Saturday, June 28, 2014

எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்

Thumilan Selvakumaranபொங்குதமிழ் இணைய இதழுக்காகப் பேட்டி கண்டவர் காண்டீபன்
துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர்.

இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது.

NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யேர்மனியப் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இப் புத்தகம் பற்றிப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களின் நேர் காணல்களும் இடம் பெறுகின்றன.

துமிலனை பொங்கு தமிழ் இணையம் இந்தப் புத்தகம் சம்பந்தமாக நேர்காணல் செய்திருக்கிறது.


நீங்கள் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதிய புத்தகம் குறிப்பாக யேர்மனிய மொழி பேசும் மக்களுக்குள்ளேயே இருந்துவிடப் போகிறது. அதைப் பற்றி மற்றைய நாடுகளில் உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்தப் புத்தகத்தில் என்ன விடயத்தை உள்ளடக்கி இருக்கிறீர்கள்?

யேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான சில திரைமறைவு அமைப்புக்களின் செயற்பாடுகளை வெளியில் காண்பிக்க எத்தனித்திருக்கிறோம். அதில் நான் அதிகமாகக் காண்பித்த அமைப்பாக கூ-குளுக்ஸ்-கிளான் இருக்கிறது. கூ-குளுக்ஸ்-கிளான் பற்றி இப்பொழுதுள்ள பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது ஏறக்குறைய 150 ஆண்டுகள் பழமையான அமைப்பு. ஆனாலும் இன்று சிலர் இதற்கு ஒக்சிசன் கொடுத்து உயிரூட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அந்த அமைப்பைப் பற்றி விளக்கம் தர முடியுமா?

கூ-குளுக்ஸ்-கிளான் என்பது அமெரிக்காவில் 1865இல் ஒரு நத்தார் தினத்தில் நிறுவப்பட்டது. வடக்கு அமெரிக்காவிலும் தெற்கு அமெரிக்காவிலும் நடந்த ஒரு உள்நாட்டு யுத்தத்தில் இந்த அமைப்பு முக்கிய பங்கு கொண்டது. வடக்கு அமெரிக்கர்கள் கறுப்பு இன மக்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்றார்கள். தெற்கு அமெரிக்கர்கள் அதற்கு முரண் பட்டார்கள். கறுப்பு இனத்தவர்கள் பஸ்சில் அமரக் கூடாது, பாடசாலை செல்லக் கூடாது அவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ற விடயங்களில் கூ-குளுக்ஸ்- கிளான் உறுதியாக நின்றது. மேலும் யூத இனத்தவரோ, கறுப்பு இனத்தவரோ வெள்ளை அமெரிக்கர்களை மணம் செய்யவும் கூடாது என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது. இவ்வளவு தவறான கொள்கைகளுடன் அந்த அமைப்பு தன்னை மதரீதியாகவே காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல என்பது பலருக்குத் தெரிந்திருந்தது. கறுப்பு இனத்தவரைக் கடத்துவது எரித்துக் கொல்வது, மரத்தில் கயிறு மாட்டி அதில் தூக்கிட்டுக் கொலை செய்வது என இந்த அமைப்பு பல நூறு கறுப்பு இனத்தவர்களை அழித்திருக்கிறது. நல்லவேளையாக அன்று நடந்த உள்நாட்டு யுத்தத்தில் வடக்கு அமெரிக்கா வெற்றி கொண்டதால், கறுப்பு இனத்தவர்கள் அடிமைகள் என்பதில் இருந்து வெளியே வந்து அமெரிக்கர்களுக்கு இணையாக பயம் இன்றி வாழத் தொடங்கினார்கள். யுத்தத்தில் தோற்றுப் போனதால் படிப்படியாக செல்வாக்கு இழந்து கூ-குளுக்ஸ்-கிளான் பத்து ஆண்டுகளில் இல்லாமல் போயிற்று.

1915இல் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு மீண்டும் அமெரிக்காவில் புதுப்பிக்கப் பட்டது. ஒரு தேசிய அமைப்பாக உருப்பெற்ற இந்த அமைப்பு 1920இல் 4,000,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதே காலப் பகுதியில் இந்த அமைப்பின் மேல் ஆர்வம் கொண்ட யேர்மனியர் சிலரால், இந்த அமைப்பு யேர்மனியிலும் தோற்றம் பெற்றது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் யேர்மனிக்குள் பிரவேசித்த அமெரிக்கப் படையில் அங்கம் வகித்த பலர் இந்த அமைப்பில் இருந்திருக்கிறார்கள். இது யேர்மனியில் இவ் அமைப்பு மேலும் வலுப்பெற ஏதுவாக இருந்தது.

காலப்போக்கில் இவ்வமைப்பு வலுவிழந்து போனாலும் இந்த அமைப்பில் இன்னமும் 5000 தொடக்கம் 8000 வரையிலான உறுப்பினர்கள் இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்த அமைப்பு இரகசியமாக இயங்கும் ஒரு அமைப்பாகவே இப்பொழுது இருக்கிறது.

இந்த அமைப்பு யேர்மனியில் இன்னமும் இருக்கிறதா?
இருக்கிறது.

இந்த அமைப்பை யேர்மனிய அரசாங்கம் தடை செய்யவில்லையா?
அதில்தான் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. கூ-குளுக்ஸ்-கிளான் என்ற பெயரில் யேர்மனியில் சில சில நகரங்களில் சில சில குழுக்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒரு குழுவுக்கும் மற்றைய குழுவுக்கும் சம்பந்தம் கிடையாது. பெயரளிவில்தான் ஒற்றுமையே தவிர கொள்கையளவில் அவர்கள் ஒன்று சேரவில்லை. அதுபோக யேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக அவர்கள் நடந்து கொண்டதற்கான சம்பவங்களோ, சாட்சியங்களோ இல்லை. ஆகவே அவர்களைத் தடைசெய்ய யேர்மனியச் சட்டத்தில் இடம் இல்லை.

யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றால் அவர்களைப் பற்றி நீங்கள் புத்தகத்தில் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?

இதை ஓரிரு வரியில் சொல்லி விட முடியாது.

பேர்லினில் இருந்து ஒரு பத்திரிகை 2011இல் ஒரு கட்டுரை வரைந்திருந்தது. அதில் Schwaebisch Hall என்ற நகரில் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு இருக்கிறது என எழுதப்பட்டு இருந்தது. தற்செயலாகத்தான் நான் அதை வாசிக்க நேர்ந்தது. Schwaebisch Hall நகரத்தில்தான் நான் வசிக்கிறேன். இங்கேதான் பத்திரிகைத் துறையில் இருக்கிறேன். அதனால் எங்கே இந்த அமைப்பு இருக்கிறது எனத் தேடும் ஆவல் எனக்குள் எழுந்தது. அதன் பின் இது விடயமாகப் பல தேடுதல்களையும், தகவல் சேகரிப்புகளையும் மேற் கொண்டேன். இறுதியாக Schwaebisch Hall நகரில் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பின் உறுப்பினர் ஒருவரது தகவல் ஒன்று கிடைத்தது.

எப்படிக் கிடைத்தது என்பதை அறியலாமா?


ஒரு பத்திரிகையாளனுக்கு உள்ள உரிமையின் படி அதைச் சொல்வதற்கு இல்லை. யேர்மனியப் பொலிஸ் கேட்கும் பட்சத்திலும் இதே பதில்தான்.

சரி. மேற்கொண்டு சொல்லுங்கள்.

அந்த நபருடன் பல தடவைகள் தொலைபேசியில் அழைத்துக் கதைத்திருக்கிறேன். ஆனால் தகவல்கள் தரவோ, தன்னைச் சந்திக்கவோ முதலில் அவர் இடம் தரவில்லை.

ஒருநாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. என் மீதும், என் எழுத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை வந்திருந்தது. ஒரு மணித்தியாலத்துக்குள் வர முடியுமானால் சந்திக்கலாம் என ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். அலுவலகத்தில் வேலையில் இருந்தேன். சந்தர்ப்பத்தை நழுவ விட மனம் இல்லை. ஏதோ ஒரு உந்துதலில் „சரி வருகிறேன்' என்றேன். குறிப்புகள் எடுப்பதற்கான பொருட்களை எடுத்துக் கொண்டேன். புறப்படும் பொழுதுதான் பார்த்தேன் அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடம் ஒரு அடர்ந்த காட்டுக்குப் போகும் பாதை. சிறிது தடுமாற்றம். நான் எதற்கு, எங்கே போகிறேன் என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது தகவல் தருபவரைக் காட்டிக் கொடுப்பது போலாகும். சரி வருவது வரட்டும் என்ற துணிவுடன் அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குப் போனேன்.

சொன்ன இடத்தில் நின்றார். அறிமுகம் செய்து கொண்டேன். வாருங்கள் நடந்தபடி கதைப்போம் என்றபடி காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தார். அவர்களது அமைப்பு வெறுக்கும் வெளிநாட்டவனாக நான் இருக்கிறேன். அவரை நம்பிப் போகலாமா? அதுவும் அடர்ந்த காட்டுக்குள். ஒருவித பய உணர்ச்சி இருந்தாலும் சேர்ந்து நடந்தேன்.

அவர் தான் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் தற்பொழுது இல்லை. தனக்கு திருமணம் ஆனதால் அதில் இருந்து விலகி விட்டேன் என்று தனது தற்போதைய நிலைப்பாட்டைக் கூறிவிட்டு, பிரயோசனமான தகவல் ஒன்றையும் உதிர்த்தார். அது கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இரு பொலிஸார் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதே. அவர்கள் இருவரும் Schwaebisch Hall நகரில் நடக்கும் இவ்வமைப்பின் கூட்டங்களுக்கு வந்து போவதாகவும் சொன்னார். அந்தத் தகவல்கள் எனக்கு மிகவும் பயன் பட்டன. ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அவரிடம் உரையாடி நிறையத் தகவல்களைப் பெற்றேன்.

இந்தத் தகவல்கள் அடிப்படையில்தான் கூ- குளுக்ஸ் -கிளான் பற்றிய உங்களது கட்டுரைகள் ஆரம்பமானதா?


வெறும் தகவல்களைப் பெற்று மட்டும் உடனடியாக எழுத முடியாது. தகவல்களில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது தெளிவான பின்னரே எழுத முடியும். ஆகவே உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டு „எனக்கு கூ- குளுக்ஸ்-கிளான் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?“ எனக் கேட்டேன். முப்பது நிமிடங்களுக்குள் பதில் தருகிறோம் என்றார்கள். ஆனால் மூன்று மணித்தியாலங்கள் காக்க வேண்டியதாயிற்று. அதில் இருந்து புரிந்து கொண்டேன். அவர்களுக்கும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் எனக்கு எந்தவிதத் தகவல்களைத் தரலாம், எதைத் தவிர்க்கலாம் என்று தங்களுக்குள் ஆராய்ந்து அதன் பின்னரே எனக்கு பதில் தந்திருக்கிறார்கள் என்று.

அவர்களுக்குத் தகவல்கள் எங்கே இருந்து கிடைக்கின்றன?


அவர்களிடம்தானே புலனாய்வுத் துறை இருக்கிறது. இரு பொலிஸார் கூ- குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இருக்கிறார்கள் என்றும், அதில் ஒருவர் பொறுப்பதிகாரி என்றும் இன்னும் சிலர் அதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.

அந்தப் பொலிஸார் மீது உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லையா?


நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு ஒரு இரகசியமாகச் செயற்படும் அமைப்பானாலும் எது வித குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதற்கான தகவல்கள் இல்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிருக்கலாம்.

குற்றச் செயல்களில் ஈடுபடாவிட்டாலும் ஒரு இனவாத அமைப்பில் நாட்டின் சட்டம், ஒழுங்கு போன்றவற்றிற்குப் பொறுப்பானவர்கள், உறுப்பினர்களாக இருப்பது தவறுதானே?

உண்மை. இங்கிருந்துதான், இந்த மையப்புள்ளியில் இருந்துதான் நான் பத்திரிகையில் எனது கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்.

முதலில் எங்கள் உள்ளூர் பத்திரிகையில் மட்டுமே எனது கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. பிற்பாடு எங்கள் மாநிலத்தின் முதன்மைப் பத்திரிகை நிறுவனமான தென் மேற்குப் பிரசுரம் அவற்றை தாங்களும் வாங்கி வெளியிட, பரவலாக அது நாடு முழுவதும் போனது.

இதன் பின்னர்தான் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு பற்றியும், அதனுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸார் பற்றியும் தொலைக்காட்சிகளும், வானொலிகளும் பேசத் தொடங்கின.

அந்தப் பொலிஸார் நிலை என்னவாக இருந்தது?
அவர்கள் மௌனமாகவே இருந்தனர். குற்றம் சுமத்தப் பட்டு இரண்டு வருடங்களுக்குள் ஒரு அரச ஊழியருக்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அவர்கள் அதிலிருந்து விடுவிக்கப் படுவார்கள். இந்த ஒரு சட்டத்தின் பிரகாரம் அவர்கள் இருவர் மீதும் உள்துறை அமைச்சு மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவர்கள் இன்னமும் பணியில்தான் இருக்கிறார்கள்.

இங்கே NSU என்ற அமைப்பு என்ன பங்கு வகிக்கிறது?


கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு மட்டுமல்ல. நியோநாசி போன்ற வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்புக்களும் NSU உடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இதற்கான ஆவணங்களை NSU அமைப்பைச் சேர்ந்த இருவரின் மரணங்கள் விட்டுச் சென்றிருக்கின்றன.

யாரந்த இருவர்?

அந்த இருவரும் NSU அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன் வேறு சில சம்பவங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

2000 இலிருந்து 2006 வரை துருக்கிய நாட்டவர் எட்டுப்பேரும், கிறீக் நாட்டவர் ஒருவரும் யேர்மனியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். 2004 இல் Koeln நகரில் துருக்கிய நாட்டவரின் வியாபரநிலையங்கள் நிறைந்த Holz வீதியில் ஆணிகள் அடங்கிய குண்டு வெடித்து 25 துருக்கியர்கள் காயப்படுத்தப் பட்டிருந்தார்கள். இந்தக் கொலைகளும் சரி, குண்டுத்தாக்குதலும் சரி, எவரால் செய்யப் பட்டது என்பது துப்புத்துலக்கப் படாமல் காவல்துறைக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால் இது ஏதோ ஒரு குழுவினால்தான் செய்யப்படுகின்றது என்ற ஊகம் யேர்மனியில் பரவலாக இருந்தது. இது தவிர 2007இல் Heilbronn நகரில் சேவையில் இருந்த இரு பொலிசார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் ஒரு பெண் பொலிஸ் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். ஒரு ஆண் பொலிஸ் படுகாயம் அடைந்திருந்தார். அவர்களது ஆயுதங்கள் கொலையாளி அல்லது கொலையாளிகளால் எடுத்துச் செல்லப் பட்டிருந்தன.

முதலில் நீங்கள் குறிப்பிட்ட வெளிநாட்டவர் மீதான தாக்குதலுக்கும், பொலிசார் மீதான இத்தாக்குதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?

அந்தக் கேள்விதான் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

இப்போ அதற்கான விடை கிடைத்து விட்டதா?


கிடைத்திருக்கிறது. ஆனால் அதில் தெளிவு இல்லை.

இப்போ உங்கள் பதிலில் எங்களுக்குத் தெளிவு இல்லை.

அதைத் தெளிவாக்குவதற்காகத்தான் நாங்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளோம். இப்புத்தகத்தையும் கொணர்ந்துள்ளோம்.

அப்படியானால் நீங்கள் எழுதியுள்ள இப்புத்தகத்தில் இச்சம்பவங்களுக்கான முடிச்சுகள் அவிழ்க்கப் பட்டுள்ளனவா?
முழுமையாக என்று சொல்ல முடியாது. முயன்று இருக்கிறோம்.

இப்பொழுது நான் முன்னர் குறிப்பிட்ட அந்த இரண்டு பேரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

சொல்லுங்கள்.
Mundlos, Boehnhardt என்ற இருவரின் மரணங்கள்தான் சில விடயங்களைத் தெளிவாக்கி இருக்கிறது.

இந்த இருவரும் NSU வின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்களுடன் ஒரு பெண்ணும் இருந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது. அவரது பெயர் Beate Zschaepe. நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்த இவர்கள் தங்கள் தேவைக்காக பல வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இவர்கள் சைக்கிளில் சென்று வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்த பின்னர் வீதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் ஒரு கரவனுக்குள் சைக்கிளை வைத்து விட்டு தாங்களும் அதற்குள் ஒளித்துக் கொண்டு விடுவார்கள். பொலிஸார் கொள்ளையர்களையும் அவர்கள் பயணித்த சைக்கிள்களையும் வெளியில் தேடிக் கொண்டிருப்பார்கள். ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் கரவனுக்குள் அமைதியாக இருப்பார்கள். அமளிகள் ஓய்ந்த பின்னர் வெளியே வருவார்கள். இவர்களின் இந்தத் தந்திரமான செயலால் நீண்ட நாட்களாகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் இவர்களை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

04.11.2011இல் Mundlos, Boehnhardt இருவரும் வங்கி ஒன்றில் கொள்ளை அடித்து விட்டு வழக்கம் போல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கரவனுக்குள் போய் ஒளித்துக் கொண்டார்கள். சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கரவனை பொலிஸார் நெருங்கும் போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. கூடவே கரவனும் தீப்பற்றிக் கொண்டது. தீயை அணைத்து உள்ளே சென்ற பொலிஸார் Mundlos, Boehnhardt இருவரையும் பிணமாக மீட்டிருக்கிறார்கள். கரவனுக்குள் இருந்து, Heilbronn பொலிஸாரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட ஆயுதங்கள் மற்றும் ஒன்பது வெளிநாட்டவர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள், 110,000 யூரோக்கள் என்பன கண்டெடுக்கப் பட்டன. இன்னும் சில ஆவணங்களையும் பொலிஸார் எடுத்திருந்தனர்.

ஆகவே கொலையாளிகள் யார் என்று தெரிந்து விட்டனர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது.
இல்லை. முடிவுக்கு வந்தது போல் தெரியும். அல்லது முடித்து வைக்கப் பட்ட தோற்றத்தைத் தருவதாக ஜோடிக்கப் பட்டிருக்கலாம்.

ஏன் அப்படிக் கருதுகிறீர்கள்?
இவர்கள் இருவரும் இறந்த சிறிது நேரத்தில் இவர்களுடன் ஒன்றாக இருந்த Beate Zschaepe தாங்கள் வசித்து வந்த வீட்டைக் குண்டு வைத்துத் தகர்த்து விட்டுத் தப்பி ஓடி விட்டார். பின்னர் இவர் கைது செய்யப் பட்டது வேறு விடயம். ஆனால் அந்த இருவரும் இறந்து விட்டார்கள் என்பது Beate Zschaepe க்கு எப்படித் தெரியும். யார் தகவல் தந்திருப்பார்கள் என்ற கேள்வி இருக்கிறது.

போதாதற்கு கரவனுக்குள் இருந்து மூன்றாவது நபர் ஒருவர் வெளியே சென்றதாக சாட்சியம் இருக்கிறது. கரவனுக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் கரவன் தீப்பற்றியதாகவும் பொலிஸி;ன் அறிக்கை சொல்கிறதே தவிர பொது மக்களின் சாட்சியங்கள் அங்கே போதுமானதாக இல்லை.

போலிஸார் மீதே சந்தேகப் படுகிறீர்களா?
சந்தேகங்கள் என்பதை விட. தெளிவாக இல்லை என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

NSU என்பது மூன்று பேர் கொண்ட அமைப்புத்தான் என்று அரசாங்கம் கருதுகிறது. எங்களால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அது பலரை உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பு பொலிஸாரிடம் இருந்து கூடக் கிடைத்திருக்கலாம். அதற்கான அனுகூலங்கள் இருப்பதாகக் கருதுகிறோம்.

எதை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்?

இருவரது மரணத்தின் பின்னர் கரவனில் இருந்து எடுக்கப் பட்ட ஆவணங்களில் இருந்து கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இருக்கும் இருவருக்கும் NSUக்கும் தொடர்பு இருந்தது நிருபணமாகி இருக்கிறது. Heilbronn நகரத்தில் கொலை செய்யப்பட்ட Michele Kiesewetter மற்றும் படுகாயப் படுத்தப் பட்ட Martin.A ஆகிய இரு பொலிஸாரின் பொறுப்பதிகாரிக்கும் கூ-குளுக்ஸ்.கிளான் அமைப்புக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. Heilbronn நகரம் 117,000 மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நகரம். அந்த நகரத்தில் ஒரு பகல் பொழுதில் கடமையில் இருக்கும் பொலிஸார் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள புகையிரத நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் பொலிஸ் பொறுப்பதிகாரி நின்றிருக்கிறார். தாக்குதலை நிகழ்த்தி விட்டு இரண்டு பொலிஸாரையும் வாகனத்தில் இருந்து இழுத்துக் கீழே போட்டு அவர்களின் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் கொலையாளிகள். இவை எல்லாவற்றையும் எந்தவித பதட்டமும் இன்றி, நேரம் எடுத்து, ஆறுதலாகச் செய்திருக்கிறார்கள். அந்தச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி சிலர் இருந்து, மக்கள் நடமாட்டத்தை அவதானித்து கொலையாளிகளுக்குத் தகவல் தராதிருந்திருந்தால் அது சாத்தியப் பட்டிருக்காது.

போதாததற்கு, தோளில், கையில், காலில் இரத்த அடையாளங்களுடன் வெவ்வேறு ஆட்களைக் கண்டதாக 12 சாட்சிகள் இருக்கின்றன. அப்படிப் பார்க்கையில் குறைந்தது மூவராவது அங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்பு படுகிறார்கள். ஆனால் Mundlos, Boehnhardt இருவரின் மரணத்தின் பின்னர் இருவரும்தான் கொலையாளிகள் என ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

சம்பவத்தின் பின்னர் Heilbronn நகரில் இருந்து வெளியே சென்ற 30000 வாகனங்கள் சோதனை செய்யப் படவில்லை. மாறாக, வாகனங்களைச் செல்ல விட்டு அவற்றின் இலக்கங்களை மட்டும் பதிந்து வைத்திருக்கிறார்கள். அப்படிப் பதிந்து வைத்த பதிவேட்டில் Mundlos, Boehnhardt இருவரும் பயணம் செய்த கரவனின் இலக்கமும் இருந்திருக்கிறது.

உங்களது கூற்றை வைத்தப் பார்த்தால், கொலையாளிகளை நோக்கி துப்புத் துலக்காமல், வேண்டும் என்றே அதை வேறு திசைக்குத் திருப்பி இருக்கிறார்கள் என்று கொள்ளலாமா?


அதற்கும் சாத்தியம் இருக்கலாம். இன்னும் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

Heilbronn நகரில் ஒரு இளைஞன் தனக்கு Michele Kiesewetter ஐ கொன்ற கொலையாளியைத் தெரியும் என்று தனது நண்பன் ஒருவனுக்குச் சொல்கிறான். அந்த இளைஞனுக்கும் நியோநாசிக்கும் முன்னர் தொடர்பு இருந்திருக்கிறது.

அந்த இளைஞன் கொலை பற்றி சொன்னதை அறிந்து புலனாய்வுத்துறை அவனை விசாரிப்பதற்காக மாநிலத்தின் தலைநகர் Stuttgart ; ற்கு அவனை அழைக்கிறது. மாலை 5.00 மணிக்கு அவனது விசாரணைக்கான நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் அன்று காலை 9.00 மணிக்கு அவனது வாகனம் தீப்பற்றி எரிந்து அந்த இளைஞன் அவனது வாகனத்துக்குள்ளேயே இறந்து கிடக்கிறான். காதல் தோல்வியால் வாகனத்துக்குள் பெற்றோல் ஊற்றி, தீமூட்டி அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக அவனது கதையை பொலிஸ் முடித்து விடுகிறது.

காதல் தோல்விகளால் பல தற்கொலைகள் நாள்தோறும்தானே நடந்து கொண்டிருக்கின்றன.


உண்மை. ஆனால் அந்த இளைஞனின் தாயும், அவனது காதலியும் அதை மறுக்கிறார்களே. அவர்கள் இருவரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மறுபக்கமாகப் பர்த்தால் தற்கொலை செய்பவர்கள் தனிமையான ஒரு இடத்தைத்தான் தேடுவார்களே தவிர சன நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தை விரும்ப மாட்டார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சாட்சி „சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது வீதி ஓரத்தில் நின்ற வாகனம் பெரிதாக தீப்பற்றி எரிந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின' என்று இருக்கிறது. ஆக உள்ளிருந்த இளைஞன் தீயின் வெப்பத்தில் அலறியதாகவோ, வலியில் துடித்ததாகவோ சாட்சி பதியவில்லை. ஆகவே இளைஞன் முதலிலேயே இறந்தானா? யாராவது வாகனத்துக்கு தீமூட்டினார்களா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

அப்படியாயின் சாட்சியங்களை திட்டமிட்டே அழிக்கிறார்கள் என்று கருதலாமா?


அதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.

Michele Kiesewetter கூட அவர்களுக்கு உள்ளிருந்து உதபுவராக அல்லது அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவராகம் இருந்திருக்கலாம். அவர்களை விட்டு விலக நேர்ந்த பொழுது அல்லது அவர்களுக்குப் பிரச்சினையாக உருவாகும் பொழுதுதான் கொல்லப் பட்டிருக்க வேண்டும்.

இதில் Michele Kiesewetter உடன் கடமையில் இருந்து படுகாயமடைந்த Martin.A தாக்குதல்களின் பின்னால் கொலையாளிகளின் அங்க அமைப்புகளைத் தெளிவாக விவரிக்கிறார். எந்தப் பக்கம் இருந்து சுட்டார்கள். சுட்டவர் கையில் ரோமங்கள் இருந்தன என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்பொழுது, சம்பவம் நடந்த பொழுது எனக்கு எல்லாமே இருட்டாக இருந்தது. என்னால் ஒன்றும் நினைவு படுத்த முடியவில்லை என்கிறார்.

ஏன் இப்பொழுது அப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்?

பயந்திருக்கலாம் அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கலாம். அல்லது மேலிடத்தில் இருந்து யாராவது கட்டளை இட்டிருக்கலாம்

கைது செய்யப்பட்ட NSU வின் பெண் உறுப்பினர் Beate Zschaepe ஐ விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை அறிய முடியாதா?

விசாரணை நடக்கிறது. ஆனால் தான் இது விடயமாக எதுவும் சொல்லப் போவதில்லை என்று நீதிமன்றத்தில் Beate Zschaepe அறிவித்து விட்டார். ஆகவே அவரை விசாரணை செய்ய முடியாது. யேர்மனிய சட்டம் அப்படி.
குற்றவாளியை விசாரிக்க முடியாது என்றால் வழக்கு எப்படி நடக்கும்?

அரச சட்டத்தரணியும் Beate Zschaepe இன் சட்டத்தரணியும் சம்பவங்கள், சாட்சியங்களை வைத்து வாதாடிக் கொள்வார்கள். விவாதங்களை வைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
Beate Zschaepe தப்பிக்க வாய்ப்பு உருவாகி விடுமா?

Beate Zschaepe தப்பிக்க வாய்ப்பில்லை. அவருடைய குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் இருக்கின்றன. ஆனால் பல உண்மைகள் அவரிடம் இருந்து வெளியே வராமல் சம்பந்தப் பட்டவர்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
சமீபத்தில், பணம் பெற்றுக் கொண்டு, புலானாய்வுத்துறைக்கு NSU பற்றித் தகவல் தரும் Thomas என்பவர் மரணம் அடைந்திருக்கிறார். இவரது புனைபெயர் Correli. இவர் திரைமறைவு அமைப்புக்களின் செயற்பாடுகளில் இருந்தவர். பின்னர்தான் பணத்திற்காக தகவல் தருபவராக மாறினார். அதுவே அவரது தொழிலாகப் போனது. தனது செயல்களை அறிந்து தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். சில காலங்களுக்குப் பின்னர் யேர்மனி திரும்பி Nordrhein-Westfalen மாநிலத்தில் வசித்து வந்தார். இவரது சாட்சி நீதிமன்றத்துக்குத் தேவைப் பட்டது. நீதிமன்றில் இருந்து இவருக்கு அழைப்பாணை போனது.
ஆனால் குறிப்பிட்ட தினத்தில் Correli நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் காவல்துறை அவரது இருப்பிடத்துக்குச் சென்று பார்த்த போது அவர் இறந்திருந்தார். இறக்கும் போழுது அவருக்கு வயது 39. இத்தனைக்கும் அவர் புலனாய்வுத்துறையின் ஏற்பாட்டின் பேரிலேயே இரகசியமாக அந்நகரில் அவ்வீட்டில் வசித்து வந்தார்.

எப்படி இறந்து போனார்?

அவருக்கு நீரழிவு நோய் இருந்திருக்கிறது என்றும், இன்சுலின் கூடி அவர் இறந்து போனதாகவும் அறிக்கை வருகிறது. இன்சுலின் தானாகவே அதிகரித்ததா? அல்லது யாராவது அதிகளவு அவருக்கு இன்சுலின் செலுத்தினார்களா? என்ற கேள்விகளும் இருக்கின்றன.

சாட்சிகள் ஒவ்வொன்றாக இல்லாது போனால் விசாரணை என்னவாகும்?

அது சட்டத்தின் வேலை. ஆனாலும் உண்மைகளை வெளிக் கொணர்வதற்கு எங்களுக்கு இன்னமும் பல தேடுதல்கள் இருக்கின்றன.

இந்தப் புத்தகத்தின் மூலம் இது சம்பந்தமாக ஏதாவது பயன் கிடைத்ததா?

இந்தப் புத்தகத்தின் மூலமாக மட்டுமல்ல, நாங்கள் இது விடயமாக தகவல்களை சேகரித்து எழுதும் பொழுது முன்னேற்றங்கள் தெரிகின்றன.

இனி இதில் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை என்று Heilbronn நகரத்தில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் Michele Kiesewetter மற்றும் படுகாயப் படுத்தப் பட்ட பொலிஸ் Martin.A சம்பந்தமான வழக்கை கடந்த வருடம் நீதிமன்றம் முடித்து விட்டது. இந்த முடிவை 12 யூரிமாரும் இணைந்து அன்று எடுத்திருந்தனர்.

இப்பொழுது ஆட்சி மாறி இருக்கிறது. 12 யூரிமாரில் ஒன்பது பேர் புதியவர்கள். ஊடகங்களின் தகவல்ளை அடிப்படையாக வைத்து இன்னமும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டி உள்ளதாக அவர்கள் இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு முன்னேற்றம்தானே.

துருக்கிய மக்கள் நிறுவனங்களை வைத்திருக்கும் Holz str வில் நடந்த குண்டுத் தாக்குதலின் பத்தாவது வருட நினைவு நாள் கடந்த 9ந்திகதி Koeln நகரில் நினைவு கூரப்பட்டிருந்தது. யேர்மனிய ஜனாதிபதி Gaug கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பல யேர்மனிய மக்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் இக்குண்டுத்தாக்குதல் பற்றிய மர்மங்களை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர்களின் செயற்பாடுகள் பாராட்டப் பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது? மற்றைய ஒன்பது எழுத்தாளர்களுடனான தொடர்பு எப்படி உங்களுக்குக் கிடைத்தது?

NSUவுக்கு மேலான வழக்கு நடக்கும் பொழுது நான் அங்கே செல்வதுண்டு. அதுபோல இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதும் மற்றையவர்களும் நீதி மன்றத்துக்கு வருவார்கள். பல தடவைகள் நாம் அங்கே சந்தித்துக்கொண்டதால் எமக்குள் பரீச்சயம் ஏற்பட்டது. அதன் பின் நாங்கள் NSU சம்பந்தமாக விவாதங்கள் செய்யத் தொடங்கினோம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் பேராசிரியர் Andreas Foerster இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் என்ன என்று கேட்டார். எல்லோரும் ஒத்துக் கொண்டதால் புத்தகம் வெளியாயிற்று.

கேள்விகளுக்கு தெளிவாகவே விடை தந்திருக்கிறீர்கள்.

புத்தகத்தில் சம்பவங்களும், தகவல்களும் நிறையவே அடங்கி இருக்கின்றன. அவ்வளவையும் நான் இங்கே சொல்லவில்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்களை மட்டுந்தான் முடிந்தளவு தந்திருக்கிறேன்.

தங்கள் உரிமைகள் கிடைக்காமல், அதற்காக ஏங்கி நிற்கும் துயரங்கள் நிறைந்த தமிழர்களது நிலையை யேர்மனிய மக்களுக்கு விளக்கும் வகையில் நீங்கள் ஒரு தமிழராக இருக்கும் பட்சத்தில் உங்கள் எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லையா?
எமது உறவுகளின் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக யேர்மனிய மொழியில் எழுத எண்ணம் எனக்கு இருக்கிறது. கூடவே ஆர்வமும் இருக்கிறது. மேலெழுந்த வாரியாக அவைகளை எழுத முடியாது. வெறுமனே தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதுவதில் ஒன்றுமே இருக்கப் போவதில்லை. இது விடயமாகப் பலரைச் சந்திக்கவும், பேட்டிகள் எடுக்கவும், விபரங்களை ஆதாரங்களோடு திரட்டவும் எனக்கு நிறைய நாட்கள் தேவைப்படும். எனது வேலைகளுக்கு மத்தியில்தான் அதற்கான நேரங்களையும் நான் தேடவேண்டும். ஒரு நிருபராக, எழுத்தாளனாக இருந்து கொண்டு சுதந்திரமாக இலங்கை சென்று இவற்றைப் பெறுவது அங்குள்ள நிலையில் இன்று சாத்தியம் இல்லை என்று அறிகிறேன். மேலும் எழுத்தாளனாக நான் யேர்மனியில் பரவலாக அறியப்பட இன்னமும் நான் உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் என் இனத்தைப் பற்றி எழுத எனக்கான காலம் அதிகதூரம் இல்லை என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது.

இலங்கையில் ஒரு ஊடகவியலாளர் சுதந்திரமாகச் செயற்பட முடியாது என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

இலங்கையில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் பிரச்சனைகளும் DPA யின் மூலம் ஒரு பத்திரிகையாளன் என்ற ரீதியில் எனக்கு உடனடியாகக் கிடைத்து விடும். எல்லாவற்றையும் நான் வாசிப்பேன். ஆனால் எமது பத்திரிகைக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

ஒரு தமிழனாக இருந்து யேர்மனிய மொழியில் சவால்கள் நிறைந்த துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு பொங்குதமிழின் வாழ்த்தும், நன்றியும்.

நல்லது. நான் மட்டும் அல்ல வேறு பல தமிழ் இளைஞர்களும்; இங்கே சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாமே வெளியே தெரிவதில்லை. நான் ஊடகத் துறையில் இருப்பதால் சட்டென்று தெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து உங்கள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

நன்றி.
- காண்டீபன்
Quelle - Ponguthamil

No comments: