Thursday, October 18, 2007

வ.ந.கிரிதரன்!

தனது பத்தாவது வயதில் எழுத்துலகில் காலடி வைத்த வ.ந.கிரிதரன் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது தொராண்டோ, கனடாவில் வாழ்ந்து வருபவர்.

இலங்கையில் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ஈழநாடு சிறுவர் மலர் மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தவர். முதலாவது கவிதையான 'பொங்கலோ பொங்கல்' சுதந்திரனில் வெளிவந்துள்ளது. அதன் பின் இவரது சிறுவர் கால ஆக்கங்கள் பல வெற்றிமணி, சுதந்திரன், சிரித்திரனின் 'கண்மணி', மற்றும் சிரித்திரனில் வெளி வந்திருக்கின்றன. இவர் ஏழாம் வகுப்பில் இருந்த பொழுது அகில இலங்கைத் தமிழ்த் தின விழாக் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையிலேயே முதலாவதாக வந்துள்ளார். ஆரம்பகாலக் கவிதைகள் பல வீரகேசரி, ஈழநாடு, சிந்தாமணி, ஈழமணி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் வெளி வந்திருக்கின்றன. இவரது முதலாவது சிறுகதையான 'சலனங்கள்' சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப் பட்ட கதைகளில் ஒன்றாக வெளி வந்தது. அப்பொழுது வயது 17. அதன் பின் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் சில ஈழநாடு, தினகரன் ஆகியவற்றில் வெளி வந்திருக்கின்றன. இவரது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு', 'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளி வந்திருக்கின்றன.

மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் கனடாவில் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் (இணையத் தள பராமரிப்பு , இணையத் தள அப்ளிகேசன்கள் எழுதுதல்) தகைமைகள் பெற்றுள்ளார். மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார்.

இதுவரையில் இவரது ஐந்து நூல்கள் வெளி வந்துள்ளன. சிறுகதைகள் மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலை உள்ளடக்கிய தொகுதியான 'அமெரிக்கா' தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு' ஆய்வு நூலும் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கனடாவில் 'மங்கை பதிப்பக' வெளியீடுகளாக 'மண்ணின் குரல்' (கனடாவில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவல்),'எழுக அதி மானுடா (கவிதைத் தொகுதி) ஆகியன வெளி வந்துள்ளன. 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'. 'கணங்களும் குணங்களும்' (இவை 'தாயகத்தில்' தொடராக வெளிவந்தவை), 'மண்ணின் குரல்' ஆகியவற்றின் தொகுதி தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக 'மண்ணின் குரல்' என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளது. இவரது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்திலிருந்து வெளி வந்த 'பனியும் பனையும்' தொகுதியில் இடம் பெற்றுள்ளது. 'சுவடுகள்' இதழில் வெளிவந்த 'பொந்துப் பறவைகள்' சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் அவர்களது தமிழ்ப் பாடத்திட்டமொன்றில் சேர்க்கப் பட்டுள்ளது. 'சுலேகா.காம்' இல் இவரது இரு சிறுகதைகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டவை) இடம் பெற்றுள்ளன. தொராண்டோவில் ஒரு சில இதழ்களே வெளிவந்த 'இரவி' மற்றும் 'கல்வி' ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான இவர் தொரண்டோவில் ஆரம்ப காலத்தில் 'குரல்' என்றொரு கையெழுத்துப் பிரதியினையும் வெளியிட்டவர். அத்துடன் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் 'நமது பூமி' என்றொரு செய்திக் கடிதத்தினையும் (News Letter), 'கணினி உலகம்' என்றொரு நியூஸ் லெட்டரையும் வெளியிட்டவர். இவையும் ஒரு சில இதழ்களே வெளிவந்தன.

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின் இவரது ஆக்கங்கள் (சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன) 'தாயகம்', 'தேடல்', 'கணையாழி', 'துளிர்', 'சுவடுகள்', 'உயிர் நிழல்', 'ஆனந்த விகடன்', 'சுபமங்களா' மற்றும் இணைய இதழ்களான 'திண்ணை', 'அம்பலம்',' ஆறாந்திணை', ´மானசரோவர்.காம்' ஆகியவற்றில் வெளி வந்திருக்கின்றன. 'ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்', 'பிரபஞ்ச ஆய்வு', 'திராவிடக் கட்டடக்கலை' பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் வீரகேசரி, கணையாழி, திண்ணை போன்றவற்றில் வெளி வந்திருக்கின்றன. 'மரபும் கவிதையும்', 'வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்' ஆகிய தொடர்கள் மற்றும் 'பாரதியின் படைப்புகள்' பற்றிய கட்டுரைகள் 'தாயகம்' இதழில் வெளி வந்துள்ளன. தமிழ் இலக்கியம் சம்பந்தமான பல்வேறு விமரிசனக் கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளி வந்திருக்கின்றன.

2000ம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்' இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார். திண்ணை, பதிவுகள் போன்றவற்றில் நடைபெறும் விவாதங்கள் பலவற்றில் ஜீவன் கந்தையா, திண்ணை தூங்கி, டிசெதமிழன் ஜெயமோகனுட்படப் பலருடன் தீவிரமாகப் பங்கு பற்றி வருபவர். திண்ணை மற்றும் பதிவுகளில் தீவிரமாக விவாதிக்கப் பட்ட 'ஜெயமோகனின் விஷ்ணுபுரம்', 'மு.தளையசிங்கத்தின் நிலைப்பாடு', 'தீண்டாமை', மற்றும் பல்வேறு இலக்கியம் சம்பந்தமான நடைபெற்ற/நடைபெறும் விவாதங்கள் முக்கியமானவை. அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் ஆபிதீன்/சாரு நிவேதிதா பற்றிய விவாதங்களும் முக்கியமானவை.

ஈழத்தின் முற்போக்கு இலக்கிய முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள். பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால் ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது.

தகவல்கள் - பதிவுகள்

No comments: