Friday, December 06, 2013

விருது வென்ற நெறியாளர் லெனின் எம். சிவம்

Tamil Culture  வலைப்பக்கத்தில் நிவே தம்பித்துரை ஆங்கிலத்தில் செய்த நேர்காணலின் சுருக்கம்.
தமிழாக்கம்: அ. யேசுராசா

 உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்....

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த நான், எனது பதினேழாவது வயதில் –  1991 இல் கனடா வந்து ரொறொன்ரோவில் வசிக்கிறேன். அங்கு உயர்தரப் பாடசாலையில் பயின்று, பட்டப்படிப்புக்காக வோட்டர்லூ பல்கலைக்கழகத்துக்குச் சென்றேன். மென்பொருள் உருவாக்குநனாக முழுநேரத் தொழில் செய்வதோடு, அதற்குமப்பால் திரைப்படங்களை உருவாக்குவதற்கும் நேரத்தை ஒதுக்குகிறேன்.

திரைப்படக்காரனாக வரவேண்டுமென எப்போதும் நீங்கள் கருதியிருந்தபோதும், எவ்வாறு மென்பொருள் உருவாக்குநன்  ஆனீர்கள்?

உயர்தரப் பாடசாலைக் கல்வியை முடித்ததும், திரைப்படத்துறை பற்றி அல்லது வானியல் பற்றிக் கற்க விரும்புவதாகக் குடும்பத்தின ரிடம் சொன்னேன். ஆனால், கணினித் துறையில் கற்குமாறு அறிவுறுத்தப் பட்டேன்.  அதனால், கணினித்துறையில் கற்பதற்காக வோட்டர்லூ பல்கலைக்கழகம் சென்றேன். எனது தந்தை நாடகாசிரியராகவும், அப்போது துளிர்க்கத் தொடங்கிய இலங்கைத் தமிழ்ப்படத் துறையில் நடிகராகவும் இருந்தார்; அவரும் குடும்பமும் இதன்காரணமாகப் பல தியாகங்களைச் செய்யநேர்ந்தது. தந்தையின் அடிச்சுவட்டை நான் தொடர்வதில், இயல்பாகவே அம்மாவுக்கு அச்சமிருந்தது. எனவே, முதலில் எனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, விரும்பிய  எதையும் செய்யுமாறு சொன்னார். 2000 ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடித்த பின், திரைப்படங்களை உருவாக்குவதில் ஈடுபட்டேன். என் மனைவியும்  பிள்ளைகளும் குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக உள்ளனர்.

சுயமாகக் கற்றுக்கொண்ட திரைப்படப் படைப்பாளியாகச் சித்திரிக்கப்படுகிறீர்கள்.... இந்தக் கலையை எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?

றையர்சன் பல்கலைக்கழகத்தில், திரைப்படத்துறைப் படிப்பில் சில கற்கைநெறிகளில்  பயின்றேன். திரைப்பட  உருவாக்கம் பற்றி அநேக நூல்களை வாசித்தேன். ஒன்லைனிலுள்ள வளங்களைப் பயன்படுத்தினேன்; எல்லாமே அங்கு உண்டு – எனவே நீங்கள் செய்யவேண்டியது வாசிப்பு, வாசிப்பு.... மேலும் வாசிப்பு! ஆனால் இவை குழப்பகரமாக இருக்கலாம். உதாரணமாக, திரைச்சுவடி எழுதுதல் சிறந்த திரைப்படத்துக்கு அடிப்படையானது. அங்குள்ள ஏராளமான சிறந்த நூல்கள் வெவ்வேறு விதமான – முரண்படும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. கால அடைவில் வெவ்வேறு பகுதிகளைத்  தேர்வுசெய்து, திரைப்படம் பற்றியும்  திரைப்படத் தயாரிப்புப் பற்றியும் உங்கள் சொந்தக் கருத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இதுதான் உங்களை எத்தகைய திரைப்படப் படைப்பாளியென வரையறுத்துக் காட்டும்.

உங்கள் திரைப்படங்கள் சொல்லும் கதைகளைத் தேர்ந்தெடுக்க உங்களைத் தூண்டியது எது?

என்னை நான் வித்தியாசப்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிவந்து, கனடாவின் சூழலுக்குத் தம்மைத் தகவமைக்கக் கடுமுயற்சி எடுக்கும் தமிழ்ச் சமூகத்தை - குறிப்பாக குவிமையப்படுத்த விரும்பினேன். குறும்படங்களில் பரிசோதனை  செய்யத் தொடங்கினேன்;  ரொறொன்ரோவிலுள்ள ‘சுதந்திர கலைத் திரைப்படச் சங்கம்’ அவ்வாண்டின் சிறந்த படமாக, எனது முதற் படத்தை அடையாளப்படுத்தியது. இது எனது தன்னம்பிக்கையைப் பெரிதும் உயர்த்தி, இன்னும் பெரியதும் கடினமானதுமான திட்டங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தியது. இப்படித்தான் எல்லாம் ஆரம்பமானது.

திரைப்படத் தயாரிப்பில் நீங்கள் எதிர்கொண்ட சிலசவால்கள்....?

திரைப்படத் தயாரிப்பில் இடர்களை எதிர்கொள்வது கடினமானது; ஏனெனில், நான் பராமரிக்கவேண்டிய குடும்பமொன்று உள்ளது. திரைப்படம் காலத்தையும் பெரும் நிதியையும் உறிஞ்சுவது – அத்துடன் நீங்கள் வெற்றியடைவீர்களா என்பதும் உறுதியாகத் தெரியாது. நிதி அடிப்படையானது. ஒரு தயாரிப்பாளர் கிடைத்தாலும், எங்கள் படங்களைப் பார்ப்பதற்குப் பார்வையாளரைத் திரையரங்குக்குக் கொண்டுவருவது கடினமாயுள்ளது. அப்படியானால் முதலிடும் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி? திரைப்பட விழாக்களில் இடம்பெறச் செய்வதுதான் ஒரே நம்பிக்கை. அங்கு ஒருவிநியோகஸ்தரால் அது தேர்ந்தெடுக்கப் படுமானால், அடுத்த படிக்கு அது செல்லும். இருந்தபோதிலும், ‘1999’ திரைப்பட விழாக்கள் பலவற்றில் இடம்பெற்றபோதும் நான் விருதுகள் பெற்றபோதும், சவால்கள் இன்னும் முடியவில்லை. உங்கள் ‘தரிசனத்’தைப் பணயம்வைப்பதற்குரிய  தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் கண்டுபிடிப்பது, கடினமான போராட்டமாகவே உள்ளது.

ஒரு திரைப்படப் படைப்பாளியாகச் செய்து முடித்தவைபற்றித் திருப்தி அடைகிறீர்களா?

இல்லை, இன்னும் செய்யவேண்டியுள்ளது! அத்திரைப்படங்கள் மதிப்புக்குரியனவாக உள்ளபோதிலும், திரைப்படக் கலைஞனாக எனது முழு உள்ளாற்றலையும் அவற்றில் காட்டியுள்ளதாக உணரவில்லை. ஒவ்வொரு முறையும் ‘1999’ திரைப்படத்தைக் காட்சி காட்சியாகப் பார்க்கும் போது, நான் காண்பதெல்லாம் தவறுகளையே! மக்களுக்கு அதைக் காட்டிய போது அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தார்கள்; ஆனால், எனக்குத் திருப்தி தரக்கூடிய படத்தை உருவாக்க விரும்புகிறேன். சவால்கள் எவ்வளவு பெரிதானாலும் பொருட்டில்லை. எனது  கனவை நிறைவேற்றத் தொடர்ந்து செயற்படப் போகிறேன். ஆகையால் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெற்றிகரமான படங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திரைப்படப் படைப்பாளியாக விரும்புகிறவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

உங்களுக்கு நேர்மையாக இருந்து, உங்கள் திறமையைக்காட்டுங்கள். கதைக்கும் பாத்திரங்களுக்கும் உண்மையாக இருங்கள். உங்கள் இதயத்துக்கு நெருங்கிய – உங்களால் அணுகப்படக்கூடிய விடயத்தைத் தெரிவு செய்யுங்கள். அதுதான் பரந்த பார்வையாளரை ஈர்க்கும். உங்கள் கதைபற்றி நுண்மையாகப் பார்ப்பது, பேரளவிலான  ஈர்ப்பைத் தரும்.

நீங்கள் விரும்பும் நெறியாளர்?

குவென்ரின் ரறன்ரினோ!

மிகவும் விரும்பும் திரைப்படம்?

 பல்ப் ஃவிக்சன் ( Pulp Fiction )

உங்களைத்தூண்டுபவர்கள் யார்?

எனது  பாத்திரங்கள்.... நான் அவர்களை நேசிக்கிறேன். என் இதயத்தில் வாழ்ந்துகொண்டு, தங்கள் கதைகளைச் சொல்லுமாறு அவர்கள் என்னைத் தூண்டுகிறார்கள்!

                                                                                   -கலைமுகம்
                                                                                     ஐப்பசி - மார்கழி 2013

Tamil Culture  வலைப்பக்கத்தில் நிவே தம்பித்துரை ஆங்கிலத்தில் செய்த நேர்காணலின் சுருக்கம்.
தமிழாக்கம்: அ. யேசுராசா