Friday, August 22, 2014

ஐசாக் இன்பராஜா (லூஸ் மாஸ்டர்)

சமூக சேவை செய்வது மட்டும் அல்ல அதை அர்ப்பணிப்புகளோடு செய்வது எல்லோருக்கும் கூடி வராது. ஒரு சிலருக்கே அது அமைகிறது.

நான் சந்தித்த அந்த ஒரு சிலரில் ஐசாக் இன்பராஜாவும் ஒருவர். அவரை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல் ஒரு சமூக சேவையாளராகவுமே நான் கணித்திருந்தேன்.

யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரச்சாரப் பகுதிக்குப் பொறுப்பாளராக நான் இருக்கும் பொழுது, ஐசாக் இன்பராஜாவுடனான எனது தொடர்பு ஆரம்பமானது. அதற்கு முன்னர் ஒரு வீடியோ கிளிப்பில் அவரது „லூஸ் மாஸ்ரர்' நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருந்தேன். ஒரு ஆசிரியரைக் கிண்டலடிக்கும் தலைப்பாகவும், நிகழ்ச்சியாகவும் அது இருந்ததால், ஆரம்பத்தில் அவரது நிகழ்ச்சியில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் அந்தக் குறை தெரியாமல், நிகழ்ச்சியை அவர் எல்லோரும் இரசிக்கும் வண்ணம் நடாத்தும் பொழுது அந்தக் குறை எனக்கும் இல்லாமல் போயிற்று.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் யேர்மனியில் வருடத்திற்கு 12 முதல் 13 நிகழ்ச்சிகளை நாங்கள் நடாத்துவோம். அநேகமாக அந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் ஐசாக் இன்பரா ஜாவினது நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று கண்டிப்பாக இருக்கும். எங்கள் நிகழ்ச்சிகள் ஒட்டு மொத்தமாக புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களது நிகழ்ச்சிகளாகவே இருக்கும். யாருமே பணம் பெற்றுக் கொள்வதில்லை. எல்லாக் கலைஞர்களும் தங்கள் கலையை தமிழர் புனர்வாழ்வுக்காகவே அர்ப்பணித்தார்கள். அதில் முதன்மையானவர் ஐசாக் இன்பரா ஜா..
வருட ஆரம்பத்திலேயே எங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் நகரங்கள், அதற்கான திகதிகளை ஒழுங்கு செய்து விடுவோம். அதன் விபரங்களை அந்தந்த நகரத் தொண்டர்களுக்குத் தெரிவிக்கும் பொழுதே ஐசாக் இன்பரா ஜாவிற்கும் அறிவித்து விடுவோம். எங்களது திகதிகளுக்கு ஏற்ப அவர் தன்னை தயார்படுத்திக் கொள்வார்.

அன்றாட செய்திகளை விமர்சித்து தங்களது நாடகங்களில் தமிழகக் கலைஞர்களான எம்.ஆர்.ராதாவும், சோவும் விமர்சனம் செய்வார்கள். ஏறக்குறைய அதே பாணியை ஐசாக் இன்பரா ஜாவும் செய்வார். மேடை ஏறும் முன்னர் அவரது கையில் ஏதாவது ஒரு பத்திரிகை இருக்கும். அல்லது அந்தப் பத்திரிகைக்குள் ஏதாவது ஒரு சஞ்சிகை குடி இருக்கும்.

„என்ன உங்கடை ஆக்கள் எல்லாரும் ரொயிலற்றுக்குள்ளை கோலா குடிக்கிறவையளே. நான் போன ஒவ்வொரு தமிழரின்ரை வீட்டு ரொயிலற்றுகளுக்குள்ளையும் ஒரு கோலா போத்தல் இருக்குது' என்று ஒரு யேர்மன்காரன் என்னைக் கேட்டவன் என்று அப்பாவியாக அவர் சொல்லும் பொழுது அதை எந்தளவுக்கு பார்வையாளர்கள் இரசித்திருக்கிறார்கள் என்பதை நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் மக்களிடம் சென்று நிகழ்ச்சிக்கு இருக்கைகளை முன் பதிவு செய்யும் பொழுது அவர்களிடம் இருந்து வரும் கேள்வி, „ஐசாக் இன்பரா ஜாவின்ரை நிகழ்ச்சி இருக்குத்தானே?'

இந்த ஒன்றே போதும் அவர் எந்தளவு மக்களைக் கவர்ந்திருக்கிறார், அவரது நிகழ்ச்சியை எந்தளவுக்கு மக்கள் இரசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள.

2003இல் எங்களுடைய நிகழ்ச்சி ஒன்று மே மாதம் நடப்பதாக இருந்தது. பார்வையாளர்களும் அதற்கான முன்பதிவுகளைச் செய்து விட்டனர். ஆனால் தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களது நிகழ்ச்சி ஒன்று குறுக்கிட்டதால் எங்களது நிகழ்ச்சியை தள்ளிப் போட வேண்டியதாயிற்று. வேறு ஒரு திகதி குறித்து மண்டபம் எடுத்து நிகழ்ச்சியை நடாத்த வெளிக்கிடும் பொழுதுதான், ஐசாக் இன்பராஜாவிற்கு அதே திகதியில் வேறு இடத்தில் நிகழ்ச்சி ஒன்று இருந்தது தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியை ஒரு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அதுவும் நாங்கள் நிகழ்ச்சி நடாத்தும் இடத்தில் இருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில்தான் அவர்களது நிகழ்ச்சியும். இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக அந்த விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட பொழுது நிகழ்ச்சிகளிலோ நிகழ்ச்சியின் திகதியிலோ அவர்கள் மாற்றம் செய்ய மறுத்து விட்டார்கள்.

„தம்பி என்னடாப்பு செய்யிறது? அவையளுக்கு முதலிலை ஓம் எண்டிட்டன். இப்ப மாட்டன் என்று சொல்லிப் போட்டு உங்கடை இடத்திலை வந்து செய்யிறது நல்லா இருக்காது.' ஐசாக் இன்பராஜாவிற்கு இருந்த சங்கடம் எனக்குப் புரிந்தது.

ஒரு கலைஞனுக்கு அதுவும் தாயகத் தமிழருக்காக வருடா வருடம் ஓடி வந்து தனது பங்களிப்பைத் தரும் ஒரு நல்லவருக்கு சிரமங்கள் தர நான் விரும்பவில்லை.

„எங்களுக்கு தேதி தந்திருந்தீங்கள். அதை நாங்கள் பயன் படுத்தவில்லை. அது எங்களின்ரை பிழை. நீங்கள் அங்கேயே போங்கோ. அதுதான் சரி. நாங்கள் அடுத்தமுறை சரியாச் செய்வோம்'

„சந்தோசம் தம்பி'

அன்றைய எங்களது நிகழ்ச்சி ஐசாக் இன்பராஜா இல்லாமலேயே நடந்தது.

நிகழ்ச்சிக்கு மறுநாள் மறக்காமல் தொலைபேசியில் கதைத்தார். தனது பங்களிப்பு அந்த நிகழ்ச்சிக்கு இல்லாமல் போனதில் அவருக்கு கவலை இருந்தது தெரிந்தது.

அடுத்த வருடம் அவரும் நானும் எதிர்பார்த்த கலை நிகழ்ச்சி நடக்கவில்லை. சில நடைமுறைகள் எனக்கு ஒத்து வராததால் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரச்சாரப் பகுதியில் இருந்து நான் வெளியேறி இருந்தேன். அந்த அற்புதக் கலைஞனின் தொடர்புகள் அத்துடன் எனக்கு நின்று போய் விட்டது.

அவரது மரணம் பெரும் சோகம்.

பற்களில் இரண்டு இல்லாமல் இருப்பது போல் காட்டுவதற்காக இரண்டு பற்களில் கறுப்பு மை பூசிக் கொண்டே மேடையில் வலம் வருவார். அந்த இரு பற்கள் இல்லாத லூஸ் மாஸ்ரரின் சிரிப்பு என்றும் மாறாது.

Isak Inparajah 31.08.1994

மூனா
01.08.2014