மூத்த எழுத்தாளர் வரதர்
ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர்.
'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.
தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது. செயல்வடிவம் பெற்றது.
1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர்.
இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.
தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர்.
மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும், அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார்.
1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது.
1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர்.
1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.
இவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின.
வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.
'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின.
வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம்.
வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர்.
வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.
No comments:
Post a Comment