Thursday, January 31, 2008

இசையமைப்பாளர் நிரு (நிர்மலன்)

எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்ததெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர்.

இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் செஞ்சாரு. இசையில் எனக்கு ஆர்வம் வந்ததுக்கு அப்பாதான் முதல் காரணம்!’’ _ தாய் மண்ணில் கழிந்த பால்ய காலத்தோடு நிருவின் பேச்சு தொடங்குகிறது.

‘‘1983_ல் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் ஆரம்பிச்சது. அப்போ எனக்கு மூணு வயசு. திடீர் திடீர்னு தெருவில் ஆட்கள் ஏன் பதட்டமா ஓடுறாங்க, அடிக்கடி ஏன் கரெண்ட் கட் ஆகுது, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வெளியே ஏன் யாரும் நடமாடுறதில்லைனு எதுவும் புரியல. ‘‘முந்தின நாள் சாயங்காலம் வரைக்கும் எங்கூட விளையாடிட்டிருந்த பையன் மறுநாள் காலையில் வெடிகுண்டுத் தாக்குதலில் காலை இழந்திருப்பான். நாள் தவறாமல் அப்பாவைப் பார்க்க வரும் நண்பரை திடீர்னு மாசக்கணக்கில் பார்க்க முடியாது. காரணம் கேட்டா, அவரை ராணுவம் கூட்டிட்டுப் போய்க் கொன்னுட்டதாக வீட்டில் சொல்வாங்க.’’ என்று கூறும் நிருவால் சில அதிகாலை நேரங்களை இன்னும் மறக்கவில்லை.

‘‘இருட்டு விலகாத காலை நேரத்துல ராணுவம் ஊருக்குள்ள வந்து, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, வெளியே வரச் சொல்வாங்க. துடிப்பாக தெரியுற ஆண்களைத் தேர்ந்தெடுத்து, வரிசையாக நிக்க வைப்பாங்க. அடுத்த நிமிஷம் தெருவையே அதிர வைக்கிற மாதிரி துப்பாக்கிச் சத்தம் கேட்கும். வரிசையில் நின்ன எங்காளுங்க செத்துக் கிடப்பாங்க. ராணுவத்தின் கண்ணில் பட்டவங்க பெண்களாயிருந்தா, அவங்களோடவே கூட்டிட்டுப் போயிடுவாங்க. முகாமுக்குப் போய், பல நாட்களுக்குப் பிறகு, புத்தி பேதலிச்சு திரும்பி வந்தவங்களை எனக்குத் தெரியும்!’’ _ உணர்வுகள் மரத்துப்போன குரலில் நிருவின் ஞாபகம் தொடர்கிறது.

‘‘போர்ச்சூழல் மேலும் கடுமையானதால், நாங்க பிரான்சுக்குப் போக முடிவு செஞ்சோம். தமிழர்கள் நெனைச்சவுடன் வெளிநாட்டுக்குப் போக முடியாது. போலீசுக்கும், ராணுவத்துக்கும் தெரியாம, சில காட்டுப் பாதைகள் வழியாக கொழும்பு விமான நிலையத்துக்குப் போய், அங்கிருந்துதான் கிளம்ப முடியும். குடும்பத்தின் பெரியவர்கள் எங்களை ஒவ்வொருவராக பைக்கில் கூட்டிட்டுப் போனாங்க. இரவில் காட்டில் தங்குறதும், பைக் பஞ்சர் ஆகும் போதெல்லாம் தூரத்துக் கிராமங்களில் வண்டியைச் சரி செய்ய ஆள் தேடி அலைவதுமாக அந்தப் பயணம் மூணு நாள் நீடிச்சது. எங்க நிலைமையாவது பரவாயில்லை, சிலர் லாரி டிரைவர்களின் உதவியோடு டீசல் டேங்கில் ஒளிஞ்சுகிட்டு வர முயற்சி செய்வாங்க. சில சமயங்கள்ல அவங்க மூச்சுத்திணறி இறந்த சம்பவங்களும் நடந்துருக்கு’’ என்று சொல்லும் நிருவுக்குப் பாரீசில் பல சவால்கள் காத்திருந்தன.

‘‘பிரான்சுக்குப் புலம் பெயர்பவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை மொழி. பிரெஞ்சுக்காரர்கள் இங்கிலீஷ் தெரிஞ்சாலும், பிரெஞ்சில்தான் பேசுவாங்க. ‘எங்க நாட்டுக்கு நீ வந்தால், எங்க மொழியில்தான் பேசணும்’ங்கிறதுல அவங்க பிடிவாதமா இருப்பாங்க. வீட்டுல தமிழ், வெளியே பிரெஞ்சுங்கிற முரண்பாட்டைச் சமாளிக்குறது கஷ்டமா இருந்தது. முதல் ஆறு மாசம் வெளியே போகவே விரும்பாம, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.. அடுத்தது, பிரான்சின் கடுங்குளிர். இன்னொரு பிரச்னை, பிரெஞ்சு சாப்பாடு. உப்பும் காரமும் ரொம்பக் குறைவான உணவுக்குப் பழகுறதுக்கு ஆரம்பத்துல மிகவும் சிரமப் பட்டேன் பள்ளிக்கூடத்துல கூட எனக்கும் பிரெஞ்சு மாணவர்களுக்கும் இடையே வித்தியாசம் பளிச்னு தெரியும். டீச்சர்கிட்டே அந்த மாணவர்கள் உட்கார்ந்துகிட்டே பேசுவாங்க. நான் மட்டும் நம்ம ஊர் வழக்கப்படி சட்டுனு எழுந்து நின்னுடுவேன். இதைப் பார்த்து வகுப்பே சிரிக்கும்! பிரெஞ்சு வாழ்க்கைக்கு ஏற்றபடி நான் மாற மூணு வருஷம் ஆனது!’’ என்று கூறும் நிரு வீட்டின் எதிர்ப்பையும் மீறி இசை படித்தவர்.

‘‘ப்ளஸ் டூவுக்கு நிகரான படிப்பை முடிச்சிட்டு, இசையைக் கற்றுக் கொள்ள முழு மூச்சாக இறங்குனேன்.. காலையில் சவுண்ட் இன்ஜினியரிங் காலேஜுக்கும், மதியம் இசைப்பள்ளிக்கும் போவேன். தமிழகத்துலேர்ந்து பாரீசுக்கு வர்ற இசையமைப்பாளர்களை எல்லாம் தேடித் தேடிப் போய்ச் சந்திப்பேன். மெல்ல மெல்ல இசையின் நுட்பங்கள் புரிபட ஆரம்பிச்சது. நிரு எந்த இசையமைப்பாளரிடமும் உதவியாளராக இருந்ததில்லை.

‘நீலம்’, ‘மூங்கில் நிலா’ உட்பட இவர் இசையமைத்த ஆல்பங்கள் ‘கலாபக் காதலன்’ படத்தில் பணிபுரியும் வாய்ப்பைத் தேடித்தந்தன. ‘‘கலாபக் காதலனுக்கு நான் இசையமைத்த பாடல்கள் அவ்வளவு பிரபலமாகலை. தமிழ் சினிமாவின் இசையை நான் இன்னும் புரிஞ்சிக்கணும்னு உணர்ந் தேன். பிரெஞ்சு மொழியைக் கத்துக்கிட்டது போல இதுவும் முடியும்னு நம்பினேன். தொடர்ந்த பயிற்சிகளுக்கு நான் எதிர்பார்க்காத ஒரு கதவு திறந்தது. டைரக்டர் செல்வம் தனது முதல் படமான ‘‘ராமேஸ்வர’த்துக்கு இசையமைக்க என் மேல் நம்பிக்கை வச்சு வாய்ப்பு தந்தார். எங்களின் இழப்பையும் துக்கத்தையும் சொல்லும் படத்துக்கு இசையமைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்!’’ நிறைவாகச் சொல்கிறார் நிரு.

_ஆனந்த் செல்லையா
படங்கள் : ஆர்.. கோபால்

Wednesday, January 30, 2008

செ.யோகநாதன்

செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர்.

கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். பின்னர் தமிழகப் பத்திரிகைகளிலும் நிறைய எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளிவந்து விட்டது. அதன் பின்னர் “கண்ணீர் விட்டே வளர்த்தோம்' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.


குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய இவர் அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். இவர் தமிழகத்திலும் நன்கு அறியப் பட்டவர். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குனராகவும் செயற்பட்டார்.

தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு அவர்களை தமிழக வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியவர். இவரது படைப்புக்களுக்கு இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் பரிசில்களும், விருதுகளும் கிடைத்தன.

இவர் தனது 66 ஆவது வயதில் 28-01-08 திங்கள் அன்று யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமானார்.

இவர் இதுவரை எண்பத்திநான்கு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவரது நூல்களில் சில
யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)

Wednesday, January 02, 2008

இளங்கீரன்

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்!

- த.சிவசுப்பிரமணியம் -

ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது.

அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின் வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்துள்ளமையே இதற்கான காரணமாகும். 1950 களிலிருந்து 1970கள்வரை படைப்பிலக்கியத் துறையில் இளங்கீரன் மும்முரமாகச் செயற்பட்டார். எழுத்தையே வாழ்வாகக் கொண்ட ஒருவராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இக்கால கட்டத்தில் அவரது எழுத்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ஈழத்தின் சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டிய விருத்தியினைக் காட்டி நிற்கின்றன. இளங்கீரன் பல்வகைப் பரிமாணங்களையுடைய ஒருவராக அறியப் படுகின்றார். ஒரு சிறுகதை எழுத்தாளராக, நாடகத்துறை சார்ந்தவராக கட்டுரையாளராக, பத்திரிகை ஆசிரியராக, சஞ்சிகை இயக்குநராக, திறனாய்வாளராக என்றெல்லாம் தடம் பதித்தவராக அறியப்பட்டாலும் அவர் சிறந்த நாவலாசிரியராகவே முத்திரை பதித்துள்ளார். இருபதுக்கும் அதிகமான நாவல்களைப் படைத்த இவர் சமூக உணர்வின் வளர்ச்சியையும் சமூக மாற்றத்திற்கான விளைவையும் அடையாளம் காட்டக் கூடிய வகையிலேயே படைப்பாற்றல் மிக்கவராக வெளிவருகின்றார்.

இவரது முதலாவது நாவலாகிய `நீதியே நீ கேள்' வெளிவந்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுக் கொண்டது.

`அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' என்ற இவரது நாவல் வீரகேசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங் காட்டும் ஒரு காலத்திற்குரியது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்துண்ணும் தேவையுள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக் கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய இன்றைய நவ காலனித்துவச் சூழலிலும் இன்னும் யதார்த்த பூர்வமான சித்தரிப்புக்களாகவே உள்ளன. இந்நாவல் பெண்கள் குறித்த முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்ற வகையில் வர்க்க உணர்வு குன்றாத நோக்குடன் வரையப் பட்டது. ஈழத்தின் நாவல், இலக்கிய வரலாற்றில் முதன்மை நிலையில் வைத்துக் கணிக்கப் படுபவர்களுள் ஒருவராக எழுத்தாளர் இளங்கீரன் மதிக்கப் படுகின்றார். இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின் 2000 ஆம் ஆண்டு நூலுருப் பெற்றுள்ளது. கடந்த தசாப்தங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் மத்தியில் நிலவிய வர்க்க ஒற்றுமையையும் உறவையும் இந் நாவலூடாகத் தரிசிக்கும் போது, இன உறவின் விருத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்திலும் நம்பிக்கையின் நூலிழைகள் ஊடாடுவதனை உணர முடிகிறது.

இவர் எழுதிய `தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்', `ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்', `பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துகளும்' ஆகியன முக்கிய வரலாற்றுப் பதிவுகளை உள்ளடக்கியவையாக இன்று இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் வேண்டப் படுவனவாக அமையும்.

1950 க்கு முன் இந்தியாவைத் தாய் நாடாகவும், இலங்கையைச் சேய் நாடாகவும் இலங்கைத் தமிழர் கருதி வந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட உணர்வில் இந்தியாவில் இருந்து வெளிவரும் நூல்களையும், சஞ்சிகைகளையும், பத்திரிகைகளையுமே விரும்பிப் படித்தனர். ஆனால் இவை ஈழத்தமிழரின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள், அபிலாசைகள், சிந்தனைகள் ஆகியவற்றைச் சித்தரிப்பதாக அமையவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வேண்டிய ஆதங்கம் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் வலுப்பெற்று நின்றது. ஈழத்து இலக்கியத்திற்குப் புதிய படைப்பிலக்கியப் பாதை வேண்டுமென்பதால் அதை நோக்கிய நகர்வுகள் இடம்பெறலாயின. அந்தத் தளத்தில் முன்னின்று இளங்கீரன் துணிந்து செயற்பட்டார்.

1954 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப் பட்டது. இச் சங்கம் நடத்திய இலக்கிய இயக்கத்தினூடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்பந்தமாகவும் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது. எனவே, ஈழத்தின் படைப்பிலக்கியம் தமிழ் எனும் பொதுப் பரப்புக்குள் அடங்கும் அதே வேளையில் அதன் தனித்துவத்தைக் காட்டவும், அத்தனித்துவத்தை நமது மக்கள் இனங்கண்டு அதன்மீது தமது இலக்கிய உணர்வைப் பதிய வைக்கவும், நேசிக்கவும் யதார்த்தவாதக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொள்ளவும் அதற்குத் `தேசியம்' என்னும் சொற்பிரயோகம் தேவையாக இருந்தது. எனவே, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது முதலாவது மாநாட்டில் முன் வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1960 இல் தேசிய இலக்கியத்தைப் பிரகடனஞ் செய்தது. இதனைத் தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது. 1961 இல் வெளியான இளங்கீரனின் கலை இலக்கியச் சஞ்சிகையான, `மரகதம்' இப் பணியை ஏற்று தேசிய இலக்கியம் பற்றிய தெளிவை மக்களுக்கு ஊட்டியது.

மரகதத்தின் முதல் இதழில் பேராசிரியர் க.கைலாசபதி `தேசிய இலக்கியம்' பற்றிய தனது முதலாவது கட்டுரையை எழுதினார். அதனை அடுத்து ஏ.ஜே.கனகரத்தினா, அ.ந.கந்தசாமி ஆகியோரின் எழுத்துக்களும் மரகதத்தில் வெளிவந்தன.

தேசிய இலக்கியம் முன்வைக்கப் பட்டதையும், ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் வாசகர்களால் வரவேற்கப் பட்டதையும் தொடர்ந்து இலக்கிய உலகில் செல்வாக்கை இழந்திருந்த மரபு இலக்கிய வாதிகள் கடும் தாக்குதல்களை நடாத்தினார்கள். கண்டனக் கணைகளை வீசினர். போதிய கல்வியறிவும், படிப்பும் இல்லாதவர்கள் தமிழ் மரபு தெரியாதவர்கள் மரபை மீறி எழுதும் இவர்கள் மட்டமான எழுத்தாளர்கள். இவர்களின் இலக்கியம் `இழிசனர் இலக்கியம்' என்றெல்லாம் வசை பாடினர். இதனை ஒட்டிய மரபுப் போராட்டம் தொடங்கியது. 1962 ஜனவரியில் தினகரன் பத்திரிகை தற்கால தமிழ் இலக்கியம் தமிழ் மரபுக்கு புறம்பானதா என்னும் விவாதத்தைத் தொடக்கி வைத்தது. விவாதக் கட்டுரைகள் வெளிவந்தன. முற்போக்கு எத்தாளர் தரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, அ.ந.கந்தசாமி, இளங்கீரன் ஆகியோர் ஆக்கபூர்வமான விவாதக் கட்டுரைகளை எழுதினர். இறுதியில் படைப்பிலக்கிய வாதிகள் சார்பில் விவாதம் முடிவுற்றது.

1962 இல் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் போது `புதுமை இலக்கியம்' மலருக்குப் பேராசிரியர் க.கைலாசபதி `சிறுகதை' என்னும் கட்டுரையை எழுதியிருந்தார். கைலாசபதி அவர்கள் தினகரன் ஆசிரியராக இருந்த போது இலக்கிய ரீதியான புதிய விடயங்களை வெளியிடுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். அவற்றில் ஒன்று `நான் விரும்பும் நாவலாசிரியர்' என்னும் தலைப்பில் இலக்கியப் படைப்பாளிகளை எழுதத் தூண்டியதாகும். மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை பற்றி இளங்கீரன் சிறப்பான கட்டுரையை எழுதியிருந்தார். தினகரன் தமிழ்விழா மலருக்கு `தமிழுணர்ச்சி' என்னும் கட்டுரையும் `கொச்சை' என்னும் கட்டுரையை மரகதத்திலும் எழுதியிருந்தார். தனது கட்டுரைகள் பற்றி இளங்கீரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். `எனது கட்டுரைகள் அனைத்தும் ஈழத்தமிழ் இலக்கிய அரங்கில் சர்ச்சைக்குள்ளான விடயங்களையும் படைப்பிலக்கியங்களைப் பற்றிய புதிய சிந்தனைகளையும் அணுகு முறைகளையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளதால் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவை ஒருவகையில் ஆதர்சமாகவும் அமையலாம்'.

சமுதாயத்தில் வாழ்வு மறுக்கப்பட்ட, வாழப் பிறந்த மக்களின் வாழ்வுக்கான உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கான போராட்டங்களைப் பிரதி பலிக்கும் வாழ்வின் மீது அவர்களது போராட்டத்தின் வெற்றியின் மீதும் நம்பிக்கையூட்டும் இலக்கியங்களையும் மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் பிரதிபலிப்பதோடு, வாழ்க்கையின் விமோசனத்திற்கான சரியான பாதையைச் சுட்டிக் காட்டும் இலக்கியங்களையும் சரிநிகரான மக்களின் வாழ்க்கையை அன்றாட நிகழ்ச்சிகளைக் கருவூலமாக்கி அவர்களைப் பாத்திரமாக்கிக் கொண்டு அப்பாத்திரங்களின் மூலம் உயர்ந்த இலட்சியங்களை முன்னுக்குக் கொண்டுவரும் இலக்கியங்களையும் இளங்கீரன் படைத்துள்ளார்.

மனிதனுக்குள் உயர்வு, தாழ்வு காட்டும் சாதியமைப்பு, பெண்ணடிமைத்தனம், வாழ்க்கை உரிமைகளை மறுப்பது, மூடநம்பிக்கை போன்ற சமுதாயத் தீம்புகளை எதிர்த்துப் போராடுதல் என்ற இலட்சியத்துடன் நின்று முற்போக்கு இலக்கியங்களைப் படைத்த முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன் இன்றும் எங்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.

நன்றி: தினக்குரல் (டிசம்பர் 21, 2007)

Thursday, October 18, 2007

வ.ந.கிரிதரன்!

தனது பத்தாவது வயதில் எழுத்துலகில் காலடி வைத்த வ.ந.கிரிதரன் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது தொராண்டோ, கனடாவில் வாழ்ந்து வருபவர்.

இலங்கையில் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ஈழநாடு சிறுவர் மலர் மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தவர். முதலாவது கவிதையான 'பொங்கலோ பொங்கல்' சுதந்திரனில் வெளிவந்துள்ளது. அதன் பின் இவரது சிறுவர் கால ஆக்கங்கள் பல வெற்றிமணி, சுதந்திரன், சிரித்திரனின் 'கண்மணி', மற்றும் சிரித்திரனில் வெளி வந்திருக்கின்றன. இவர் ஏழாம் வகுப்பில் இருந்த பொழுது அகில இலங்கைத் தமிழ்த் தின விழாக் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையிலேயே முதலாவதாக வந்துள்ளார். ஆரம்பகாலக் கவிதைகள் பல வீரகேசரி, ஈழநாடு, சிந்தாமணி, ஈழமணி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் வெளி வந்திருக்கின்றன. இவரது முதலாவது சிறுகதையான 'சலனங்கள்' சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப் பட்ட கதைகளில் ஒன்றாக வெளி வந்தது. அப்பொழுது வயது 17. அதன் பின் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் சில ஈழநாடு, தினகரன் ஆகியவற்றில் வெளி வந்திருக்கின்றன. இவரது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு', 'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளி வந்திருக்கின்றன.

மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் கனடாவில் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் (இணையத் தள பராமரிப்பு , இணையத் தள அப்ளிகேசன்கள் எழுதுதல்) தகைமைகள் பெற்றுள்ளார். மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார்.

இதுவரையில் இவரது ஐந்து நூல்கள் வெளி வந்துள்ளன. சிறுகதைகள் மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலை உள்ளடக்கிய தொகுதியான 'அமெரிக்கா' தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு' ஆய்வு நூலும் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கனடாவில் 'மங்கை பதிப்பக' வெளியீடுகளாக 'மண்ணின் குரல்' (கனடாவில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவல்),'எழுக அதி மானுடா (கவிதைத் தொகுதி) ஆகியன வெளி வந்துள்ளன. 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'. 'கணங்களும் குணங்களும்' (இவை 'தாயகத்தில்' தொடராக வெளிவந்தவை), 'மண்ணின் குரல்' ஆகியவற்றின் தொகுதி தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக 'மண்ணின் குரல்' என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளது. இவரது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்திலிருந்து வெளி வந்த 'பனியும் பனையும்' தொகுதியில் இடம் பெற்றுள்ளது. 'சுவடுகள்' இதழில் வெளிவந்த 'பொந்துப் பறவைகள்' சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் அவர்களது தமிழ்ப் பாடத்திட்டமொன்றில் சேர்க்கப் பட்டுள்ளது. 'சுலேகா.காம்' இல் இவரது இரு சிறுகதைகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டவை) இடம் பெற்றுள்ளன. தொராண்டோவில் ஒரு சில இதழ்களே வெளிவந்த 'இரவி' மற்றும் 'கல்வி' ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான இவர் தொரண்டோவில் ஆரம்ப காலத்தில் 'குரல்' என்றொரு கையெழுத்துப் பிரதியினையும் வெளியிட்டவர். அத்துடன் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் 'நமது பூமி' என்றொரு செய்திக் கடிதத்தினையும் (News Letter), 'கணினி உலகம்' என்றொரு நியூஸ் லெட்டரையும் வெளியிட்டவர். இவையும் ஒரு சில இதழ்களே வெளிவந்தன.

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின் இவரது ஆக்கங்கள் (சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன) 'தாயகம்', 'தேடல்', 'கணையாழி', 'துளிர்', 'சுவடுகள்', 'உயிர் நிழல்', 'ஆனந்த விகடன்', 'சுபமங்களா' மற்றும் இணைய இதழ்களான 'திண்ணை', 'அம்பலம்',' ஆறாந்திணை', ´மானசரோவர்.காம்' ஆகியவற்றில் வெளி வந்திருக்கின்றன. 'ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்', 'பிரபஞ்ச ஆய்வு', 'திராவிடக் கட்டடக்கலை' பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் வீரகேசரி, கணையாழி, திண்ணை போன்றவற்றில் வெளி வந்திருக்கின்றன. 'மரபும் கவிதையும்', 'வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்' ஆகிய தொடர்கள் மற்றும் 'பாரதியின் படைப்புகள்' பற்றிய கட்டுரைகள் 'தாயகம்' இதழில் வெளி வந்துள்ளன. தமிழ் இலக்கியம் சம்பந்தமான பல்வேறு விமரிசனக் கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளி வந்திருக்கின்றன.

2000ம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்' இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார். திண்ணை, பதிவுகள் போன்றவற்றில் நடைபெறும் விவாதங்கள் பலவற்றில் ஜீவன் கந்தையா, திண்ணை தூங்கி, டிசெதமிழன் ஜெயமோகனுட்படப் பலருடன் தீவிரமாகப் பங்கு பற்றி வருபவர். திண்ணை மற்றும் பதிவுகளில் தீவிரமாக விவாதிக்கப் பட்ட 'ஜெயமோகனின் விஷ்ணுபுரம்', 'மு.தளையசிங்கத்தின் நிலைப்பாடு', 'தீண்டாமை', மற்றும் பல்வேறு இலக்கியம் சம்பந்தமான நடைபெற்ற/நடைபெறும் விவாதங்கள் முக்கியமானவை. அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் ஆபிதீன்/சாரு நிவேதிதா பற்றிய விவாதங்களும் முக்கியமானவை.

ஈழத்தின் முற்போக்கு இலக்கிய முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள். பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால் ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது.

தகவல்கள் - பதிவுகள்

Friday, October 05, 2007

வள்ளிநாயகி இராமலிங்கம்

- கலாநிதி பார்வதி கந்தசாமி -

குறமகள் கதைகள் என்ற சிறுகதை நூலின் எழுத்தாளரான வள்ளிநாயகி இராமலிங்கம் யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஒர் ஆய்வு என்ற ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இளமைக் காலம் முதல் பெண்களின் சமத்துவத்தில் அக்கறை காட்டிவந்த வள்ளிநாயகிக்கு வீட்டில் எல்லாவித தேவைகளும் நிறைவேற்றப் படக் கூடிய பொருளாதாரச் சூழ்நிலை இருந்ததாலும் தொடர்கல்விக்கான தந்தையாரின் ஆதரவு கிடைத்ததாலும் மிடுக்காக எதையும் செய்யக் கூடியவராக அவர் காலப் பெண்களுள் ஒரு புதுமைப் பெண்ணாக வாழக் கூடியவராக இருந்தார். இந்த வாய்ப்பு யாழ்ப்பாணத்துப் பெண்கள் பலருக்குக் கிடைக்காதது. காலனித்துவ மரபால் வந்த கிறிஸ்தவக் கல்லூரியூடாக ஆங்கிலக் கல்வியையும் பெற்றுக் கொண்ட வள்ளிநாயகி கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகப பணியாற்றியவர். இந்தியாவில் புவனேஸர் கல்லூரியில் வெளிவாரிப் பட்டதாரியாகி நாடக டிப்ளோமாவைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் செய்து கொண்டவர். தமிழார்வத்கைப் பாலபண்டித வகுப்புக்களுக்குச் சனி – ஞாயிறு கிழமைகளில் சென்று நிறைவேற்றிக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி வகுப்பில் கற்க முயன்ற குறமகள் ஆய்வுக் கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு முயற்சியின் மூலம் இந்த நூற் தொகுதியின் மூன்று கட்டுரைகளையும் எழுதிக் கொண்டார். வள்ளிநாயகியின் வீட்டுச்சூழல் காந்தியக் கருத்துக்களை இறுகப் பற்றிப் பிடிக்க வைத்தது. இவரின் சித்தப்பா ஒருவர் கல்வி கற்க வேண்டிய தேவையின் அவசியத்தை வெகுவாக உணர்த்தினார். அவருடைய கருத்துக்களால் கவரப்பட்ட வள்ளிநாயகி உயர்கல்வி கற்பதற்கு உந்தப் பட்டார். அவருடைய காலத்தில் ஏழாம் வகுப்புடனேயே பாடசாலைக்கு முழுக்குப் போடும் பெண்கள் பலராக இருந்தனர். ஆனால் வள்ளிநாயகி இளவாலை கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரியில் சேர்ந்து கல்வியில் தன்னை உயர்த்திக் கொண்டார். தன்னுடன் நடேஸ்வராகக் கல்லூரியில் ஏழாம் வகுப்பு வரை படித்த பெண்களில் இருவர் உடுவில் பெண்கள் பாடசாலைக்கும், நான்கு பேர் இராமநாதன் கல்லூரிக்கும் ஒருவர் இளவாலை கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிக்கும் சென்றதாகக் கூறிக் கொண்டார்.

குறமகளுடைய பெண்கள் தொடர்பான ஈடுபாட்டிற்குப் பின்புலமாக இருந்தது இடையாற்று மங்கலம் சூடாமணி ஐயர் என்ற நடேஸ்வராக் கல்லூரியின் அதிபரின் இடையறாத காந்தீயச் செயற்பாடுகள். அவர் இந்திய சுதந்திரம் பற்றி நிறையவே போதித்து வந்தவர். காந்தி பற்றியும் ஹரிசனர்கள் பற்றியும் ஏழைகள் பற்றியும் பலரையும் பேசுவதற்காகக் கல்லூரிக்கு அழைத்துக் கொண்டவர். இந்தியாவிற்கு அடிக்கடி சென்று வந்த வர்த்தகரான தந்தையார் சின்னத்தம்பியின் உதவியினால் சரோஜினி நாயுடு, கமலா நேரு, மோதிலால் நேரு, விஜயலட்சுமி பண்டிற் போன்றோர் பற்றிய ஏராளமான நூல்களைப் பெற்று வாசித்துக் கொண்டார். அத்துடன் நடேஸ்வராக் கல்லூரியின் நாடகங்கள் மேடையேற்றிய சமயத்தில் காட்சி மாறும் வேளையில் முன்புறமாக வள்ளிநாயகியும் செய்தி அறிவிப்பாளர் விக்னேஸ்வரனின் தாய் கமலாவும் வள்ளி ராதை கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியது கூட அக்காலத்தில் பெண்கள் முன்நின்று செய்யாத விடயமாக இருந்தது. வைரமுத்து குழுவினரின் நாடகங்களையும் காங்கேசன்துறையில் அடிக்கடி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததும் நாடக ஆர்வம் இவருக்கு எழக் காரணமாயின.

கிறிஸ்தவப்பெண்கள் கல்லூரி தன் கல்வி உயர்வில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது எனக் கூறினார் குறமகள். பெண்கள் சீர்திருத்தம், சமத்துவம் தொடர்பாகச் சிறுகதைகளை எழுதி வந்த குறமகள் முதுமானிப் பட்டப் படிப்பிற்காக ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கிய போது கூமப் பெண்கல்வியை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார். ஆய்வு முழுமையாக முற்றுப் பெறா விட்டாலும் ஆய்வு மூலம் அவர் எழுதிக் கொண்ட மூன்று கட்டுரைகளும் அவருடைய ஆய்வுப் புலமைத்துவத்தை யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி என்ற நூலில் வெளிக்காட்டுவதைக் காணலாம். இந்நூலில் அந்த மூன்று கட்டுரைகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18ம் நூ.ஆ தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரை என்பது முதலாவது கட்டுரையாகும். இந்நூலுக்கு முகவுரை எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி “இக்கட்டுரை வரன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சீரிய ஆய்வின் முதல் வரைபு என்று கொள்ளப் படத்தக்கது. இக் கட்டுரையில் இடம் பெறும் தரவுகள், தகவல்கள், ஆராய்ச்சி வியாக்கியானங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது மிக்க ஆர்வத்துடன் மிகப் பெரிய ஒரு பரப்பினை அலசி ஆராய்ந்துள்ளார் என்பது தெரிய வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கட்டுரையாக சைவமும் தமிழும் வளர்த்த தமிழ்ச்செல்வி பார்வதி அம்மையார் பற்றியும் மூன்றாவது கட்டுரையாக காந்திய வழி சமூகசேவையாளர் “தமிழ மகள்”_ மாசிலாமணி மங்களம்மாள் பற்றியும் எழுதியுள்ளார். மங்களம்மாளை நேரடியாகவே சந்தித்து முதல் தர ஆய்வுத் தரவுகள் பெற்றுக் கொண்டவர். இந்நூலின் பின்னிணைப்பாக மங்களம்மாளின் முதல் சந்திப்பும் தொடர்பும், புகையிரதப்பாதை, டாக்டர் வண.பீற்றர் பேர்சிவல் பாதிரியார் பற்றியும் கொடுக்கப் பட்டுள்ளது.

மங்களம்மாள் பற்றிய வரலாறு யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுடைய உயர்வு எத்தகைய சமூகப் பரிமாணங்களைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றது. இலங்கைப் பெண்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர்கள் இதுவரை வெளிக்கொண்டு வராத தமிழ் மகள் என்ற பத்திரிகையை நடாத்திய வண்ணார் பண்ணை வாசியான மங்களம்மாள் பற்றிய தகவல்களை ஆய்வு மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளமை வள்ளிநாயகியின் ஆய்வுப் புலமையை வெளிப் படுத்துகின்றது.

பெண்கல்வி என்று பார்க்கும் போது யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் நிலவிய பெண்கள் பற்றிய கருத்தாக்கம் பால்நிலை சார்ந்தவை என்பதை வள்ளிநாயகி துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றார். வள்ளிநாயகி தனது முகவுரையில் நாவலர் மேல் வைத்திருந்த மதிப்பு அவருடைய நாலாவது பாலபாடத்தை வாசித்ததும் அதிர்ச்சியைத் தந்ததாகக் கூறுகின்றார். நாவலர் பெண்களைத் தீட்டுக்குரியவர்களாகக் கருதி அவர்களுக்கான உயர்வு பற்றிச் சிந்திக்கவில்லை. அவருடைய சமய நூல்களில் பெண்கள் எது எல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றி எழுதியுள்ளார்.

இந்நூலுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்களும் ஆங்கிலத்தில் முன்னுரை வழங்கியுள்ளார். வள்ளிநாயகி போன்று ஈழத்துப் பெண்கள் கல்விப் பாரம்பரியத்தையோ ஈழத்துப் பெண்களுடைய வாழ்வியல் பிரச்சினைகள் பற்றியோ ஆய்வுகளை யாரும் இன்னமும் ஆழமாக மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஆய்வு பெண்கள் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

Thursday, August 23, 2007

கலாநிதி செ.பத்மமனோகரன்

இலங்கையில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது நெதர்லாந்தில் உள்ள Utrecht பல்கலைக்கழகத்தில் இரசாயனத்துறையில் பணியாற்றுகிறார்.

கூழ் இரசாயனவியலில் (Collid Chemistry) இவர் எழுதியுள்ள பல ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. ஐரோப்பியாவில் நடைபெறும் தமிழ் இலக்கியச் சந்திப்புகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதுடன், அவற்றை ஒழுங்கு செய்வதிலும் தன்னாலான பங்கைச் செய்து வந்தார். நெதர்லாந்தில் வெளிவந்த ´அஆஇ´ சஞ்சிகையிலும் பணியாற்றியுள்ளார்.

Saturday, July 14, 2007

ஓவியர் விஜிதன்

நேர்காணல்

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை

சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக் கொண்டு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.

ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப் படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்தி முறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இநதப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக் கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம். ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன் அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால்
பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது
மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டு வந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.

உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டு வந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

கருத்து ரீதியாக இருளை மனங்களின் இருண்மையாக காண்பிக்கிறீர்களா?

எடுத்துக்கொள்ளலாம், ஒளியென்று சொல்லும் பொழுது பார்க்கப்படுகின்ற விசயம் மட்டும் ஒளியை மையப்படுத்தி சுத்திவர இருளாக இருக்கும். ரசிகன் பார்க்கவேண்டிய இடம் மட்டும் ஒளியுடையதாக இருக்கும் பார்வைப்புலத்தில் பார்வை சிதறல் ஏற்படாது அதற்காக இத்தகைய உத்திமுறைகளை கையாள்கிறேன்.

அரசியல் ரீதியான ஓவியங்களையும் வரைந்திருக்கிறீர்கள் நிலக்காட்சிகளை சிதைக்கப்பட்ட முறையில் வரைந்திருக்கிறீர்கள். ஒடுக்குமுறையை சித்தரிக்கும் படங்களில் இருண்மை அதிகமாக இருக்கிறது

எமது சமூகம் ஒரு குழப்பமானது, சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்கின்ற வாழ்க்கை முறை, இவற்றை வெளிப்படுத்தி இருப்பது தவிர்க்க முடியாத விடயம். அந்த வகையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும் அப்படித்தான். இந்த ஓவியக் காண்பியத்துக்குக் கூட சாளரம் வழியே ஓவியனின் விரல்கள் என்றே தலைப்பிட்டிருக்கிறேன். ஒரு முழுமையான, சுதந்திரமில்லாத ஒரு தன்மையை கொண்டிருப்பதனாலேயே ஓவியனாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி ஒரு சுதந்திரமான தன்மையில்லாத நிலையை கொண்டு வந்திருக்கிறேன். அதால இருள் ஒளி என்ற விடயமும் அதுக்குள்ள வருது.

சாதாரன கற்பித்தல் முறையில் ஓவியம் என்பது ஒரு பாடமாக இருக்கிறது, ஒரு புதிய உத்தி முறையை கையாளக்கூடிய அளவிற்கு எங்களுடைய ஓவியக் கற்கை முறை இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஏனென்று சொன்னால் நான் கூட பல்கலைக்கழக மட்டத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அங்கும் வித்தியாசமான படைப்புக்களை படைப்பதற்கான கற்பித்தல் முறை இல்லையென்றுதான் சொல்வேன். ஆரம்பத்தில் படித்த அதே பாடத்திட்டங்கள் கொஞ்சம் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்கள் மாதிரி ஏதாவது வித்தியாசமாக படைக்கவேண்டும் ஒரு வடிவமைக்கவேண்டும். அப்படியான புதுமையான விடயங்களை கற்பிக்கின்ற முறைமை காணப்படவில்லை .இதுவொரு முக்கியமான விடயம் என்னுடைய விரிவுரை தவிர்ந்த நேரங்களில் வீட்டிலே வெளிநாட்டு ஓவியங்களை இணையம் மூலமாக பார்த்து அதனோடு சில விடயங்களைப் பெற்றுக்கொண்டு ஏன் இப்படிச்செய்தால் என்ன என்ற கேள்விகளை என்னுள் எழுப்பிக் கொண்டேன். இன்றைக்கு இப்படியான ஓவியங்களை காட்சிப்படுத்துவது முக்கியம் பெற்றிருக்கிறது.

நேர்கண்டவர்- தி.தவபாலன்

Quelle - Erimalai