, சம்பவம் நடந்த பொழுது எனக்கு எல்லாமே இருட்டாக இருந்தது. என்னால் ஒன்றும் நினைவு படுத்த முடியவில்லை என்கிறார்.

ஏன் இப்பொழுது அப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்?

பயந்திருக்கலாம் அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கலாம். அல்லது மேலிடத்தில் இருந்து யாராவது கட்டளை இட்டிருக்கலாம்

கைது செய்யப்பட்ட NSU வின் பெண் உறுப்பினர் Beate Zschaepe ஐ விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை அறிய முடியாதா?

விசாரணை நடக்கிறது. ஆனால் தான் இது விடயமாக எதுவும் சொல்லப் போவதில்லை என்று நீதிமன்றத்தில் Beate Zschaepe அறிவித்து விட்டார். ஆகவே அவரை விசாரணை செய்ய முடியாது. யேர்மனிய சட்டம் அப்படி.
குற்றவாளியை விசாரிக்க முடியாது என்றால் வழக்கு எப்படி நடக்கும்?

அரச சட்டத்தரணியும் Beate Zschaepe இன் சட்டத்தரணியும் சம்பவங்கள், சாட்சியங்களை வைத்து வாதாடிக் கொள்வார்கள். விவாதங்களை வைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
Beate Zschaepe தப்பிக்க வாய்ப்பு உருவாகி விடுமா?

Beate Zschaepe தப்பிக்க வாய்ப்பில்லை. அவருடைய குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் இருக்கின்றன. ஆனால் பல உண்மைகள் அவரிடம் இருந்து வெளியே வராமல் சம்பந்தப் பட்டவர்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
சமீபத்தில், பணம் பெற்றுக் கொண்டு, புலானாய்வுத்துறைக்கு NSU பற்றித் தகவல் தரும் Thomas என்பவர் மரணம் அடைந்திருக்கிறார். இவரது புனைபெயர் Correli. இவர் திரைமறைவு அமைப்புக்களின் செயற்பாடுகளில் இருந்தவர். பின்னர்தான் பணத்திற்காக தகவல் தருபவராக மாறினார். அதுவே அவரது தொழிலாகப் போனது. தனது செயல்களை அறிந்து தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். சில காலங்களுக்குப் பின்னர் யேர்மனி திரும்பி Nordrhein-Westfalen மாநிலத்தில் வசித்து வந்தார். இவரது சாட்சி நீதிமன்றத்துக்குத் தேவைப் பட்டது. நீதிமன்றில் இருந்து இவருக்கு அழைப்பாணை போனது.
ஆனால் குறிப்பிட்ட தினத்தில் Correli நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் காவல்துறை அவரது இருப்பிடத்துக்குச் சென்று பார்த்த போது அவர் இறந்திருந்தார். இறக்கும் போழுது அவருக்கு வயது 39. இத்தனைக்கும் அவர் புலனாய்வுத்துறையின் ஏற்பாட்டின் பேரிலேயே இரகசியமாக அந்நகரில் அவ்வீட்டில் வசித்து வந்தார்.

எப்படி இறந்து போனார்?

அவருக்கு நீரழிவு நோய் இருந்திருக்கிறது என்றும், இன்சுலின் கூடி அவர் இறந்து போனதாகவும் அறிக்கை வருகிறது. இன்சுலின் தானாகவே அதிகரித்ததா? அல்லது யாராவது அதிகளவு அவருக்கு இன்சுலின் செலுத்தினார்களா? என்ற கேள்விகளும் இருக்கின்றன.

சாட்சிகள் ஒவ்வொன்றாக இல்லாது போனால் விசாரணை என்னவாகும்?

அது சட்டத்தின் வேலை. ஆனாலும் உண்மைகளை வெளிக் கொணர்வதற்கு எங்களுக்கு இன்னமும் பல தேடுதல்கள் இருக்கின்றன.

இந்தப் புத்தகத்தின் மூலம் இது சம்பந்தமாக ஏதாவது பயன் கிடைத்ததா?

இந்தப் புத்தகத்தின் மூலமாக மட்டுமல்ல, நாங்கள் இது விடயமாக தகவல்களை சேகரித்து எழுதும் பொழுது முன்னேற்றங்கள் தெரிகின்றன.

இனி இதில் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை என்று Heilbronn நகரத்தில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் Michele Kiesewetter மற்றும் படுகாயப் படுத்தப் பட்ட பொலிஸ் Martin.A சம்பந்தமான வழக்கை கடந்த வருடம் நீதிமன்றம் முடித்து விட்டது. இந்த முடிவை 12 யூரிமாரும் இணைந்து அன்று எடுத்திருந்தனர்.

இப்பொழுது ஆட்சி மாறி இருக்கிறது. 12 யூரிமாரில் ஒன்பது பேர் புதியவர்கள். ஊடகங்களின் தகவல்ளை அடிப்படையாக வைத்து இன்னமும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டி உள்ளதாக அவர்கள் இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு முன்னேற்றம்தானே.

துருக்கிய மக்கள் நிறுவனங்களை வைத்திருக்கும் Holz str வில் நடந்த குண்டுத் தாக்குதலின் பத்தாவது வருட நினைவு நாள் கடந்த 9ந்திகதி Koeln நகரில் நினைவு கூரப்பட்டிருந்தது. யேர்மனிய ஜனாதிபதி Gaug கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பல யேர்மனிய மக்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் இக்குண்டுத்தாக்குதல் பற்றிய மர்மங்களை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர்களின் செயற்பாடுகள் பாராட்டப் பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது? மற்றைய ஒன்பது எழுத்தாளர்களுடனான தொடர்பு எப்படி உங்களுக்குக் கிடைத்தது?

NSUவுக்கு மேலான வழக்கு நடக்கும் பொழுது நான் அங்கே செல்வதுண்டு. அதுபோல இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதும் மற்றையவர்களும் நீதி மன்றத்துக்கு வருவார்கள். பல தடவைகள் நாம் அங்கே சந்தித்துக்கொண்டதால் எமக்குள் பரீச்சயம் ஏற்பட்டது. அதன் பின் நாங்கள் NSU சம்பந்தமாக விவாதங்கள் செய்யத் தொடங்கினோம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் பேராசிரியர் Andreas Foerster இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் என்ன என்று கேட்டார். எல்லோரும் ஒத்துக் கொண்டதால் புத்தகம் வெளியாயிற்று.

கேள்விகளுக்கு தெளிவாகவே விடை தந்திருக்கிறீர்கள்.

புத்தகத்தில் சம்பவங்களும், தகவல்களும் நிறையவே அடங்கி இருக்கின்றன. அவ்வளவையும் நான் இங்கே சொல்லவில்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்களை மட்டுந்தான் முடிந்தளவு தந்திருக்கிறேன்.

தங்கள் உரிமைகள் கிடைக்காமல், அதற்காக ஏங்கி நிற்கும் துயரங்கள் நிறைந்த தமிழர்களது நிலையை யேர்மனிய மக்களுக்கு விளக்கும் வகையில் நீங்கள் ஒரு தமிழராக இருக்கும் பட்சத்தில் உங்கள் எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லையா?
எமது உறவுகளின் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக யேர்மனிய மொழியில் எழுத எண்ணம் எனக்கு இருக்கிறது. கூடவே ஆர்வமும் இருக்கிறது. மேலெழுந்த வாரியாக அவைகளை எழுத முடியாது. வெறுமனே தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதுவதில் ஒன்றுமே இருக்கப் போவதில்லை. இது விடயமாகப் பலரைச் சந்திக்கவும், பேட்டிகள் எடுக்கவும், விபரங்களை ஆதாரங்களோடு திரட்டவும் எனக்கு நிறைய நாட்கள் தேவைப்படும். எனது வேலைகளுக்கு மத்தியில்தான் அதற்கான நேரங்களையும் நான் தேடவேண்டும். ஒரு நிருபராக, எழுத்தாளனாக இருந்து கொண்டு சுதந்திரமாக இலங்கை சென்று இவற்றைப் பெறுவது அங்குள்ள நிலையில் இன்று சாத்தியம் இல்லை என்று அறிகிறேன். மேலும் எழுத்தாளனாக நான் யேர்மனியில் பரவலாக அறியப்பட இன்னமும் நான் உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் என் இனத்தைப் பற்றி எழுத எனக்கான காலம் அதிகதூரம் இல்லை என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது.

இலங்கையில் ஒரு ஊடகவியலாளர் சுதந்திரமாகச் செயற்பட முடியாது என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

இலங்கையில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் பிரச்சனைகளும் DPA யின் மூலம் ஒரு பத்திரிகையாளன் என்ற ரீதியில் எனக்கு உடனடியாகக் கிடைத்து விடும். எல்லாவற்றையும் நான் வாசிப்பேன். ஆனால் எமது பத்திரிகைக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

ஒரு தமிழனாக இருந்து யேர்மனிய மொழியில் சவால்கள் நிறைந்த துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு பொங்குதமிழின் வாழ்த்தும், நன்றியும்.

நல்லது. நான் மட்டும் அல்ல வேறு பல தமிழ் இளைஞர்களும்; இங்கே சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாமே வெளியே தெரிவதில்லை. நான் ஊடகத் துறையில் இருப்பதால் சட்டென்று தெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து உங்கள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

நன்றி.
- காண்டீபன்
Quelle - Ponguthamil

Friday, December 06, 2013

விருது வென்ற நெறியாளர் லெனின் எம். சிவம்

Tamil Culture  வலைப்பக்கத்தில் நிவே தம்பித்துரை ஆங்கிலத்தில் செய்த நேர்காணலின் சுருக்கம்.
தமிழாக்கம்: அ. யேசுராசா

 உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்....

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த நான், எனது பதினேழாவது வயதில் –  1991 இல் கனடா வந்து ரொறொன்ரோவில் வசிக்கிறேன். அங்கு உயர்தரப் பாடசாலையில் பயின்று, பட்டப்படிப்புக்காக வோட்டர்லூ பல்கலைக்கழகத்துக்குச் சென்றேன். மென்பொருள் உருவாக்குநனாக முழுநேரத் தொழில் செய்வதோடு, அதற்குமப்பால் திரைப்படங்களை உருவாக்குவதற்கும் நேரத்தை ஒதுக்குகிறேன்.

திரைப்படக்காரனாக வரவேண்டுமென எப்போதும் நீங்கள் கருதியிருந்தபோதும், எவ்வாறு மென்பொருள் உருவாக்குநன்  ஆனீர்கள்?

உயர்தரப் பாடசாலைக் கல்வியை முடித்ததும், திரைப்படத்துறை பற்றி அல்லது வானியல் பற்றிக் கற்க விரும்புவதாகக் குடும்பத்தின ரிடம் சொன்னேன். ஆனால், கணினித் துறையில் கற்குமாறு அறிவுறுத்தப் பட்டேன்.  அதனால், கணினித்துறையில் கற்பதற்காக வோட்டர்லூ பல்கலைக்கழகம் சென்றேன். எனது தந்தை நாடகாசிரியராகவும், அப்போது துளிர்க்கத் தொடங்கிய இலங்கைத் தமிழ்ப்படத் துறையில் நடிகராகவும் இருந்தார்; அவரும் குடும்பமும் இதன்காரணமாகப் பல தியாகங்களைச் செய்யநேர்ந்தது. தந்தையின் அடிச்சுவட்டை நான் தொடர்வதில், இயல்பாகவே அம்மாவுக்கு அச்சமிருந்தது. எனவே, முதலில் எனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, விரும்பிய  எதையும் செய்யுமாறு சொன்னார். 2000 ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடித்த பின், திரைப்படங்களை உருவாக்குவதில் ஈடுபட்டேன். என் மனைவியும்  பிள்ளைகளும் குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக உள்ளனர்.

சுயமாகக் கற்றுக்கொண்ட திரைப்படப் படைப்பாளியாகச் சித்திரிக்கப்படுகிறீர்கள்.... இந்தக் கலையை எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?

றையர்சன் பல்கலைக்கழகத்தில், திரைப்படத்துறைப் படிப்பில் சில கற்கைநெறிகளில்  பயின்றேன். திரைப்பட  உருவாக்கம் பற்றி அநேக நூல்களை வாசித்தேன். ஒன்லைனிலுள்ள வளங்களைப் பயன்படுத்தினேன்; எல்லாமே அங்கு உண்டு – எனவே நீங்கள் செய்யவேண்டியது வாசிப்பு, வாசிப்பு.... மேலும் வாசிப்பு! ஆனால் இவை குழப்பகரமாக இருக்கலாம். உதாரணமாக, திரைச்சுவடி எழுதுதல் சிறந்த திரைப்படத்துக்கு அடிப்படையானது. அங்குள்ள ஏராளமான சிறந்த நூல்கள் வெவ்வேறு விதமான – முரண்படும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. கால அடைவில் வெவ்வேறு பகுதிகளைத்  தேர்வுசெய்து, திரைப்படம் பற்றியும்  திரைப்படத் தயாரிப்புப் பற்றியும் உங்கள் சொந்தக் கருத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இதுதான் உங்களை எத்தகைய திரைப்படப் படைப்பாளியென வரையறுத்துக் காட்டும்.

உங்கள் திரைப்படங்கள் சொல்லும் கதைகளைத் தேர்ந்தெடுக்க உங்களைத் தூண்டியது எது?

என்னை நான் வித்தியாசப்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிவந்து, கனடாவின் சூழலுக்குத் தம்மைத் தகவமைக்கக் கடுமுயற்சி எடுக்கும் தமிழ்ச் சமூகத்தை - குறிப்பாக குவிமையப்படுத்த விரும்பினேன். குறும்படங்களில் பரிசோதனை  செய்யத் தொடங்கினேன்;  ரொறொன்ரோவிலுள்ள ‘சுதந்திர கலைத் திரைப்படச் சங்கம்’ அவ்வாண்டின் சிறந்த படமாக, எனது முதற் படத்தை அடையாளப்படுத்தியது. இது எனது தன்னம்பிக்கையைப் பெரிதும் உயர்த்தி, இன்னும் பெரியதும் கடினமானதுமான திட்டங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தியது. இப்படித்தான் எல்லாம் ஆரம்பமானது.

திரைப்படத் தயாரிப்பில் நீங்கள் எதிர்கொண்ட சிலசவால்கள்....?

திரைப்படத் தயாரிப்பில் இடர்களை எதிர்கொள்வது கடினமானது; ஏனெனில், நான் பராமரிக்கவேண்டிய குடும்பமொன்று உள்ளது. திரைப்படம் காலத்தையும் பெரும் நிதியையும் உறிஞ்சுவது – அத்துடன் நீங்கள் வெற்றியடைவீர்களா என்பதும் உறுதியாகத் தெரியாது. நிதி அடிப்படையானது. ஒரு தயாரிப்பாளர் கிடைத்தாலும், எங்கள் படங்களைப் பார்ப்பதற்குப் பார்வையாளரைத் திரையரங்குக்குக் கொண்டுவருவது கடினமாயுள்ளது. அப்படியானால் முதலிடும் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி? திரைப்பட விழாக்களில் இடம்பெறச் செய்வதுதான் ஒரே நம்பிக்கை. அங்கு ஒருவிநியோகஸ்தரால் அது தேர்ந்தெடுக்கப் படுமானால், அடுத்த படிக்கு அது செல்லும். இருந்தபோதிலும், ‘1999’ திரைப்பட விழாக்கள் பலவற்றில் இடம்பெற்றபோதும் நான் விருதுகள் பெற்றபோதும், சவால்கள் இன்னும் முடியவில்லை. உங்கள் ‘தரிசனத்’தைப் பணயம்வைப்பதற்குரிய  தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் கண்டுபிடிப்பது, கடினமான போராட்டமாகவே உள்ளது.

ஒரு திரைப்படப் படைப்பாளியாகச் செய்து முடித்தவைபற்றித் திருப்தி அடைகிறீர்களா?

இல்லை, இன்னும் செய்யவேண்டியுள்ளது! அத்திரைப்படங்கள் மதிப்புக்குரியனவாக உள்ளபோதிலும், திரைப்படக் கலைஞனாக எனது முழு உள்ளாற்றலையும் அவற்றில் காட்டியுள்ளதாக உணரவில்லை. ஒவ்வொரு முறையும் ‘1999’ திரைப்படத்தைக் காட்சி காட்சியாகப் பார்க்கும் போது, நான் காண்பதெல்லாம் தவறுகளையே! மக்களுக்கு அதைக் காட்டிய போது அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தார்கள்; ஆனால், எனக்குத் திருப்தி தரக்கூடிய படத்தை உருவாக்க விரும்புகிறேன். சவால்கள் எவ்வளவு பெரிதானாலும் பொருட்டில்லை. எனது  கனவை நிறைவேற்றத் தொடர்ந்து செயற்படப் போகிறேன். ஆகையால் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெற்றிகரமான படங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திரைப்படப் படைப்பாளியாக விரும்புகிறவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

உங்களுக்கு நேர்மையாக இருந்து, உங்கள் திறமையைக்காட்டுங்கள். கதைக்கும் பாத்திரங்களுக்கும் உண்மையாக இருங்கள். உங்கள் இதயத்துக்கு நெருங்கிய – உங்களால் அணுகப்படக்கூடிய விடயத்தைத் தெரிவு செய்யுங்கள். அதுதான் பரந்த பார்வையாளரை ஈர்க்கும். உங்கள் கதைபற்றி நுண்மையாகப் பார்ப்பது, பேரளவிலான  ஈர்ப்பைத் தரும்.

நீங்கள் விரும்பும் நெறியாளர்?

குவென்ரின் ரறன்ரினோ!

மிகவும் விரும்பும் திரைப்படம்?

 பல்ப் ஃவிக்சன் ( Pulp Fiction )

உங்களைத்தூண்டுபவர்கள் யார்?

எனது  பாத்திரங்கள்.... நான் அவர்களை நேசிக்கிறேன். என் இதயத்தில் வாழ்ந்துகொண்டு, தங்கள் கதைகளைச் சொல்லுமாறு அவர்கள் என்னைத் தூண்டுகிறார்கள்!

                                                                                   -கலைமுகம்
                                                                                     ஐப்பசி - மார்கழி 2013

Tamil Culture  வலைப்பக்கத்தில் நிவே தம்பித்துரை ஆங்கிலத்தில் செய்த நேர்காணலின் சுருக்கம்.
தமிழாக்கம்: அ. யேசுராசா 

Thursday, September 27, 2012

மூனா - நேர்காணல்

ஒரு புதுச்சூழலில் எங்கள் பயணம் தொடங்குகிறது...
பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட செல்வகுமாரன் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி.

பொங்குதமிழுக்காக இவர் வரைந்த கருத்துப்படங்கள் சமகால அரசியல் வரலாற்றின் ஓவியப் பதிவுகளாக பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக 1983, 2012 ஆண்டுகால சிறைச்சாலைப் படுகொலைகளை மையப்படுத்தி இவர் வரைந்த கருத்துப்படம் 150 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களின் முகப் புத்தங்களில் பிரதிசெய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி உள்ளன. இவரின் 'தாயென்னும் கோயில்' நாடகம் உலகளாவிய தமிழர்களுக்கிடையே ஐபிசி வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் தெரிவாகி முதலாவது பரிசான தங்கப்பதக்கத்தை வென்றெடுத்திருக்கிறது.

செல்வகுமாரனின் முழுமையான படைப்பாற்றலை இந்நேர்காணல் வெளிக்காட்டும் என நம்புகிறோம்.

ஓவியத்துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது என்பது பற்றிச் சொல்லுங்கள்?
கல்கி, குமுதம், விகடன், ராணி சஞ்சிகைகளில் இருக்கும் சித்திரங்களைப் பார்த்து எனது அண்ணன்கள் தங்களது அப்பியாசப் புத்தகங்களில் கிறுக்கும்போது எனக்கும் வரையும் ஆவல் தொற்றிக் கொண்டது. அதுவே பாடசாலையில் ஓவிய வகுப்பில் எனது திறமையை வளர்க்கக் காரணமாயிற்று. பின்னாளில் எனது வரைதலுக்கு அறிவூட்டி, வழிகாட்டி, நெறிப்படுத்தியது ஓவியர் ஏ.மார்க் அவர்கள். எனது நகரில் உள்ள பிரபலமான ஹாட்லிக் கல்லூரியில்தான் அவர் ஓவிய ஆசிரியராக இருந்தார். அந்தப் பாடசாலையின் மாணவர் விடுதிக்கும் அவரே பொறுப்பாளராகவும் இருந்தார். அந்த விடுதியில் விசாலமான அறையொன்றில் மாலையில் ஆறிலிருந்து பத்துவரை அவரிடம் ஓவியம் பயில எனக்கு வாய்ப்புக் கிட்டியது. நிறையப் புத்தகங்கள் வைத்திருப்பார். வாசிக்கத் தருவார். அதில் உள்ள படங்களை வரையப் பயிற்சியும் தருவார். மரங்களையும், மாடுகளையும், மனிதர்களையும் அப்படியே கீறுவதில் அர்த்தமில்லை. அவற்றில் நவீனங்களைப் புகுத்தி பார்ப்பவர்களுக்குப் பலவற்றைச் சொல்லவைக்கும் சித்திரங்களை வரைய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லியும் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் College of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். College of fine arts இல் நுளைவதற்கு எனக்கு எல்லாத் தகுதியும் இருந்தும் அங்கு சென்று படிப்பதற்கு எனது வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

எதற்காக உங்கள் வீட்டில் அனுமதி தர மறுத்தார்கள்?
ஓவியத்துறையில் பெரிதும் சாதிப்பதற்கோ, வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கோ இலங்கையில் வாய்ப்பில்லை என்பது எனது வீட்டாரினது கருத்தாக இருந்தது. ஒருவிதத்தில் அது உண்மையானதாகவே இருந்தது. தென்னிந்திய சஞ்சிகைகள், அதில் வரும் கதைகள் அவற்றிற்கான ஓவியங்கள் எல்லாமே அங்குள்ளவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. சாமி அறையில் இருக்கும் கடவுள் படங்கள், சிகை அலங்கார நிலையங்களில் தொங்கும் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களின் படங்கள் எல்லாமே தென்னிந்தியாவில் இருந்து வந்து எம்மவர்களை ஆக்கிரமித்திருந்தபோது பெரிதாக இவன் என்ன சாதிக்கப் போகிறான் என்ற நிலையே அன்று மேவி இருந்தது. இதுவே என்னைப் போன்றவர்களுக்கு அன்றைய காலத்தில் பெரிதும் பின்னடைவாகப் போயிற்று.

கலை, விளையாட்டுகள் எல்லாம் சோறு போடாது என்ற அன்றைய தமிழரின் நிலைப்பாட்டில் நீங்களும் மாட்டிக் கொண்டீர்கள். இதனால் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படவில்லையா?
நான் மேற்கொண்டு ஓவியத்துறையில் திறமையை வளர்க்க முடியாமல் போனதில் மார்க் மாஸ்ரருக்குத்தான் என்னை விட கவலைகள் அதிகமாக இருந்தது. தனது கவலையை என்னிடம் நேரடியாகவே அவர் பகிர்ந்து கொண்டார். ஆனாலும் பெற்றோருக்கும், பாதுகாவலர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்று ஆசிரியர் நிலையில் இருந்து கொண்டு எனக்குத் தனது அறிவுரைகளையும் தந்தார்.

பின்னாளில் மார்க் மாஸ்ரர் மாற்றலாகி யாழ்ப்பாணம் போனதன் பின்னர், நானும் ஓவியன் எனும் எனது எண்ணத்தை மூடிவைத்து விட்டு எனது வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் நுளைந்து கொண்டேன்.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?
அற்புதமான ஓவியர் என்பதையும் தாண்டி அவர் ஒர் அன்பான மனிதர். பேச்சாலோ, செயலாலோ எவரையும் நோகடிக்கத் தெரியாதவர். எவ்வித பாகுபாடுமின்றி எவருக்கும் ஓவியத்தைப் பற்றி தன்னால் முடிந்தளவுக்குச் சொல்லித் தந்தவர். பிக்காசோவின் ஓவியங்களில் மனதைக் கொடுத்தவர். விட்டால் பல மணி நேரம் பிக்காசோவின் ஓவியங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பவர். நவீன ஓவியங்கள் பெரிதும் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்று நினைத்தவர். அதற்காகவே தனது படைப்புக்களைத் தந்தவர். போதுமான வசதிகள் கிட்டாத போதும் சளைக்காமல், தேயிலை அடைத்துவரும் பலகைப் பெட்டிகளைப் பிரித்தெடுத்து அதில் ஓவியங்களை வரைந்து வைத்தவர். அவருக்கு இருந்த திறமை பெரிது. இங்கு, வெளிநாடுகளில் வந்து பார்க்கும் போதுதான் மார்க் மாஸ்ரர் என்ற அற்புத ஓவியரின் மதிப்பு புரிகிறது.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் நினைவில் ஏதாவது...?
நிறையவே இருக்கின்றன. சொல்லப் போனால் அதற்காகவே ஒரு பதிப்பு போடலாம். எனது நினைவுக் குறிப்பில் அவரைப் பற்றி இரண்டு விடயங்களைப் பதிந்துள்ளேன். அதிலொன்று...
'அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது.

இது சிவனின் உருத்திர தாண்டவம். கோபத்தையும், பயத்தினையும் இணைத்துக் கொடுப்பதற்கு இந்த வர்ணம்தான் சிறந்தது. போதாதற்கு சிவனின் நடனத்தை ஒரு சுடலையில் நடப்பதாக வரைந்திருக்கின்றேன். பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இங்கே சிகப்புத்தான் சிறந்தது. ஆனாலும் எனக்கு சிகப்பு பிடிக்காது.

அமைதியாக ஆனாலும் விளக்கமாக அவரிடமிருந்து பதில் வந்தது. ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.
பார்க்கும்போது முட்ட வரும் காளை மாதிரியிருக்கும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அந்தக் காளைக்குள் ஏ.மார்க் என்ற எழுத்துக்கள் இருக்கும். AM என்ற எழுத்துக்களின் மேற்பகுதி குத்தவரும் கொம்புகளாகவும் A யின் கீழ்ப்பகுதி இரண்டும் முன்னம் கால்களாகவும் இருக்கும். இறுதியாக வரும் M காளையின் வாலாகவும் பின்னங் கால்களாகவும் இடையில் வரும் AR கச்சிதமாக அதன் உடலாகவும் அமைந்து இருக்கும். இத்தனையும் அடக்கி அற்புதமாக மரத்தில் காளை ஓவியத்திற்குள் தனது பெயரை செதுக்கியிருந்தார். அதுவே அவரின் இலச்சினையாகவும் இருந்தது. தான் வரையும் ஓவியத்தில் அந்த முத்திரையையும் அப்போ அவர் பதித்து வந்தார். தனது புத்தகங்களின் முதற்பக்கத்திலும் இந்த காளை முத்திரையை பதித்திருப்பார்.

அப்பொழுது தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். அந்த கிளர்ச்சி இளைஞர்கள் கன்னத்தில் கிருதாவும் குறுந்தாடியும் வைத்திருந்தார்கள். அது அந்த நேரத்து நாகரிகமாகவும் இருந்தது. தென்னிலங்கைக்கும் வடஇலங்கைக்கும் சம்பந்தமில்லாத போராட்டமது. ஆனாலும் முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டமிருக்கும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் விடுதியில் சனி, ஞாயிறுகளில் மாணவர்கள் தங்குவதில்லை. அதனால் மார்க் மாஸ்ரரும் வார விடுமுறைக்காக தனது ஊருக்குப் போய்விடுவார்.

ஒரு சனிக்கிழமை காலை, நகரம் களை கட்டியிருந்த நேரம், நகரத்தின் மத்தியில் இருந்த பஸ் நிலையத்தில் தனது ஊருக்குப் போவதற்காக மார்க் மாஸ்ரர் காத்திருந்தார். கூடவே நானும் அவருடன் நின்றிருந்தேன். அப்பொழுது ஜீப் வண்டியொன்று பஸ் நிலையத்துக்குள் வந்து சினிமா பாணியில் கிறீச்சிட்டு நின்றது. அதன் முற்பக்கத்தில் இருந்து காவல்துறை அதிகாரி இறங்கினான். இறங்கியவன் சுற்று முற்றுப் பார்த்தான். அவனுக்குத் தன் பெருமையை யாருக்காவது காட்டவேண்டும் அல்லது யாரையேனும் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்க வேண்டும். சிறிது நேர நோட்டத்துக்குப் பின் எங்கள் இருவரையும் நோக்கி வந்தான். எனக்கு அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பயப்படாதையும் என்று மார்க் மாஸ்ரர் எனக்கு ஜாடை காட்டினார். நேராக வந்தவன் மார்க் மாஸ்ரரை நெருங்கி நின்றான். அப்பொழுது மார்க் மாஸ்ரர் கன்னத்தில் நீளமாகக் கிருதா வைத்திருந்தார். அதைக் காட்டி என்ன என்று கேட்டான். மார்க் மாஸ்ரர் சிரிப்பால் பதில் சொன்னார். காவலதிகாரி அலட்சியமாக அவரைப் பார்த்தான். விபரீதமொன்று நிகழ வாய்ப்பிருப்பதாக மனது அச்சப்பட்டது.

காவலதிகாரி ஜீப்பிற்குப் சென்று திரும்பி வந்தான். அவனது கையில் இப்பொழுது குறடு ஒன்று இருந்தது. மார்க் மாஸ்ரரின் நாடியைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பினான். குறட்டையெடுத்து மார்க் மாஸ்ரரின் கன்னத்து கிருதா மயிர்களைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். மார்க் மாஸ்ரர் எதுவித சலனங்களையும் காட்டாது பேசாமல் இருந்தார். ஒரு மயிரை இழுத்துப் பிடுங்கும் போதே எவ்வளவு வேதனையிருக்கும்.

அந்த மிருகம் எதுவுமே செய்யாத அந்த அமைதியான மனிதனை வேதனைப்படுத்தி இன்பம் கண்டு கொண்டிருந்தது. எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் நினைவில் வந்தன.

'நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன?'

’சேர்.. அவர் ஒரு மாஸ்ரர்’ என்னையறியாமல் வார்த்தைகள் வந்தன. சிறிது நேரம் எங்கள் இருவரையும் அந்தக் காவலதிகாரி பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்.

பஸ் வந்தது. ஒன்றுக்கும் யோசியாதையும் சொல்லிவிட்டு மார்க் மாஸ்ரர் பஸ்ஸில் ஏறினார்.

ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

நீங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள நிலைமைகளை எப்படி எதிர்கொண்டிர்கள்? எப்போது ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தீர்கள்?
நிறையவே சிரமப்பட்டிருக்கின்றேன். படங்கள் வரைவதால் பெரியளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. மாறாக நண்பர்கள் போராளிகளாக இருந்ததால் எப்பொழுதும் எனது நிலையில் அச்சமே மேலோங்கி இருந்தது.
அதில் குறிப்பாக கணேஸ் மாமாவைச் சொல்லலாம். கணேஸ் பொலிகண்டியைச் சேர்ந்தவன். அவன் இந்தியா இலங்கை என ஓடிக் கொண்டிருந்தான். ஊரில் இருப்பானாயின் என்னைச் சந்திக்க வந்து விடுவான். இவனது தொடர்பே என்னை பெரிதும் இயக்கத்துக்குள் இழுத்து விட்டது.

இராணுவத்திற்கு தகவல் தருவோர் எனக்கு அருகாமைலிலேயே குடியிருந்தார்கள். அவர்களில் இருவரை மாணவர் அமைப்பு போட்டுத் தள்ள, பிரச்சினை பெரிதாகிவிட்டது. எந்த நேரமும் இராணுவம் ஊருக்குள் நுளைந்து விடும் அபாயம் இருந்தது.

கணேஸ் சொன்னான், இந்தியாவுக்கு கொண்டு போய் விடுகிறேன் வந்து விடு என்று. சொன்னவன் அன்று அவசர வேலையாக அக்கரைக்குப் போய் விட்டான். தவித்துக் கொண்டிருந்த எனக்கு, எனது பாடசாலை நண்பன் சிறீராம் ஒரு வழி சொன்னான். கிழக்கு யேர்மனிக்கு விசா தேவையில்லை. அங்கு போனால் மேற்கு யேர்மனிக்கு ரயில் ஏறி விடலாம் என்ற அவனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டேன். அவனே ரிக்கெற் செய்தும் தந்தான். அவன் சொன்ன வழியில் யேர்மனிக்கு 1984 நவம்பரில் வந்து சேர்ந்தேன். இதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

அக்கரைக்குப் போன கணேஸ் திரும்பி வந்து நான் யேர்மனி போனதை அறிந்து பெரிதும் கவலைப்பட்டானாம். அடுத்த தடவை அவன் கடலில் பயணம் செய்யும்போது கடற்படை தாக்கியதில் 24 பேருடன் சேர்ந்து இறந்து போனான். அவன் இறந்ததை எனது மகனே எனக்கு அறிவித்திருந்தான்.

மூன்று மாவீரர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடியுள்ளீர்கள். அவர் குறித்தும் உங்கள் குழந்தைகள் தொடர்பிலும் சொல்லுங்களேன்?
நான் யேர்மனிக்கு வந்த பின்னரே அவர்கள் போராளிகளானார்கள். அவர்களது தந்தையார் 58 கலவரத்தில் தனது உடைமைகளை இழந்திருக்கிறார். 76இல் மீண்டும் உடைமைகள் இழந்து கப்பல் ஏறி காங்கேசன்துறையில் வந்து இறங்கியிருக்கிறார். 83 இல் கண்டியில் பணிபுரியும் போது தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இவை எல்லாம் சேர்ந்து அவர்களை இயக்கத்தின் பால் இழுத்துச் சென்றிருக்கலாம்.
இதில் மூத்தவர் பிரேமராஜன் ஒரு போராளிக் கவிஞன்.

அடுத்தது எனது மனைவி சந்திரவதனா. பெண் விடுதலை பற்றி அதிகம் எழுதியவர். எழுதிக் கொண்டிருப்பவர். அவரின் தங்கை சந்திரகுமாரி அதிகம் பேசப்படும் ஒரு எழுத்தாளர். ஐபிசி வானொலி அறிவிப்பாளர் மற்றும் சமுத்திரா என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

எனது பிள்ளைகள் என்று பார்க்கையில், அவர்களுக்கும் தமிழரது நிலமைகள் தெரிந்திருக்கிறது. 2002இல் வன்னிக்கு சென்று சமூக சேவைகள் செய்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் சென்றதால் நிலமைகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது மூன்று பிள்ளைகளும் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

இதில் இளையவன் யேர்மன் பத்திரிகை ஒன்றில் நிருபராகவும், எடிட்டராகவும் பணியாற்றுகிரான். அவனுக்கும் கட்டுரைகள் நன்றாக எழுத வருகிறது.

எனது சகோதரன் நித்தியகீர்த்தி, நியூசிலாந்து, அவுஸ்திரெலியா தமிழ்ச் சங்கத் தலைமைப் பதவியில் இருந்திருக்கிறார். மேலும் அவர் ஒரு எழுத்தாளரும் கூட.

எனது சகோதரியின் மகன் போராளியாக இருந்திருக்கிறான். அவனை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. இந்தச் சம்பவம் பற்றி எனது சகோதரன் நித்தியகீர்த்தியும், மனைவி சந்திரவதனாவும் தங்களது பார்வைகளில் சிறுகதைகளாகப் பதிந்திருக்கிறார்கள்.

எப்போது உங்கள் முதல் ஓவியத்தைதை வரைந்தீர்கள்?
எனது இளவயதிலேயே நான் ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டேன். அவை ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பிரசுரமாகியுமுள்ளன.

எப்போது உங்கள் முதல் கார்ட்டூனை வரைந்தீர்கள்? அதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது?
இதற்கு நான் ஐபிசி வானொலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஐபிசி தமிழ் வானொலியில் முன்னர் பணியாற்றிய அறிவிப்பாளர்களை தட்டிக் கொடுக்க, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி சம்பந்தமாக கருத்துக்களை கேலியாக வரைந்து அனுப்பிக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த அன்றைய ஆங்கிலச் செய்தி வாசிப்பாளர் செல்வி.பவானி பாலசுந்தரம் (வினோ), ஏன் நீங்கள் பத்திரிகைக்கு வரையக்கூடாது என்று கேட்டதோடு மட்டுமன்றி இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.
தமிழ் கார்டியனில் அரசியல் துறையின் பொறுப்பை ஏற்றிருந்த திரு.சுதன் நடராஜாவின் அரசியல் கருத்துக்களுக்கு ஏற்ப எனது அரசியல் கிறுக்கல் ஆரம்பமானது.

இதில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்றைய காலத்தில் ஐபிசியில் பணியாற்றிய அத்தனை பேரையும் கேலிச்சித்திரங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பணிப்பாளர்களாக இருந்த திரு. தாசீசியஸ், திரு.றஞ்சித் அவர்களையும் நான் விட்டு வைக்கவில்லை. எல்லோரும் ஓட்டுமொத்தமாக அந்தக் கேலிச் சித்திரங்களை வரவேற்றார்கள். என்னைத் தட்டிக் கொடுத்தார்கள்.

ஆக மொத்தம் புலம்பெயர் தமிழரில் ஒரு கேலிச்சித்திரக்காரனை உருவாக்கிய பெருமை அன்றைய ஐபிசி வானொலிக்கே உரியது.

உங்களது படைப்புகளை ஊடகங்கள் தவிர்ந்த வேறு தளங்களில் மக்களின் பார்வைகளுக்கு வைத்துள்ளீர்களா?
ஜேர்மனிக்கு வந்த ஆரம்பகாலங்களில் எமது நாட்டின் அவலங்களை வெளிப்படுத்தக் கூடிய ஓவியங்களை நான் அவ்வப்போது வரைந்து கொண்டிருந்தேன். அந்த ஓவியங்களை நான் தங்கியிருந்த நகரிலும், எனது நகரத்தை ஒட்டிய மற்றைய நகர்களிலும் ஜேர்மனிய மக்களின் பார்வைகளுக்கு வைத்து கருத்தரங்குகளும் செய்துள்ளேன்.
ஆனாலும் அந்த நேரத்தில் அரசியல் தஞ்சம் கோரியோர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளின் மத்தியில் வெளி நகரங்களுக்குந் சென்று பெரியளவான காட்சிப்படுத்தல்களை செய்ய முடியாதிருந்தது. பிற்பட்ட காலங்களில் அரசியல் அமைப்புகளின் செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டிருந்ததால் அவர்களின் நிகழ்வுகளில் எனது ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

கேலிச்சித்திரங்களை வரைவதால் விமர்சனங்களுக்கோ, பாராட்டுதல்களுக்கோ ஆளாகியிருக்கிறீர்களா?
பெரியளவில் விமர்சனங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பது உண்மை. பாராட்டுதல்கள் அவ்வப்போது வருவதுண்டு.
யேர்மனியில் ஒரு தடவை திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கலந்து கொண்ட அரசியல் கூட்டத்திற்குப் போயிருந்தேன். கூட்டத்திற்கு முன்னர் அவர் தங்கியிருந்த அறைக்குள் செல்லும் வாய்ப்பு எனக்கும் எனது மனைவிக்கும் கிட்டியது.
உள்ளே போனோம். அரங்கத்திற்குள் இருக்க வேண்டிய பாதிப்பேர் அங்கே நிறைந்திருந்தார்கள். ஆனாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது மனைவியின் சகோதரனை அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடன் எனது மனைவி உரையாடும் போது இவர் எனது கணவர் ஒரு கார்டூனிஸ்ட் என்று அறிமுகம் செய்தார். உடனடியாக அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தை ’மூனா'. இவர் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நாள் உங்களையும் எனது கிறுக்கலுக்குள் கொண்டு வருவேன் என்றேன். 'ஏன், இப்பொழுதே கொண்டு வா' என்று பேப்பரையும் பேனாவையும் வரவழைத்துத் தந்தார். அப்பொழுது கிடைத்த இரண்டு நிமிடத்தில் நான் கிறுக்கித் தர அதற்குக் கையெழுத்திட்டு, பாராட்டி விட்டுப் போனார்.
அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது நேரம் அதிகம் எடுத்து அவரை வர்ணத்தில் வரைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த எண்ணம் மட்டும் எனக்குக் கை கூடவில்லை. அவர் அமரத்துவம் அடைந்தபோது கறுப்பு வெள்ளையில் தமிழ்கார்டியனில் முழுப் பக்கத்தில் அவரை வரைந்த போது மனது பெரிதும் சிரமப்பட்டது.

போரும் படுகொலைகளும் நிகழ்ந்த காலத்தில் ஒரு ஓவியராக உங்கள் மனநிலை எப்படியிருந்தது? அந்த உணர்வுகளை எப்படி ஒவியங்களில் வெளிப்படுத்தினீர்கள்?
மற்றவர்களைப் போல் எனக்கும் கவலைகள் அதிகமாக இருந்தது. ஒவ்வொன்றாக இழக்கும் போதும், அவலங்களைக் கேட்கும்போதும் யாரேனும் சிங்கள அரசைத் தட்டிக்கேட்க மாட்டார்களா? இந்த அவலங்களை நிறுத்த மாட்டார்களா என்ற நப்பாசை என்னுள் இறுதி வரை இருந்தது. அதற்காகவே பல படங்களை வரைந்திருந்தேன். ஊர்வலங்களுக்கெல்லாம் நான் கீறிய படங்கள் போனது. ஆனால் எங்களுக்கான முடிவுதான் மாறிப் போயிற்று. அந்த அவலமான முடிவோடு நானும் ஒரு முடிவுக்கு வந்தேன்
'மூனா' வையும் இத்தோடு முடித்து விடுவதென்று. அதன்படி 'இணையில்லாதவன்' என்று தலைப்பிட்டு ஒரு படம் வரைந்தேன். அத்தோடு எனது கிறுக்கல் ப்ளாக்கையும் மூடிவைத்து விட்டேன்.

அதன் பிறகும் நீங்கள் கேலிச்சித்திரங்கள் வரைகிறீர்களே?
உண்மை. இது ஒருவருடைய வேண்டுகோளுக்காக. நண்பர் ஒருவர் பொங்குதமிழ் இணையத்துக்கு கேலிச் சித்திரங்கள் வேண்டும் என்றார். மறுக்க முடியவில்லை.

அத்தோடு புதிய வழியில் புதுச்சூழலில் எங்களது பயணம் தொடங்குகிறது. நானும் சேர்ந்து பயணிப்பதுதானே முறை. ஆனால் இம்முறை 'மூனா' போய் 'தூனா' வந்திருக்கிறார்.

ஒரே பொருளில் அமைந்த அனுபவங்களை வித்தியாசமாகப் படைப்பாக்குவதில் உங்களின் அனுபவங்கள் எப்படி இருக்கின்றது?
எப்பொழுதும் ஒரே பொருள்தான். சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழரை இல்லாதொழிக்க வேண்டும், என்பதுதான் பொருளாக இருக்கிறது. லலித் அத்துலத்முதலி தொட்டு கோத்தபாய ராஜபக்ச வரை ஒரே கொள்கையைத் தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரே பொருளை வைத்துக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் வரும் போது நாங்களும் வெவ்வேறு முறையில் படைப்பாக்க வேண்டி இருக்கிறது.

இதற்காக நிறையவே சிந்திக்க வேண்டி இருக்கிறது. செய்திகளை, கட்டுரைகளை முழுவதுமாக உள்வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலை நேரங்களில் கூட இதே சிந்தனையுடனே இருக்க வேண்டிய நேரங்களும் இருந்திருக்கிறது. ஆனாலும் ஒன்றை உருவாக்கி அதனை ஆசிரியர் குழு ஏற்றுக் கொள்ளும் போது ஒரு நிறைவு இருக்கிறது. அதுவே அடுத்த படைப்புக்கு தானாக அழைத்துச் செல்லகிறது.

ஓவியங்கள் தவிர உங்களுக்கு நாடகத்தறையிலும் ஈடுபாடு இருக்கிறதே? இருந்தது என்பதே சரியாக இருக்கும்.
திருமதி சந்திரா இரவீந்திரன் ஐபிசி வானொலிக்கு தயாரித்து வழங்கிய 'சமுத்திரா' நிகழ்ச்சியை பாராட்டி ஒரு கேலிச் சித்திரம் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சித்திரம் நகைச்சுவையாக இருக்கிறது. 'சமுத்திரா'வுக்கு ஆக்கங்கள் தேவை. நகைச்சுவையாக ஒரு நாடகம் எழுதிப் பாருங்களேன் என்று அவர் கேட்டு வைக்க, எழுத ஆரம்பித்தேன். ஐம்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதி இருப்பேன் என நினைக்கிறேன்.

உங்கள் இலட்சியம், கனவு குறித்துச் சொல்லுங்கள்?
எல்லோரைப் போலவும் ஒரே கனவு, ஒரே நினைவுதான். தமிழருக்கு ஒரு தீர்க்கமான தீர்வு வர வேண்டும் என்பதே அது. அன்று ஆறுதலாக இருந்து மகிழ்ச்சியாக ஒரு படம் கிறுக்க வேண்டும். நிம்மதியாக இருக்கும்.

நேர்கண்டவர் : இளந்திரையன்
நன்றி : பொங்குதமிழ்

Tuesday, April 05, 2011

மாலினி பரமேஸ்

மெல்லிசைக்கு மெருகூட்டிய வான்மதி

இலங்கையில் சங்கீத கலைஞர்களும் சிறந்த தமிழ் ஒலிபரப்புச் சேவையும் இருந்த போதும் அறுபதுகளில் ஈழத்தில் இசைத்தட்டு என்ற ஒன்று இருக்கவேயில்லை. அதே வேளையில் திருகோணமலையில் வாழ்ந்து வந்த பிள்ளைப்பாட்டுக் கலைஞர் என்ற கெளரவம் பெற்ற யாழ்நூல் யாத்தளித்த சுவாமி விபுலானந்தரின் முதல் மாணவன் வித்தியாதிகாரி மா. பீதாம்பரத்தின் புதல்வர்களான பரமேஸ் கோணேஸ் இசைக் கலைக்கூடம் ஆரம்பித்து 68 முதல் இசைத் தென்றல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வர ஆரம்பித்தனர்.

திருகோணமலையில் சென் மேரீஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்தான் மாலினி பரமேஸ். 69 முதல் பரமேஸ் கோணேஸ் இசைத்தென்றலின் ரசிகையாக இருந்தவர். இந்த வேளையில் சிவமாலினியின் அன்புத் தந்தையார் சங்கீத பூஷணம் திருநெல்வேலி நமச்சிவாயம் சிவபதமடைந்த செய்தி கேட்டு யாழ்நகர் சென்றுவிட்டார் மாலினி.

68 இல் ‘உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்று ஆரம்பமாகும் பரமேஸ் இயற்றிய பாடல் தனக்காகவே பாடப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டார் சிவமாலினி. பின்னர் சங்கீத பூஷணம் விருதை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று தந்தை நமச்சிவாயத்தின் ஆத்ம சாந்திக்காக கல்வியில் வெற்றியும் கண்டார்.

1970ம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் ஈழத்தமிழ் இசைத்தட்டாக ஒலித்த பரமேசின் உனக்குத் தெரியுமா பாடல் இலங்கை மட்டுமல்ல ஆசிய சேவையிலும் அண்ணாமலை பல்கலைக்கழகம் வரையும் ஒலித்தது.

கடிதத் தொடர்புகள் சந்திப்புகள் இல்லாது இசைத் தொடர்பாலேயே இரு உள்ளங்கள் இணைந்து பிரியாது பிரியமுடன் 25 வருடங்கள் வாழ்ந்த இனிய காதற் காவியம் பரமேஸ் மாலினியுடையது என்றால் அது மிகையாகாது.

இலங்கை வானொலியில் பரமேஸ் கோணேஸ் இருவரின் பாடல்கள் அடங்கிய முதல் தமிழிசைத் தட்டை வர்த்தக சேவையில் முதன் முதலாக ஒலி பரப்பியவர் அமரர் எஸ். வி. மயில்வாகனன்.

தொடர்ந்து தினமும் ஒலிபரப்பி பரமேஸ் மாலினியின் காதல் தூதுவர்களாக அவர்கள் அறியாமலேயே உதவியவர்கள் அப்துல் ஹமீட், ராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம், லோகேஸ் மற்றும் கலைஞர்கள் பலர் என்பது சுவையான ஒரு குறிப்பு.

மேடைகளில் பாடுவதற்கு அக்காலத்தில் பெண் பாடகிகளைத் தேடுவது கஷ்டம். மேடைகளிற் பாடுவதைக் கேவலமாக நினைத்த காலமது. மாலினியின் குடும்பத்தவர்கள் கூட மாலினி மேடைகளிற் பாடுவதையும் முக்கியமாக திரைப்பாடல்கள் பாடுவதையும் அடியோடு விரும்பவில்லை.

கர்னாடக இசை கற்று மாலினி சங்கீத அரங்கேற்றம் செய்யாமல் இசைத் தென்றலில் அரங்கேறிவிட்டார் என்ற இறுக்கமான தாக்கம் அவர் குடும்பத்தினர்க்கு இருந்தது.

இரண்டாயிரத்துக்கும் குறையாத இசைத்தென்றலில் மாலனி அரங்கேறியுள்ளார். வெளிநாடு வந்த பின்னர் தன் பிள்ளைகளையும் இசைத்துறையில் ஈடுபடுத்தினார் மாலினி.

வாழும் போதும் இசைத் தாரகையாய் வாழ்ந்து வாழ்வு முடித்தும் தன் வம்ச விளக்குகள் மூலம் இசைத் தாரகையாய் விளங்குகின்றார் அமரர் மாலினி பரமேஸ்.

மாலினி பரமேஸ் முதன்முதலாக ஜோடி கானம் இசைத்தது திருகோணமலை சென். யோசப்ஸ் கல்லூரி மண்டபத்தில். இதன் பின்னர் நிரந்தரமாக மேடைகளில் மணம் வீச ஆரம்பித்தார் மாலினி.

அன்று மாலினி பாடிய முதற் பாடல் ‘கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ’ என்ற திரைப்படப் பாடல். படத்தில் இப்பாடலைப் பாடுவதற்கு தேர்ந்தெடுத்தவரே மாலினிதான். அந்த ஒரு பாடலின் மூலமே புகழ் சேர்த்தார் மாலினி.

மாலினி வெளிநாட்டில் வாழ்ந்த போது தான் கற்ற கல்வியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பரமேசுடன் சேர்ந்து பல பாடல்களை இசையமைத்து வீட்டிலேயே 30க்கும் மேற்பட்ட பாடல்களை பரீட்சார்த்த ஒலிபரப்பாக செய்து முடித்தார். அதில் தெரிவு செய்த 14 பாடல்களே 95ல் வெளிவந்த சங்கீத சாம்ராச்சியம் சி. டி.யில் ஒலித்த பாடல்கள்.

அவர் வெளிநாடுகளிலும் தன் இசைப் பயணங்களைத் தொடர்ந்தார். வெளிநாட்டில் தன் இசைப்புதல்விகள் பிரபாலினி பிரபாகரன். பிரியந்தினி பரமேசுடன் அவர் செல்லாத இடங்களேயில்லை.

மனிதர்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட மாலினி சக கலைஞர்களை என்றுமே பகைத்துக் கொண்டதில்லை.

அவரது இறுதி ஊர்வலத்தின் போது சேர்ந்த கூட்டமும் கண்ணீர் விட்டவர்களின் எண்ணிக்கையும் இவரது அன்புள்ளத்தைப் பறைசாற்றும்.

வாழ்ந்தால் இப்படித்தான் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்கு வரைவிலக்கணம் வகுத்துச் சென்றவர் மாலினி.

Quelle - Thinakaran

Tuesday, September 16, 2008

நாச்சிமார்கோயிலடி இராஜன்

நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்
இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது.

கலையுலக வாழ்வு
இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால் "ஈழவில்லிசைச் செம்மல்" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் "வில்லிசைக் காவலர் " என்ற பட்டத்தைப் பெற்றார். ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் இவரது பல வில்லிசைகள் ஒளிபரப்பாகின.

நாடகத் துறை
நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார். பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காக பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தங்கப்பதக்கம்
1994 இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் "எதிர்பார்ப்புகள்" நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

1995 இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் "நீர்க்கோலம்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்பட்டது.

1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் "சுமைகள்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திரைப்படத்துறை
புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில் தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா? ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்படும் ஈழத்தவரின் முதல் திரைத் தொடர் நேசங்களுக்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்
எதிர்பார்ப்புகள் (நாடக நூல்)

Friday, September 05, 2008

கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)

கே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு
இவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். போராளிக்கலைஞர் மேஜர் சிட்டுவின் சகோதரன். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார்.

மெல்லிசைப் பாடல்கள்
இவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் மெல்லிசை ஆர்வலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இவரின் குரல் வளத்தைக் கண்டு இவரை அழைத்து இலங்கை வானொலியின் ஒரு விளம்பரத்துக்குப் பாட வைத்தார்கள். இப்படியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குள் பிரவேசித்த இவர் அங்கு நடந்த ஒரு மெல்லிசைப் பாடகர் தேர்வில் கலந்து கொண்டார். குரலில் நல்ல வளம் மிக்க இவர் முதல் தரத்திலேயே மோகன்ராஜ் இன் தந்தை ஆர். முத்துச்சாமி அவர்களால் தேர்வு செய்யப்பட்டு மெல்லிசைப் பாடகர் ஆனார். இவரது முதற்பாடல் இசைக்காய் நான் உனது இதயத்தை... என்று தொடங்கும் பாடல். தற்சமயம் ஜேர்மனியின் பல பாகங்களிலும் அரங்கேறி இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் திரைப்படப் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவர் பாடிய முதல் திரைப்படம் புதிய காற்று.

பாடிய சில மெல்லிசைப் பாடல்கள்
1-பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளை மனம் கல்லு என்பார்... (வரிகள்:ஈழத்து இரத்தினம், இசை: மோகன்ராஜ்)
2-இசைக்காய் நான் உனது இதயத்தை...
3-தாயான உன்னை நோயாளி ஆக்கி தரை மீது வந்தேன் அம்மா...
4-சந்திர முகம் உனதோ சிந்திடும் நிழல்.. (இசை: மோகன்ராஜ்)
5-அன்னைக்கு இல்லாத பாசமா... (வரிகள்: ஈழத்து இரத்தினம்)

பாடிய சில திரைப்படப் பாடல்கள்
1-மலை நாட்டில் ஒரு மாற்றம் தர வேண்டும்... (படம்: புதிய காற்று)
2-நான் உங்கள் தோழன்... (படம்: வி. பி. கணேசனின் நான் உங்கள் தோழன்)

இசைக்குழு
இவர் மிகவும் பிரபலமாக இருந்த சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவின் இயக்குனராகவும் இருந்தார். முதலில் இந்த இசைக்குழுவை இயக்கி வந்த குணசேகரன்(பொறியியலாளர்) என்பவரே இவரிடம் இந்த இசைக்குழுவைக் கையளித்தார்.

சுவையான தகவல்
ஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது எத்துணை சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் இந்த மெல்லிசைப் பாடகர் கே. எஸ் . பாலச்சந்திரனும், அண்ணை றைற் பாலச்சந்திரனும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். இப்போதும் பலருக்கு இவர்களை யார் யாரென இனம் காணுவதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே கே. எஸ் . பாலச்சந்திரன்தான்.

வெளி இணைப்புக்கள்
பெற்ற மனம் பித்து என்பார்