Thursday, October 18, 2007

வ.ந.கிரிதரன்!

தனது பத்தாவது வயதில் எழுத்துலகில் காலடி வைத்த வ.ந.கிரிதரன் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது தொராண்டோ, கனடாவில் வாழ்ந்து வருபவர்.

இலங்கையில் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ஈழநாடு சிறுவர் மலர் மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தவர். முதலாவது கவிதையான 'பொங்கலோ பொங்கல்' சுதந்திரனில் வெளிவந்துள்ளது. அதன் பின் இவரது சிறுவர் கால ஆக்கங்கள் பல வெற்றிமணி, சுதந்திரன், சிரித்திரனின் 'கண்மணி', மற்றும் சிரித்திரனில் வெளி வந்திருக்கின்றன. இவர் ஏழாம் வகுப்பில் இருந்த பொழுது அகில இலங்கைத் தமிழ்த் தின விழாக் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையிலேயே முதலாவதாக வந்துள்ளார். ஆரம்பகாலக் கவிதைகள் பல வீரகேசரி, ஈழநாடு, சிந்தாமணி, ஈழமணி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் வெளி வந்திருக்கின்றன. இவரது முதலாவது சிறுகதையான 'சலனங்கள்' சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப் பட்ட கதைகளில் ஒன்றாக வெளி வந்தது. அப்பொழுது வயது 17. அதன் பின் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் சில ஈழநாடு, தினகரன் ஆகியவற்றில் வெளி வந்திருக்கின்றன. இவரது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு', 'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளி வந்திருக்கின்றன.

மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் கனடாவில் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் (இணையத் தள பராமரிப்பு , இணையத் தள அப்ளிகேசன்கள் எழுதுதல்) தகைமைகள் பெற்றுள்ளார். மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார்.

இதுவரையில் இவரது ஐந்து நூல்கள் வெளி வந்துள்ளன. சிறுகதைகள் மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலை உள்ளடக்கிய தொகுதியான 'அமெரிக்கா' தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு' ஆய்வு நூலும் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கனடாவில் 'மங்கை பதிப்பக' வெளியீடுகளாக 'மண்ணின் குரல்' (கனடாவில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவல்),'எழுக அதி மானுடா (கவிதைத் தொகுதி) ஆகியன வெளி வந்துள்ளன. 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'. 'கணங்களும் குணங்களும்' (இவை 'தாயகத்தில்' தொடராக வெளிவந்தவை), 'மண்ணின் குரல்' ஆகியவற்றின் தொகுதி தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக 'மண்ணின் குரல்' என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளது. இவரது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்திலிருந்து வெளி வந்த 'பனியும் பனையும்' தொகுதியில் இடம் பெற்றுள்ளது. 'சுவடுகள்' இதழில் வெளிவந்த 'பொந்துப் பறவைகள்' சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் அவர்களது தமிழ்ப் பாடத்திட்டமொன்றில் சேர்க்கப் பட்டுள்ளது. 'சுலேகா.காம்' இல் இவரது இரு சிறுகதைகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டவை) இடம் பெற்றுள்ளன. தொராண்டோவில் ஒரு சில இதழ்களே வெளிவந்த 'இரவி' மற்றும் 'கல்வி' ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான இவர் தொரண்டோவில் ஆரம்ப காலத்தில் 'குரல்' என்றொரு கையெழுத்துப் பிரதியினையும் வெளியிட்டவர். அத்துடன் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் 'நமது பூமி' என்றொரு செய்திக் கடிதத்தினையும் (News Letter), 'கணினி உலகம்' என்றொரு நியூஸ் லெட்டரையும் வெளியிட்டவர். இவையும் ஒரு சில இதழ்களே வெளிவந்தன.

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின் இவரது ஆக்கங்கள் (சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன) 'தாயகம்', 'தேடல்', 'கணையாழி', 'துளிர்', 'சுவடுகள்', 'உயிர் நிழல்', 'ஆனந்த விகடன்', 'சுபமங்களா' மற்றும் இணைய இதழ்களான 'திண்ணை', 'அம்பலம்',' ஆறாந்திணை', ´மானசரோவர்.காம்' ஆகியவற்றில் வெளி வந்திருக்கின்றன. 'ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்', 'பிரபஞ்ச ஆய்வு', 'திராவிடக் கட்டடக்கலை' பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் வீரகேசரி, கணையாழி, திண்ணை போன்றவற்றில் வெளி வந்திருக்கின்றன. 'மரபும் கவிதையும்', 'வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்' ஆகிய தொடர்கள் மற்றும் 'பாரதியின் படைப்புகள்' பற்றிய கட்டுரைகள் 'தாயகம்' இதழில் வெளி வந்துள்ளன. தமிழ் இலக்கியம் சம்பந்தமான பல்வேறு விமரிசனக் கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளி வந்திருக்கின்றன.

2000ம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்' இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார். திண்ணை, பதிவுகள் போன்றவற்றில் நடைபெறும் விவாதங்கள் பலவற்றில் ஜீவன் கந்தையா, திண்ணை தூங்கி, டிசெதமிழன் ஜெயமோகனுட்படப் பலருடன் தீவிரமாகப் பங்கு பற்றி வருபவர். திண்ணை மற்றும் பதிவுகளில் தீவிரமாக விவாதிக்கப் பட்ட 'ஜெயமோகனின் விஷ்ணுபுரம்', 'மு.தளையசிங்கத்தின் நிலைப்பாடு', 'தீண்டாமை', மற்றும் பல்வேறு இலக்கியம் சம்பந்தமான நடைபெற்ற/நடைபெறும் விவாதங்கள் முக்கியமானவை. அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் ஆபிதீன்/சாரு நிவேதிதா பற்றிய விவாதங்களும் முக்கியமானவை.

ஈழத்தின் முற்போக்கு இலக்கிய முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள். பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால் ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது.

தகவல்கள் - பதிவுகள்

Friday, October 05, 2007

வள்ளிநாயகி இராமலிங்கம்

- கலாநிதி பார்வதி கந்தசாமி -

குறமகள் கதைகள் என்ற சிறுகதை நூலின் எழுத்தாளரான வள்ளிநாயகி இராமலிங்கம் யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஒர் ஆய்வு என்ற ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இளமைக் காலம் முதல் பெண்களின் சமத்துவத்தில் அக்கறை காட்டிவந்த வள்ளிநாயகிக்கு வீட்டில் எல்லாவித தேவைகளும் நிறைவேற்றப் படக் கூடிய பொருளாதாரச் சூழ்நிலை இருந்ததாலும் தொடர்கல்விக்கான தந்தையாரின் ஆதரவு கிடைத்ததாலும் மிடுக்காக எதையும் செய்யக் கூடியவராக அவர் காலப் பெண்களுள் ஒரு புதுமைப் பெண்ணாக வாழக் கூடியவராக இருந்தார். இந்த வாய்ப்பு யாழ்ப்பாணத்துப் பெண்கள் பலருக்குக் கிடைக்காதது. காலனித்துவ மரபால் வந்த கிறிஸ்தவக் கல்லூரியூடாக ஆங்கிலக் கல்வியையும் பெற்றுக் கொண்ட வள்ளிநாயகி கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகப பணியாற்றியவர். இந்தியாவில் புவனேஸர் கல்லூரியில் வெளிவாரிப் பட்டதாரியாகி நாடக டிப்ளோமாவைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் செய்து கொண்டவர். தமிழார்வத்கைப் பாலபண்டித வகுப்புக்களுக்குச் சனி – ஞாயிறு கிழமைகளில் சென்று நிறைவேற்றிக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி வகுப்பில் கற்க முயன்ற குறமகள் ஆய்வுக் கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு முயற்சியின் மூலம் இந்த நூற் தொகுதியின் மூன்று கட்டுரைகளையும் எழுதிக் கொண்டார். வள்ளிநாயகியின் வீட்டுச்சூழல் காந்தியக் கருத்துக்களை இறுகப் பற்றிப் பிடிக்க வைத்தது. இவரின் சித்தப்பா ஒருவர் கல்வி கற்க வேண்டிய தேவையின் அவசியத்தை வெகுவாக உணர்த்தினார். அவருடைய கருத்துக்களால் கவரப்பட்ட வள்ளிநாயகி உயர்கல்வி கற்பதற்கு உந்தப் பட்டார். அவருடைய காலத்தில் ஏழாம் வகுப்புடனேயே பாடசாலைக்கு முழுக்குப் போடும் பெண்கள் பலராக இருந்தனர். ஆனால் வள்ளிநாயகி இளவாலை கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரியில் சேர்ந்து கல்வியில் தன்னை உயர்த்திக் கொண்டார். தன்னுடன் நடேஸ்வராகக் கல்லூரியில் ஏழாம் வகுப்பு வரை படித்த பெண்களில் இருவர் உடுவில் பெண்கள் பாடசாலைக்கும், நான்கு பேர் இராமநாதன் கல்லூரிக்கும் ஒருவர் இளவாலை கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிக்கும் சென்றதாகக் கூறிக் கொண்டார்.

குறமகளுடைய பெண்கள் தொடர்பான ஈடுபாட்டிற்குப் பின்புலமாக இருந்தது இடையாற்று மங்கலம் சூடாமணி ஐயர் என்ற நடேஸ்வராக் கல்லூரியின் அதிபரின் இடையறாத காந்தீயச் செயற்பாடுகள். அவர் இந்திய சுதந்திரம் பற்றி நிறையவே போதித்து வந்தவர். காந்தி பற்றியும் ஹரிசனர்கள் பற்றியும் ஏழைகள் பற்றியும் பலரையும் பேசுவதற்காகக் கல்லூரிக்கு அழைத்துக் கொண்டவர். இந்தியாவிற்கு அடிக்கடி சென்று வந்த வர்த்தகரான தந்தையார் சின்னத்தம்பியின் உதவியினால் சரோஜினி நாயுடு, கமலா நேரு, மோதிலால் நேரு, விஜயலட்சுமி பண்டிற் போன்றோர் பற்றிய ஏராளமான நூல்களைப் பெற்று வாசித்துக் கொண்டார். அத்துடன் நடேஸ்வராக் கல்லூரியின் நாடகங்கள் மேடையேற்றிய சமயத்தில் காட்சி மாறும் வேளையில் முன்புறமாக வள்ளிநாயகியும் செய்தி அறிவிப்பாளர் விக்னேஸ்வரனின் தாய் கமலாவும் வள்ளி ராதை கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியது கூட அக்காலத்தில் பெண்கள் முன்நின்று செய்யாத விடயமாக இருந்தது. வைரமுத்து குழுவினரின் நாடகங்களையும் காங்கேசன்துறையில் அடிக்கடி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததும் நாடக ஆர்வம் இவருக்கு எழக் காரணமாயின.

கிறிஸ்தவப்பெண்கள் கல்லூரி தன் கல்வி உயர்வில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது எனக் கூறினார் குறமகள். பெண்கள் சீர்திருத்தம், சமத்துவம் தொடர்பாகச் சிறுகதைகளை எழுதி வந்த குறமகள் முதுமானிப் பட்டப் படிப்பிற்காக ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கிய போது கூமப் பெண்கல்வியை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார். ஆய்வு முழுமையாக முற்றுப் பெறா விட்டாலும் ஆய்வு மூலம் அவர் எழுதிக் கொண்ட மூன்று கட்டுரைகளும் அவருடைய ஆய்வுப் புலமைத்துவத்தை யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி என்ற நூலில் வெளிக்காட்டுவதைக் காணலாம். இந்நூலில் அந்த மூன்று கட்டுரைகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18ம் நூ.ஆ தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரை என்பது முதலாவது கட்டுரையாகும். இந்நூலுக்கு முகவுரை எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி “இக்கட்டுரை வரன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சீரிய ஆய்வின் முதல் வரைபு என்று கொள்ளப் படத்தக்கது. இக் கட்டுரையில் இடம் பெறும் தரவுகள், தகவல்கள், ஆராய்ச்சி வியாக்கியானங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது மிக்க ஆர்வத்துடன் மிகப் பெரிய ஒரு பரப்பினை அலசி ஆராய்ந்துள்ளார் என்பது தெரிய வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கட்டுரையாக சைவமும் தமிழும் வளர்த்த தமிழ்ச்செல்வி பார்வதி அம்மையார் பற்றியும் மூன்றாவது கட்டுரையாக காந்திய வழி சமூகசேவையாளர் “தமிழ மகள்”_ மாசிலாமணி மங்களம்மாள் பற்றியும் எழுதியுள்ளார். மங்களம்மாளை நேரடியாகவே சந்தித்து முதல் தர ஆய்வுத் தரவுகள் பெற்றுக் கொண்டவர். இந்நூலின் பின்னிணைப்பாக மங்களம்மாளின் முதல் சந்திப்பும் தொடர்பும், புகையிரதப்பாதை, டாக்டர் வண.பீற்றர் பேர்சிவல் பாதிரியார் பற்றியும் கொடுக்கப் பட்டுள்ளது.

மங்களம்மாள் பற்றிய வரலாறு யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுடைய உயர்வு எத்தகைய சமூகப் பரிமாணங்களைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றது. இலங்கைப் பெண்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர்கள் இதுவரை வெளிக்கொண்டு வராத தமிழ் மகள் என்ற பத்திரிகையை நடாத்திய வண்ணார் பண்ணை வாசியான மங்களம்மாள் பற்றிய தகவல்களை ஆய்வு மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளமை வள்ளிநாயகியின் ஆய்வுப் புலமையை வெளிப் படுத்துகின்றது.

பெண்கல்வி என்று பார்க்கும் போது யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் நிலவிய பெண்கள் பற்றிய கருத்தாக்கம் பால்நிலை சார்ந்தவை என்பதை வள்ளிநாயகி துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றார். வள்ளிநாயகி தனது முகவுரையில் நாவலர் மேல் வைத்திருந்த மதிப்பு அவருடைய நாலாவது பாலபாடத்தை வாசித்ததும் அதிர்ச்சியைத் தந்ததாகக் கூறுகின்றார். நாவலர் பெண்களைத் தீட்டுக்குரியவர்களாகக் கருதி அவர்களுக்கான உயர்வு பற்றிச் சிந்திக்கவில்லை. அவருடைய சமய நூல்களில் பெண்கள் எது எல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றி எழுதியுள்ளார்.

இந்நூலுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்களும் ஆங்கிலத்தில் முன்னுரை வழங்கியுள்ளார். வள்ளிநாயகி போன்று ஈழத்துப் பெண்கள் கல்விப் பாரம்பரியத்தையோ ஈழத்துப் பெண்களுடைய வாழ்வியல் பிரச்சினைகள் பற்றியோ ஆய்வுகளை யாரும் இன்னமும் ஆழமாக மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஆய்வு பெண்கள் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

Thursday, August 23, 2007

கலாநிதி செ.பத்மமனோகரன்

இலங்கையில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது நெதர்லாந்தில் உள்ள Utrecht பல்கலைக்கழகத்தில் இரசாயனத்துறையில் பணியாற்றுகிறார்.

கூழ் இரசாயனவியலில் (Collid Chemistry) இவர் எழுதியுள்ள பல ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. ஐரோப்பியாவில் நடைபெறும் தமிழ் இலக்கியச் சந்திப்புகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதுடன், அவற்றை ஒழுங்கு செய்வதிலும் தன்னாலான பங்கைச் செய்து வந்தார். நெதர்லாந்தில் வெளிவந்த ´அஆஇ´ சஞ்சிகையிலும் பணியாற்றியுள்ளார்.

Saturday, July 14, 2007

ஓவியர் விஜிதன்

நேர்காணல்

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை

சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக் கொண்டு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.

ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப் படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்தி முறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இநதப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக் கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம். ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன் அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால்
பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது
மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டு வந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.

உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டு வந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

கருத்து ரீதியாக இருளை மனங்களின் இருண்மையாக காண்பிக்கிறீர்களா?

எடுத்துக்கொள்ளலாம், ஒளியென்று சொல்லும் பொழுது பார்க்கப்படுகின்ற விசயம் மட்டும் ஒளியை மையப்படுத்தி சுத்திவர இருளாக இருக்கும். ரசிகன் பார்க்கவேண்டிய இடம் மட்டும் ஒளியுடையதாக இருக்கும் பார்வைப்புலத்தில் பார்வை சிதறல் ஏற்படாது அதற்காக இத்தகைய உத்திமுறைகளை கையாள்கிறேன்.

அரசியல் ரீதியான ஓவியங்களையும் வரைந்திருக்கிறீர்கள் நிலக்காட்சிகளை சிதைக்கப்பட்ட முறையில் வரைந்திருக்கிறீர்கள். ஒடுக்குமுறையை சித்தரிக்கும் படங்களில் இருண்மை அதிகமாக இருக்கிறது

எமது சமூகம் ஒரு குழப்பமானது, சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்கின்ற வாழ்க்கை முறை, இவற்றை வெளிப்படுத்தி இருப்பது தவிர்க்க முடியாத விடயம். அந்த வகையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும் அப்படித்தான். இந்த ஓவியக் காண்பியத்துக்குக் கூட சாளரம் வழியே ஓவியனின் விரல்கள் என்றே தலைப்பிட்டிருக்கிறேன். ஒரு முழுமையான, சுதந்திரமில்லாத ஒரு தன்மையை கொண்டிருப்பதனாலேயே ஓவியனாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி ஒரு சுதந்திரமான தன்மையில்லாத நிலையை கொண்டு வந்திருக்கிறேன். அதால இருள் ஒளி என்ற விடயமும் அதுக்குள்ள வருது.

சாதாரன கற்பித்தல் முறையில் ஓவியம் என்பது ஒரு பாடமாக இருக்கிறது, ஒரு புதிய உத்தி முறையை கையாளக்கூடிய அளவிற்கு எங்களுடைய ஓவியக் கற்கை முறை இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஏனென்று சொன்னால் நான் கூட பல்கலைக்கழக மட்டத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அங்கும் வித்தியாசமான படைப்புக்களை படைப்பதற்கான கற்பித்தல் முறை இல்லையென்றுதான் சொல்வேன். ஆரம்பத்தில் படித்த அதே பாடத்திட்டங்கள் கொஞ்சம் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்கள் மாதிரி ஏதாவது வித்தியாசமாக படைக்கவேண்டும் ஒரு வடிவமைக்கவேண்டும். அப்படியான புதுமையான விடயங்களை கற்பிக்கின்ற முறைமை காணப்படவில்லை .இதுவொரு முக்கியமான விடயம் என்னுடைய விரிவுரை தவிர்ந்த நேரங்களில் வீட்டிலே வெளிநாட்டு ஓவியங்களை இணையம் மூலமாக பார்த்து அதனோடு சில விடயங்களைப் பெற்றுக்கொண்டு ஏன் இப்படிச்செய்தால் என்ன என்ற கேள்விகளை என்னுள் எழுப்பிக் கொண்டேன். இன்றைக்கு இப்படியான ஓவியங்களை காட்சிப்படுத்துவது முக்கியம் பெற்றிருக்கிறது.

நேர்கண்டவர்- தி.தவபாலன்

Quelle - Erimalai

Tuesday, May 01, 2007

சந்திரா இரவீந்திரன்

சந்திரா இரவீந்திரன் இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். 1981இல் ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு
சந்திரா இரவீந்திரன் (சந்திரகுமாரி) இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணி புரிகிறார்.

இலக்கியப் பணிகள்
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ்ஒலி ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் இரண்டாவது பரிசைப் பெற்றுக் கொண்டது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன. இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர், முன்னரைப் போல எழுதிக் குவிக்காது விட்டாலும் அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். இவரது படைப்புக்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு தரம் வாய்ந்தவையாக அமைந்து பலரது கவனைத்தையும் பெறத் தவறுவதில்லை.

இவரது நூல்கள்
நிழல்கள் - (சிறுகதைகளும் குறுநாவலும்)

இவரது படைப்புக்களில் சில
சில நேரங்களில் சில நியதிகள்
சிவப்புப் பொறிகள் (சிரித்திரன், 1986 - மூன்றாம் பரிசு)
மடமையைக் கொளுத்துவோம்
எரியும் தளிர்கள் (சிரித்திரன், 1987 - முதற் பரிசு)
தரிசு நிலத்து அரும்பு
நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் (குறுநாவல் - 1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)

முறியாத பனை
யாசகம் - சிறுகதை
பால்யம் - சிறுகதை

கேணல் கிட்டு - கவிதை
நானுன்னை இனி எங்கு தேடுவேன்? - கவிதை

புலம் பெயர்ந்த கடவுளர்கள்

Tuesday, February 27, 2007

அம்பி

அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் ஒரு கவிஞர். ஈழத்து எழுதாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். பல ஆண்டுகள் பப்புவா நியூ கினியில் பணியாற்றி விட்டு, தற்சமயம் சிட்னியில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு, குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகளை எழுதி வருகிறார்.

இவர் அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பாட நூல் ஆலோசகராகவும் பணியாற்றியவர். மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களுக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் பெற்ற விருதுகள்
*கவிதைக்காக (கொஞ்சும் தமிழ்) இலங்கை அரசின் சாகித்திய விருது.
*கவிதைக்காக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தங்கப் பதக்கம்.

இவரது படைப்புக்கள்
*கிறீனின் அடிச்சுவடு (யாழ்ப்பாணம், 1967)
*அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள், சுண்ணாகம், 1969)
*வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம், கொழும்பு, 1970)
*கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள், கொழும்பு, 1992)
*அந்தச் சிரிப்பு
*யாதும் ஊரே; ஒரு யாத்திரை
*அம்பி கவிதைகள் (சென்னை, 1994)
*மருத்துவத் தமிழ் முன்னோடி (சென்னை, 1995)
*Ambi's Lingering Memories (Poetry, பப்புவா நியூ கினி, 1993, 1996)
*Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green (கொழும்பு, 1998)
*உலகளாவிய தமிழர் 1999
*A String of Pearls
*பாலர் பைந்தமிழ்

Monday, February 19, 2007

நல்லைக்குமரன் (கந்தையா குமாரசாமி)

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் EDITOR´S CHOICE AWARD பெற்ற கவிஞர்.

இலங்கை நிலவரவுத் திணைக்களத்தில் பட வரைஞராகப்(1956-1982) பணியாற்றியவர். தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள் எழுதுபவர். அவுஸ்திரேலியத் தமிழர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் பிரபல பத்திரிகைகள் உட்பட மல்லிகையிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் உதயம், கலப்பை, கனடா உலகத் தமிழோசை போன்ற பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும எழுதிக் கொண்டிருக்கிறார்.