சந்திரா இரவீந்திரன்
சந்திரா இரவீந்திரன் இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். 1981இல் ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
சந்திரா இரவீந்திரன் (சந்திரகுமாரி) இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணி புரிகிறார்.
இலக்கியப் பணிகள்
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ்ஒலி ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் இரண்டாவது பரிசைப் பெற்றுக் கொண்டது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன. இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர், முன்னரைப் போல எழுதிக் குவிக்காது விட்டாலும் அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். இவரது படைப்புக்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு தரம் வாய்ந்தவையாக அமைந்து பலரது கவனைத்தையும் பெறத் தவறுவதில்லை.
இவரது நூல்கள்
நிழல்கள் - (சிறுகதைகளும் குறுநாவலும்)
இவரது படைப்புக்களில் சில
சில நேரங்களில் சில நியதிகள்
சிவப்புப் பொறிகள் (சிரித்திரன், 1986 - மூன்றாம் பரிசு)
மடமையைக் கொளுத்துவோம்
எரியும் தளிர்கள் (சிரித்திரன், 1987 - முதற் பரிசு)
தரிசு நிலத்து அரும்பு
நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் (குறுநாவல் - 1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)
முறியாத பனை
யாசகம் - சிறுகதை
பால்யம் - சிறுகதை
கேணல் கிட்டு - கவிதை
நானுன்னை இனி எங்கு தேடுவேன்? - கவிதை
புலம் பெயர்ந்த கடவுளர்கள்
2 comments:
வணக்கம்,
நல்ல ஒரு பதிவு... உங்களது பதிவுகளைத் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்... பாராட்டுக்கள்.
ஒரு கல் விக்கிரமாகிறது என்பது.. ஒரூ கல் விக்கிரகமாகிறது என்பதே சரியானது என்று எண்ணுகின்றேன்...
கரன்
நன்றி கரன்.
பாராட்டுக்களுக்கும், தவறைச் சுட்டியதற்கும். திருத்துகிறேன்.
Post a Comment