Monday, August 25, 2008

தாட்சாயணி (பிரேமினி )

தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.

தாட்சாயணி இலங்கையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி.

இவர் ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். இவரது கவிதை ஒன்று 1993இல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் பிரசுரமாகி பலரது கவனத்தையும் பெற்றது. ஒரு மரணமும் சில மனிதர்களும் சிறுகதைத் தொகுப்பு 2004 - ஞானம் விருது பெற்றது.

இவரது நூல்கள்
ஒரு மரணமும் சில மனிதர்களும் - சிறுகதைத் தொகுப்பு (2004)

சுல்பிகா

சுல்ஃபிகா ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் பின்னர் இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பன தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார்.

இவரது நூல்கள்
விலங்கிடப்பட்ட மானிடம் (1994)

சித்திரலேகா மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

இவரது நூல்கள்
சொல்லாத சேதிகள்
சிவரமணி கவிதைகள்
உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

கோகிலம் சுப்பையா

கோகிலம் சுப்பையா இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர்.

இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் (1947) பதுளை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் மூலமே மலையக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டவர். 1956ல் செக் நாட்டில் நடைபெற்ற உலகப் பெண் தொழிலாளர்களின் மகாநாட்டில், மலையகப்பெண்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அங்கே தமிழ் அறிஞரான பேராசிரியர் Kamil Zvelebil அவர்களைச் ச்ந்திக்க நேர்ந்ததினால் அவரின் ஆலோசனைப்படி தனது தூரத்து பச்சை நாவலை எழுதத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார். 1965 இல் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இந்த நாவல், Mirage என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. பல கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரது நூல்கள்
தூரத்துப் பச்சை (நாவல்)
Mirage தூரத்துப்பச்சை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு )

இவரைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் (ஆங்கிலத்தில்)

Tuesday, August 05, 2008

வாசுகி கணேஷானந்தன்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவின் ஹார்வார்ட் கல்லூரியில் பயின்று தற்போது நியூயோர்க்கில் வசித்துவருபவருமாகிய இளம் பெண் எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தன் 'லவ் மேரேஜ்'( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் வெளியான இந்த ஆங்கில நாவல் இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று.

இலங்கை இனப்பிரச்சினையை பின்புலமாகக் கொண்டு கடந்த ஒரு சில தசாப்தங்களில் எழுதப்பட்ட சில நாவல்கள் வரிசையில் இதுவும் வருகிறது.

கதை அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண்ணான யாழினியையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகாலம் போராளியாக இருந்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் வாழ்க்கையின் இறுதி நாட்களில், கனடாவுக்கு செல்ல புலிகளால் அனுமதிக்கப்படும் அவரது மாமா குமரன் ஆகியோரையும் சுற்றிச் சுழல்கிறது.

இந்தக் கதை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை, ஆயுதப்போராட்டம், இனப் பிரச்சினையின் சமூகத்தாக்கம் ஆகியவற்றை வாசுகி ஆராய்கிறார்.